Wednesday, April 21, 2010
எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம்
திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
வழங்கும் மகாகவி பாரதியார் பற்றிய இலவச அஞ்சல் வழிப்பயிற்சி - பாடம்
எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம்
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாருக்கு நினைவுச் சின்னமாக ஓர் மணிமண்டபம் எழுப்பப்பட்டது. அந்த மணிமண்டபம் கட்டுவதற்காக எழுத்தாளர் அமரர் கல்கி அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி அதனைத் தொடர்ந்து அவரது அயராத உழைப்பு, இவற்றின் பயனாக இன்று மகாகவி பாரதியார் பிறந்த எட்டயபுரம் மண்ணில் அந்த மணிமண்டபம் பாரதி புகழ் பாடிக் கொண்டிருக்கிறது.
அன்றைய தினம் மேற்கு வங்காளத்தில் கவர்னராக இருந்த சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் இந்த மணிமண்டபத்தினை திறந்து வைத்தார்கள். கல்கி அவர்கள் இந்த மணிமண்டபத்தைக் கட்டுவதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து, ஒவ்வொரு கட்டத்திலும் மணிமண்டபப் பணிகள் எந்த அளவு நிறைவேறியுள்ளது என்பதையும் கேட்டறிந்து, தனது பணிகளுக்கிடையே எட்டயபுரம் வந்து இந்த மணிமண்டபத்தை ராஜாஜி அவர்கள் திறந்து வைத்த நிகழ்ச்சி பற்றி கல்கி தனது பத்திரிகையில் எழுதி வந்திருக்கிறார். பொதுவாக பத்திரிகைகளில் எழுதப்படும் கட்டுரைகள், தலையங்கங்கள் அந்தந்த காலத்துக்கு ஏற்றதாக மட்டுமே அமையும். ஆனால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி அவர்கள் எழுதியுள்ள தலையங்கங்கள் இன்றைக்கும் படித்துச் சுவைக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. அப்படி கல்கி அவர்கள் மகாகவி பாரதி மணிமண்டபம் பற்றி எழுதிய தலையங்கங்கள் ஒரு முழு நூலாக வெளிவந்திருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகளை இந்த பாடத் திட்டத்தின் நிறைவுப் பகுதியாக வெளியிட்டு, மகாகவிக்கும் அவரது நினைவாக மணிமண்டபம் எழுப்பிய கல்கி அவர்களுக்கும், அதில் ஆர்வம் காட்டி மண்டபத்தைத் திறந்து வைத்த ராஜாஜி அவர்களுக்கும் நமது நன்றியறிதலை உரித்தாக்குகிறோம்.
புதுச்சேரி வைபவம் (1945 செப்டம்பர் 23ம் தேதி கல்கி இதழ் தலையங்கம்)
நாளது செப்டம்பர் மாதம் 11ம் தேதியன்று மகரிஷி வ.வெ.சு.ஐயர், மகாகவி பாரதியைத் தேடிச் சென்று, "பாரதி! இன்றைக்கு நீர் அமரரான தினம்; ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டார்.
"ஞாபகம் இருக்கிறது; அதற்காக என்ன செய்ய வேண்டும்?" என்றார் பாரதி.
"தமிழகத்துக்குப் போய்விட்டு வரலாமே!" என்றார் ஐயர்.
"எதற்காக?" என்று கேட்டார் பாரதி.
"எதற்காகவா? தமிழ்நாட்டின் சரித்திரத்தில் இந்த வருஷம் ரொம்ப விசேஷமான வருஷமாயிருக்குமென்று தோன்றுகிறது. தமிழுக்கும் தமிழ்க்கவிகளுக்கும் ஒரேயடியாக யோகம் பிறந்து விட்டதாய் பூலோகத்திலிருந்து புதிதாய் வந்தவர்கள் எல்லோரும் சொல்லுகிறார்கள். இது உண்மையானால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஏக அமர்க்களமாய் இருக்க வேண்டுமல்லவா? என்னதான் நடக்கிறதென்று பார்த்துவிட்டு வருவோமே!" என்றார் ஐயர்.
"ஐயரே! வெறும் வதந்திகளை நம்புவதில் உமக்கு இணை யாருமில்லை. பாமரராய், விலங்குகளாய், செவிடர்களாய், குருடர்களாய் நாம் விட்டுவிட்டு வந்த தமிழர்களுக்கு இந்த வருஷத்தில் திடீரென்று தமிழன்பும் ரசிகத் தன்மையும் எப்படி உண்டாகிவிடும்?" என்று கேட்டார் பாரதியார்.
"பாரதி! வதந்திகளை நம்பி உம்மை நான் அழைக்கவில்லை. உம்முடைய கவிதைகளில் ததும்பும் ஜீவசக்தியில் பூரண நம்பிக்கை எனக்கு உண்டு. உம்முடைய கவிதைகள் தமிழ் மக்களின் சமுதாயத்தில் ஒரு புதிய சக்தியை ஊட்டும் என்ற அழியா நம்பிக்கை கொண்டவன் நான். அந்த நம்பிக்கையினால்தான் உம்மை அழைக்கிறேன். எப்படியிருந்தாலும் நமது தெய்வத் தமிழ்நாட்டை ஒரு தடவை சுற்றிப் பார்த்து வருவதில் உமக்கு என்ன ஆட்சேபணை?" என்றார் ஐயர்.
"அதற்கு ஆட்சேபம் இல்லை. கிளம்புங்கள், போகலாம்!" என்று பாரதியார் மீசையை முறுக்கிக் கொண்டு புறப்பட்டார்.
வான வீதி வழியாகத் தமிழ் நாட்டின் பல இடங்களையும் பார்த்துக்கொண்டு வந்தார்கள். பட்டணங்கள், கிராமங்கள் எங்கே பார்த்தாலும் பாரதி விழா நடைபெறுவதையும் பாரதி பாடல்கள் முழங்குவதையும் கேட்டுக்கொண்டு வந்தார்கள். எந்தக் கூட்டத்தில் நின்று கேட்டாலும், தமிழின் பெருமையையும் தமிழ் நாட்டின் பெருமையையும் பற்றிப் பெருமிதத்துடன் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.
கடைசியாக, இருவரும் புதுச்சேரி நகரத்துக்கு மேலாக வந்து சேர்ந்தார்கள். பிரிட்டிஷ் கொடுஞ் சிறையிலிருந்து தப்புவதற்காகப் பல வருஷ காலம் தாங்கள் 'வனவாசம்' போன்ற வாழ்க்கை நடத்திய அந்நகரத்தைக் கண்டதும் அவர்களுக்குப் பெரிதும் உற்சாகம் உண்டாயிற்று. அவர்களுக்குப் பழக்கமான இடங்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வந்தபோது ஒதியஞ்சாலை மைதானத்துக்கு மேலாக வந்து சேர்ந்தார்கள். மைதானத்தில் ஏகக் கூட்டமாயிருந்தது. சுமார் பத்தாயிரம் ஜனங்கள் இருக்கலாம். அந்தப் பெரும் ஜனக் கூட்டத்தின் ஒரு பக்கத்தில் அழகான அலங்காரப் பந்தலும் அதனடியில் உபந்நியாச மேடையும் காணப்பட்டன. மேடையின் இரு புறங்களிலும் புதுச்சேரிப் பிரமுகர்கள் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள்.
"ஐயரே! இங்கே என்ன வைபவம் நடக்கிறது?" என்று பாரதியார் கேட்டார்.
"சந்தேகம் என்ன? இங்கேயும் பாரதி விழாக் கொண்டாட்டந்தான் நடக்கிறது/"
"இவ்வளவு ஜனக் கூட்டமும் பாரதிக்காகக் கூடியிருக்கிறது என்றா சொல்கிறீர்?"
"ஆமாம்!"
"இதோ மேடை மீது அக்கிராசன நாற்காலியில் அமர்ந்திருப்பது யார். நமது பழைய நண்பர் எஸ்.துரைசாமி ஐயரா?"
"அவரேதான்"
"இதோ அவருக்கு மாலை கொண்டு வந்து போடுகிறாரே, முறுக்கு மீசைக்காரர் அவர் யார்?"
"தெரியவில்லையா? 'ராஜா பகதூர்' என்று அழைப்பீரே, அந்த ராஜாபாதர் முதலியார்தான்."
"நிஜமாக இவ்வளவு கூட்டமும், இந்தப் பத்தாயிரம் ஜனங்களும் எனக்காகவா கூடியிருக்கிறார்கள்? பார்த்துச் சொல்லும்?"
"சந்தேகமே இல்லை பாரதி! அது மட்டுமல்ல. இவர்கள் எல்லோரும் எதற்காகக் கூடியிருக்கிறார்கள், தெரியுமா? புதுச்சேரியில் உம்முடைய ஞாபகார்த்தமாக ஒரு மண்டபம் கட்ட வேண்டுமாம். அதற்காகப் பணம் வசூல் செய்யப் போகிறார்களாம்."
இவ்விதம் ஐயர் சொன்னதும் பாரதியார், "பாண்டியா! ஆச்சரியத்தினால் மூர்ச்சையடைந்து விழவேண்டிய சந்தர்ப்பம் ஒன்று உண்டு என்றால், அது இதுதான்! அது இதுதான்! அது இதுதான்!" என்று கூறிய வண்ணம் மூர்ச்சையடைந்து விழப்போனார். அவரை ஸ்ரீ வ.வெ.சு.ஐயர் தமது வலிவுள்ள இரு புஜங்களாலும் தாங்கிக் கொண்டு, "பாரதி! வேண்டாம்! ஆச்சரியத்தினால் மூர்ச்சையடைய வேண்டிய தருணம் இது அல்ல. ஏனெனில், நம்முடைய காலத்திற்குப் பிறகு தமிழ்நாடு எவ்வளவோ மாறுதல் அடைந்து விட்டது. அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம்! அதிலும் நாளது 1945-ஆம் வருஷம் தமிழ்நாட்டின் சரித்திரத்திலேயே மிக முக்கியமான வருஷமாகப் போகிறது. இந்த வருஷத்தில் தமிழ் மக்கள் தமிழ்க் கவிகளை அமோகமாய் போற்றும் சம்பிரதாயம் ஏற்பட்டிருக்கிறது!" என்றார்.
மேற்கண்ட விதமாக பாரதியாரும் வ.வெ.சு.ஐயரும் தங்களுடைய சூக்ஷும சரீரத்தில் உண்மையாகவே வந்திருப்பார்களா, வந்திருந்தாலும் மேற்சொன்னவாறு சம்பாஷித்திருப் பார்களா என்று நேயர்கள் சந்தேகப்படலாம். இதைப்பற்றி நான் நிச்சயமாக உறுதி கூறுவதற்கில்லை. ஆனால் எனக்கென்னவோ செப்டம்பர் மாதம் 11ம் தேதி புதுச்சேரி ஒதியஞ்சாலை மைதானத்தில் கூடியிருந்த மாபெரும் ஜனத்திரளைப் பார்த்ததும் ஒரே வியப்பாய்த்தான் போய்விட்டது. இந்த வருஷத்தில் இம்மாதிரி ஆச்சரிய சம்பவங்கள் மேலும் மேலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன. முதலில் எட்டயபுரம் அஸ்திவார விழா, அப்புறம் நாமக்கல் கவிஞர் நிதியளிப்பு வைபவம், கடைசியாகப் புதுச்சேரியில் இந்த மாபெரும் வைபவம்.
காலஞ்சென்ற ஒரு கவியைப் பாராட்டுவதற்காகத் தமிழ்நாட்டில் ஓரிடத்தில் பத்தாயிரம் ஜனங்கள் கூடினார்கள்; அவர்களில் இரண்டாயிரம் பேர் ஸ்திரீகள்; அவ்வளவு பேரும் மாலை 6 மணியிலிருந்து இரவு பத்து மணி வரையில் இருந்து பிரசங்கமாரியில் நனைந்துவிட்டுப் போனார்கள் என்றால், அது சென்ற 1944ம் வருஷம் வரையில் நம்பக்கூடாத காரியமாகவே கருதப்பட்டிருக்கும். இந்த வருஷத்திலேகூட நானே மேற்படி வைபவத்துக்குப் போய் நேரில் பார்த்திராவிட்டால் நம்புவது கஷ்டமாகத்தானிருந்திருக்கும்.
மேற்படி விழா சம்பந்தமான இன்னொரு ஆச்சரிய சம்பவம், ஏறக்குறைய நம்பத்தகாத விஷயம் என்னவெனில் அரவிந்த ஆசிரமவாசியான ஸ்ரீ எஸ்.துரைசாமி ஐயர் அவர்கள் கூட்டத்துக்கு அக்கிராசனம் வகித்ததுதான்.
இக்காலத்தில் புதுவைக்கு உலகப் பிரசித்தி அளித்திருக்கும் மகான் அரவிந்தரின் ஆசிரமத்துக்குள் ஒரு முறை பிரவேசித்தவர்கள் மறுபடி திரும்பி வெளியில் வருவதே இல்லை என்று நான் கேள்விப்பட்டிருந்தேன்!
ஆகவே புதுச்சேரி நண்பர்கள் என்னை வந்து பாரதி விழாவுக்கு அழைத்தபோது, நடக்காத காரியத்தைச் சொல்வதாகவே நினைத்துக் கொண்டு, ஸ்ரீ எஸ்.துரைசாமி ஐயர் கூட்டத்துக்குத் தலைமை வகித்தால் பொருத்தமாயிருக்கும் என்று சொல்லி வைத்தேன். நாலு நாளைக்கெல்லாம் புதுச்சேரியிலிருந்து வந்த பாரதி விழா விளம்பரத்தில் "ஸ்ரீ எஸ்.துரைசாமி ஐயர் தலைமையில் நடைபெறும்" என்று பார்த்ததும், மேக மண்டலம் வரையில் என்னைத் தூக்கி வாரிப் போட்டது!
பல்லாயிரக்கணக்கான வருமானமுள்ள பிரசித்த ஸிவில் லாயராயிருந்த ஸ்ரீ எஸ்.துரைசாமி ஐயர் மேற்படி தொழிலையும், வருமானத்தையும் வீடு வாசலையும் துறந்து வானப்பிரஸ்தராகி அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்தார் என்ற செய்தியை நாலைந்து வருஷங்களுக்கு முன் கேட்டபோது, அவரை அறிந்த சென்னை வாசிகள் எல்லாம் இராமரைப் பிரிந்த அயோத்திவாசிகளின் நிலையை அடைந்திருந்தார்கள். மகாகவி பாரதியாரின் அத்தியந்த நண்பர்களில் ஸ்ரீ எஸ்.துரைசாமி ஐயர் ஒருவர். பாரதியாரின் ஞாபகார்த்தமாக ஏதேனும் ஒரு ஸ்தாபனம் நிறுவ வேண்டும் என்னும் யோசனையை முதன் முதலில் வெளியிட்டவர் ஸ்ரீ எஸ்.துரைசாமி ஐயர்தான். பத்து வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீ எஸ்.துரைசாமி ஐயர் அளித்த ஆரம்ப நன்கொடையுடன் 'பாரதி சங்கம்' என்று சென்னையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் சரியான காலம் வந்து சேராதபடியால் மேற்படி சங்கம் நீடித்து நடைபெறவில்லை.
ஸ்ரீ எஸ்.துரைசாமி ஐயர் பாரதியாரிடம் கொண்டிருந்த அன்பைக் குறித்து இவ்வளவு எனக்குத் தெரிந்திருந்த போதிலும், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்துக்குள்ளிருந்து வெளிவந்து அவர் பொதுக் கூட்டத்துக்குத் தலமை வகிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பாரதியார் விஷயத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடந்தது போல் இந்த எதிர்பாராத அதிசயமும் நடக்கத்தான் நடந்தது. இந்த அதிசயத்தைப் புதுச்சேரி வாசிகள் நன்கு அனுபவித்து ஆனந்தித்தார்கள் என்பது கூட்டத்தில் நன்கு தெரிய வந்தது.
தமக்குத் தமிழ் பேசி வழக்கமில்லை, பேசத் தெரியாது, பேச முடியாது என்ற அவை அடக்கத்துடன் அக்கிராசனர் ஸ்ரீ எஸ்.துரைசாமி ஐயர் ஆரம்பித்து அழகான தமிழில் ஆவேசத்துடன் பேசினார். வித்வான் சிவப்பிரகாசம் அவர்கள் தமிழ்ப்புலமை ததும்பிய நடையில் பாரதியார் கவிகளின் மேன்மையை எடுத்துரைத்தார். இந்த வைபவத்துக்காகவே வந்து சேர்ந்தது போல் முதல் நாள்தான் தேசப் பிரஷ்ட உத்தரவு நீங்கிப் புதுவைக்கு வந்து சேர்ந்திருந்த தொழிலாளர் தலைவர் ஸ்ரீ வ.சுப்பையா அவர்கள் "பாரதியார் பொதுவுடைமைக் கவிஞர்; பாட்டாளி மக்களின் விடுதலையைப் பாடிய கவிஞர்" என்பதை எடுத்துரைத்தார். 'ஜனசக்தி' உதவி ஆசிரியர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் வீராவேசம் மிகுந்த பிரசங்கம் செய்தார். ஸ்ரீ எஸ்.ஏ.வேதநாயக ஐயா அவர்கள் வைதிகக் காங்கிரஸ் வாதிகளின் சார்பாக ஆசி கூறினார். கடைசியில் நானும் பேசினேன். இவ்வளவு பிரசங்கங்களையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்ததிலேயே அந்தப் பத்தாயிரம் புதுவைவாசிகளின் பாரதி அபிமானம் நன்கு வெளியாயிற்று.
புதுச்சேரியில் காலையில் எழுந்ததும் ஒருவன் பல் தேய்க்க வேண்டுமென்றால் அதற்குக்கூட சர்க்கார் உத்தரவு வேணும்! அப்பேர்ப்பட்ட ஊரில் பொதுக்கூட்டத்தில் ஒலிபெருக்கி வைப்பதற்கு உத்தரவு இல்லாமல் சரிப்படுமா? மேற்படி உத்தரவை கவர்னரிடம் பெற்று வருவதற்காக நிர்வாகிகள் அன்று எடுத்துக் கொண்ட பெரும் பிரயாசையையும் கடைசியில் கூட்டம் ஆரம்பித்துச் சிறிது நேரத்துக் கெல்லாம் ஒலிபெருக்கிக்குக் 'கரண்ட்' வந்ததையும் பார்த்த பிறகு அவர்களால் சாதிக்கமுடியாத காரியம் எதுவுமே இல்லையென்று கருதினேன்.
புதுச்சேரி, எட்டையபுரத்தைப் போல் சிறு கிராமம் அல்ல. பெரிய நகரம். செல்வந்தர்களும் பிரபல வர்த்தகர்களும் வசிக்கும் நகரம். விழிப்படைந்து கட்டுப்பாடு பெற்ற பதினாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசிக்கும் நகரம். எனவே புதுச்சேரியில் பாரதி ஞாபக மண்டபம் கட்டுவதற்குப் புதுச்சேரியிலேயே பெருநிதி வசூலாக வேண்டியது அவசியம். ஆனாலும் மேற்படி முயற்சியில் தமிழ்ப் பொதுமக்களும் பங்கு பெறுவதற்கு நியாயமும் உரிமையும் உண்டு.
எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். ஆனால் பாரதியாரின் கவிதைகள் பெரும்பாலும் புதுவை நகரில் பிறந்தன.
எனவே, தமிழ்நாட்டிலுள்ள தேசபக்தர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் எட்டையபுரத்தைப் போலவே புதுச்சேரியும் புனித யாத்திரை ஸ்தலமாகும். பாரதியாருக்குத் தஞ்சமளித்த புதுச்சேரியில் பாரதியார் ஞாபகார்த்த மண்டபம் கட்ட வேண்டியது மிகவும் அவசியம்.
எட்டயபுரத்தில்! (1945 செப்டம்பர் 9ம் தேதி கல்கி பத்திரிகையில் வெளியானது)
ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர் பிறந்த 'ஸ்ட்ராட்ஃபோர்டு ஆன் ஏவான்' எனும் கிராமத்தில் அந்தக் கவியின் ஞாபகார்த்தமாக ஒரு நாடக அரங்கம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஷேக்ஸ்பியர் தினத்தில் பல்லாயிரக்கணக்கான ஆங்கில மக்கள் அந்த நாட்டின் பல பாகங்களிலிருந்தும் திரண்டு வந்து அங்கே திருவிழா நடத்துகிறார்கள்.
நிசப்தமாய் அமைதி குடிகொண்டு விளங்கும் அந்தப் பிரதேசம் அப்போது ஜனக்கூட்டம் நிறைந்து ஒரே கோலாகலமாயிருக்கும். புள்ளினங்களின் இனிய கானம் கேட்டுக் கொண்டிருந்த இடத்தில் காது செவிடுபடும்படியான வாத்திய முழக்கங்கள் கேட்கும். அரங்க மேடையில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடிப்பார்கள். பிரசங்க மேடையில் ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பற்றிப் பேசுவார்கள்.
இந்த மாதிரியெல்லாம் ஆங்கில மக்கள் தங்களுடைய கவியைப் போற்றுகிற படியினாலேதான் சமீபத்தில் அவர்களுக்கு நேர்ந்த பெரும் விபத்தைக் கடந்து முடிவில் ஜயபேரிகை முழக்குதல் சாத்தியமாயிற்று.
பழம்பெரும் மக்களான தமிழர்கள் வருங்காலத்தில் மகோன்னத நிலையை அடையப் போகிறார்கள் என்பதற்குப் பல அறிகுறிகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று நம்முடைய நாட்டுக் கவிஞர்களை நாம் போற்ற ஆரம்பித்திருப்பதுதான்.
சென்ற 1944-ம் வருஷம் இதே செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் எட்டயபுரத்தில் பாரதி இலக்கிய மன்றத்து நண்பர்கள் ஒரு மகாநாடு கூட்டினார்கள். பாரதியார் பிறந்த ஊரில் அந்த மகாகவிக்கு ஒரு ஞாபகச் சின்னம் எழுப்ப வேண்டுமென்று அம்மகாநாட்டில் பிரஸ்தாபித்தார்கள். அந்த வேண்டுகோளைக் 'கல்கி'யின் மூலம் வெளியிட்டபோது, இலங்கை முதல் லாகூர் வரையில் உள்ள தமிழர்கள் மேற்படி யோசனையை உற்சாகமாக ஆதரித்துப் பொருளுதவி பொழிந்தார்கள். இவ்வருஷம் ஜூன் 3ம் தேதியன்று மிகச் சிறப்பாக அஸ்திவார விழாவும் நடந்தது.
ஞாபக சின்னக் கட்டிடத்துக்கு ஒரு பிளான் போட்டுக் கொடுக்கும்படியாக கட்டிடச் சிற்ப நிபுணர் ஸ்ரீ சித்தலே என்பவரைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அஸ்திவார விழாவில் வைப்பதற்காக முதலில் கட்டிடச் சித்திரம் அவர் வரைந்து கொடுத்தார். விழாவுக்கு அவரும் வந்திருந்து, கட்டிடம் கட்டப்போகும் இடம் சுற்றுப்புறம் முதலியவற்றைப் பார்த்துவிட்டு அளவுகள் முதலிய விவரங்கலுடன் பிளான் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
கட்டிடம் அழகாகவும் அமைய வேண்டும், அதோடு சீக்கிரமாகவும் அமைய வேண்டும். அடுத்த பாரதி தினக் கொண்டாட்டம் வருவதற்குள் கட்டிடத் திறப்பு விழாவும் நடந்துவிட வேண்டும். இது நம்முடைய ஆசை. இந்த ஆசை நிறைவேறலாம் என்பதற்கு நல்ல சகுனங்கள் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அவற்றில் முக்கியமானது எட்டயபுரம் ராஜா அவர்கள் தமது சொந்த மேற்பார்வையில் கட்டிடத்தைத் துரிதமாகவும் நல்ல முறையிலும்கட்டிக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பதுதான்.
மகாராஜா அவர்களின் மேற்பார்வையில் கட்டிட அஸ்திவார வேலை ஆரம்பமாகி ஏறக்குறையத் தரை மட்டத்திற்கு வந்திருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தமிழ் மக்களுக்கு அறிவித்துக் கொள்கிறேன்.
எட்டயபுரத்தைப் பற்றி இன்னும் ஒரு சந்தோஷமான விஷயத்தையும் இந்தச் சமயத்தில் நேயர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பாரதி ஞாபகார்த்த நிதி வசூலாகிக் கொண்டு வந்தபோது, எட்டயபுரத்திலிருந்து சில கையெழுத்தில்லாக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. 'நடுவிற்பட்டி பாரதி வாசகசாலை' என்ற பெயருள்ள ஒரு ஸ்தாபனம் அங்கு இருப்பதாகவும், இவர்கள் பாரதி ஞாபகார்த்தமாக ஸ்ரீமதி கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் சங்கீதக் கச்சேரி வைத்து மகாராஜா அவர்களின் ஆதரவுடன் பணம் வசூலித்ததாகவும், அந்தத் தொகை டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் இருப்பதாகவும் மேற்படி கடிதங்களின் மூலம் தெரியவந்தது.
இதற்கும் நமது ஞாபகார்த்த முயற்சிக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை யென்று தீர்மானித்து மேற்படி கடிதங்களைப்பற்றி நான் கவலைப்படாமல் இருந்தேன். ஆனால் அஸ்திவார விழாவெல்லாம் நடந்து சென்னைக்குப் புறப்படுகிற சமயத்தில் எட்டயபுரம் மகாரஜா அவர்களின் முன்னிலையில் மேற்படி டாக்டர் சீனிவாசன் என்னிடம் ஒரு மூடிய கவரைக் கொடுத்தார். வழியில் கவரைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ரூ.1591 இருந்தது. இவ்வளவு பெருந்தன்மையுடன் பெரிய முயற்சியில் சந்தோஷத்துடன் கலந்து கொள்ளத் தீர்மானித்துக் காரியம் செய்த சீனிவாசன் அவர்களுக்கும், மற்றும் மேற்படி நடுவிற்பட்டி பாரதி வாசகசாலையைச் சேர்ந்த அன்பர்களுக்கும் என் மனமார்ந்த வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு கவர்னர்கள் (1947 ஆகஸ்ட் 10ம் தேதி கல்கியில் பிரசுரமான கட்டுரை)
வாழ்க பாரதியார்! வாழ்க அவர் மணிவாக்கு! தேசம் அன்னிய அதிகார வர்க்கத்துக்கு அடிமைப்பட்டு நாலா பக்கமும் அந்தகாரம் சூழ்ந்திருந்த காலத்தில் நம் கவியரசர் பாரதியார் பூரண சுதந்திரக் கனவு கண்டார்! "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!" என்றார். "இந்தப் பூமியில் எவர்க்கும் அடிமை செய்யோம்!" என்றார். "இந்த ஜன்மத்திலே விடுதலை உண்டு" என்று சொன்னதோடு திருப்தியடைய வில்லை, "விடுதலை உண்டு, நிலை உண்டு!" என்று அழுத்தமாகயும் திருத்தமாயும் கூறினார்.
அத்தகைய தீர்க்கதரிசியின் ஞாபகார்த்த மண்டபத் திறப்பு விழா 'சுதந்திர இந்தியா'வில் நடக்க வேண்டும் என்று ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பெரிய இந்திய மாகாணங்களின் இரண்டு சுதந்திர கவர்னர்கள் வந்து மேற்படி திறப்பு விழாவை நடத்த வேண்டுமென்றும் ஏற்பட்டிருக்கிறது. "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!" என்ற பாரதியார் மணிவாக்குப் பரிபூரணமாக நிறைவேறும் வண்ணம் கவியரசி சரோஜினி 'ஹர் எக்ஸலென்ஸி கவர்னர்' ஆகி உத்தியோகம் பார்த்த பிற்பாடு, பாரதியார் மணிமண்டபத்தின் திறப்பு விழா எட்டயபுரத்தில் நடைபெற வேண்டுமென்று ஏற்பட்டிருக்கிறது.
பாரதி மண்டபத் திறப்பு விழாவுக்காக நாம் அழைத்திருந்த ராஜாஜி, கவியரசி இருவருக்கும் கவர்னர் உத்தியோகம் ஆன விந்தைச் செய்தியை நேயர்கள் பத்திரிகைகளிலே படித்து மகிழ்ந்து குதூகலித்திருப்பார்கள். இது காரணமாகச் சில பத்திரிகைகளில் வெளியான தவறான செய்தியைக் கண்டு சில நண்பர்கள் ஒரு நாள் - இருபத்து நான்கு மணி நேரம் - கலவரமும் அடைந்திருக்கக்கூடும். "ராஜாஜியும் சரோஜினியும் திறப்பு விழாவுக்கு வரமாட்டார்கள்" என்ற செய்தியைத்தான் குறிப்பிடுகிறேன். வருவார்கள். கட்டாயம் வருவார்கள். ஆனால் செப்டம்பரில் வருவதற்குப் பதில் அக்டோபரில் வருவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜாஜி மேற்கு வங்காளத்துக் கவர்னர் ஆகலாம் என்ற செய்தி வந்த அதே தினத்தில் ராஜாஜியிடமிருந்து திறப்பு விழாத் தேதி சம்பந்தமாகத் தந்தி வந்தது. "பாரதி மண்டபம் திறப்பு விழாவின் தேதியைத் தள்ளிப்போட அவசியம் நேர்ந்திருப்பது பற்றி வருந்துகிறேன். ஸ்ரீமதி சரோஜினி தேவிக்கு லக்னெளவிலும் எனக்குக் கல்கத்தாவிலும் வேலை ஏற்பட்டிருக்கிறது. திறப்பு விழாவை அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வைத்துக்கொள்ள வேணுமென்று ஸ்ரீமதி சரோஜினி தேவி கோருகிறார்கள்" என்பது தந்தியின் சாராம்சம். பாரதி மண்டபத் திறப்பு விழாவை ராஜாஜி எவ்வளவு முக்கியமானதென்று கருதுகிறார்கள் என்பதை மேற்படி தந்தியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மறுபடியும் யோசனை செய்து திறப்பு விழாவுக்கு அக்டோபர் மாதம் 12, 13ம் தேதிகளை ராஜாஜி அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். *கவியரசியும் மேற்படி தேதிகளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
(*கவிக்குயில் ஸ்ரீமதி சரோஜினி தேவி கவியரசருக்குத் தமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள எவ்வளவோ ஆசைப்பட்ட போதிலும், அப்போதுதான் ஐக்கிய மாகாண (இப்போதைய உத்தரப் பிரதேசம் உள்ளிட்டவை) கவர்னர் பதவியை ஏற்றிருந்த அவர் தமது அலுவல்கள் பலவற்றையும், குறிப்பாக அகதிகள் பிரச்சினையை - கவனிக்க வேண்டியிருந்ததால் விழாவுக்கு நேரில் வரமுடியாமலே போய்விட்டது. எனினும் வாழ்த்து மடல் அனுப்பி வைத்து விழாவினைச் சிறப்பித்தார்கள்)
இவ்விதம் திறப்பு விழாத் தேதி ஒரு மாதம் தள்ளிப்போடப்பட்டது. விழாவை நடத்தும் பொறுப்பேற்றவர்களுக்கும் செளகரியந்தான் என்பதையும் குறிப்பிட்டு வைக்கிறேன். சாவதானமாக யோசித்துச் சிறந்த முறையில் திறப்பு விழாவுக்குரிய சகல ஏற்பாடுகளையும் செய்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஒத்திப்போட்ட வைபவம் ஒன்றுக்கு மூன்று மடங்கு சிறப்பாக நடக்கும் என்று தமிழன்பர்கள் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
சென்ற முறை பாரதியார் ஞாபகார்த்த நிதி வசூல் நடத்தியபோது, எந்த இடத்திலும் யாரையும் பார்க்கப் போகவில்லை. நாடெங்கும் உள்ள தமிழன்பர்கள் அவரவர்களே போட்டியிட்டுக் கொண்டு பணம் அனுப்பினார்கள். சிலர் வசூலித்தும் அனுப்பினார்கள். இந்தத் தடவை திறப்பு விழாவுக்குத் தேதி குறிப்பிட்டு விட்ட படியாலும், அதற்குப் பிறகு நிதி வசூலை நீடித்து நடத்த விருப்பமில்லாத படியாலும் நில முக்கியமான ஊர்களுக்கு நிதி வசூல் செய்ய நேரில் போகலாமென்று எட்டயபுரம் பாரதி மன்றத்தார் யோசனை சொன்னார்கள். அதை நானும் ஒப்புக்கொண்டேன். பாரதி மன்றத் தலைவர் ஸ்ரீ கந்தசாமி செட்டியாரும் நானும் இராஜபாளையத்தின் பழம்பெரும் தேசபக்தரான ஸ்ரீ சின்ன வெங்கடராஜா அவர்களும் வசூலுக்குப் புறப்பட்டோம்.
மேற்படி நிதி வசூல் யாத்திரையில் நாங்கள் அடைந்த அனுபவம் அற்புத அனுபவமாயிருந்தது. சென்ற இடங்களிலெல்லாம் முகமலர்ச்சியுடன் பளிச்சுப் பளிச்சென்று பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள். எண்ணிக் கொடுத்தார்கள்; எண்ணாமலும் கொடுத்தார்கள்.
ஜமீன்தார்கள் தங்களுடைய வருங்கால நிலைமை என்னவோ என்று கவலைப்படக்கூடிய காலமல்லவா இது? அப்படிப்பட்ட நிலையிலும், வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெருந்தகையான சேத்தூர் ஜமீன்தார் அவர்கள் பாரதியாரே நேரில் வந்துவிட்டது போல் எங்களுக்கு வரவேற்பும், விருந்தும் அளித்து, பாரதியார் பாலராயிருந்தபோது தமது சமஸ்தானத்திலும் சில நாள் வளர்ந்ததைப் பெருமையுடன் எடுத்துச் சொல்லி ரூபாய் ஆயிரத்தொன்று ரொக்கமும் கொடுத்தனுப்பினார்கள்.
ஊத்தமலையின் இளம்பிள்ளை ஜமீன்தார் ஸ்ரீ என்.எச்.எம்.பாண்டியன் அவர்களும் பாரதியார் விஷயத்தில் அபார உற்சாகத்தைக் காட்டினார்கள். ராஜபாளையத்தின் முதல் நன்கொடை நமது மாஜி மந்திரி ஸ்ரீ பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களுடையது. தேசபக்திக்கும் வேட்டை நாய்க்கும் பெயர்போன ராஜபாளையத்தில் நாங்கள் அடைந்ததை ஒரு தனி அனுபவம் என்றே சொல்ல வேண்டும். நிதி வசூலுக்காக நாங்கள் புகுந்த வீடு எதிலும் வேட்டை நாயைக் காணவில்லை. அன்பாக வரவேற்று, உபசரித்து விஷயத்தைச் சொன்ன உடனேயே வெற்றிலைப் பாக்குத் தட்டில் பணத்தை வைத்து இரண்டு கையாலும் அதனை எடுத்துக் கொடுத்தார்கள்.
இப்படி எத்தனையோ ரஸமான விவரங்கள் சொல்வதற்கு இருக்கின்றன. இடமின்மையால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
இதோ ஒரு அற்புதம்! (1947 அக்டோபர் 12ம் தேதி கல்கி இதழின் தலையங்கம்.
நம் கண்முன்னே இதோ ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கிறது! அதுவும் நமது செந்தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது. தேச மகாகவிக்கு ஒரு ஞாபகச் சின்ன மண்டபம் இதோ எழுந்திருக்கிறது! தமிழ் நாட்டுக்குப் புத்துயிர் அளித்த கவியரசருக்குத் தமிழ் மக்கள் சமர்ப்பித்த காணிக்கை இதோ காணப்படுகிறது! இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு மகாகவிக்கு ஞாபகார்த்த மண்டபம் கட்டிய பெருமையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது.
இதோ அமரர் பாரதியார் ஆகாசத்தில் வந்து நிற்கிறார். "தலை நிமிர்ந்து நில்" என்றும், "மார்பை நிமிர்த்தி நட!" என்றும் தம் வாணாளெல்லாம் உபதேசித்த தீர மகாகவி முதன் முதலாகத் தலை குனிந்து நோக்குகிறார். அழகிய சிறு கோபுரம் அமைந்த அற்புத மண்டபத்தைப் பார்க்கிறார். ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கூடிநின்று "வாழ்க பாரதியார்!", "வாழ்க கவியரசர்!" என்று கோஷிப்பதைக் கேட்கிறார். "ஆகா! நாம் கண்ட கனவுகளிலே இதுவுமா பலித்து விட்டது?" என்று வியப்படைகிறார்.
கவியரசர் பாரதியார் இந்தப் புவியினில் வாழ்ந்தபோது பற்பல கனவுகள் கண்டார். பாரதநாடு சுதந்திரம் பெற்றுச் செழித்தோங்கக் கனவு கண்டார். தமிழ்மொழி தழைத்தோங்கக் கனவு கண்டார். தமிழர் வாழ்வு சிறந்தோங்கக் கனவு கண்டார். இப்படியெல்லாம் தேசத்துக்காகவும் தேசமக்களுக்காகவும் பற்பல கனவுகள் கண்ட மகான் தமது சொந்த வாழ்க்கை இன்பத்தைப் பற்றியும் சிற்சில கனவுகள் கண்டார். அவற்றை ஆதாரமாகக் கொண்டு இன்பக் கவிதைகள் புனைந்தார்.
பாரதியார் தமக்கென கண்ட கனவுகளிலே ஒன்றில், "காணி நிலம் வேண்டும்" என்றார். "அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தர வேண்டும்" என்றார். கவியரசரின் கனவைத் தமிழ் மக்கள் இன்று நிறைவேற்றி வைத்து விட்டார்கள். காணி நிலத்திலே ஒரு கவின்பெறு மாளிகை கட்டித் தந்து விட்டார்கள்! கல்லினாலும், சுண்ணாம்பினாலும் கட்டிய மாளிகை அல்ல; பொன்னைக் கொண்டும், மணியைக் கொண்டும் கட்டிய மாளிகையும் அல்ல; அதிகாரத்துக்கும் ஆக்ஞைக்கும் பயந்து மக்கள் கட்டிக் கொடுத்ததும் அல்ல.
அன்பினாலும் ஆர்வத்தினாலும் கட்டிய மணி மண்டபம்; ஆசையோடும் பாசத்தோடும் கட்டிய எழில் மாளிகை; தமிழ் மக்கள் தங்கள் இதயங் கவர்ந்த கவியரசருக்குப் பக்தியோடு சமர்ப்பித்த காணிக்கை. ஆயிரக்கணக்கான மக்கள் நாலணா முதல் நாலாயிரம் ரூபாய் வரையில் மனமுவந்து மகிழ்ச்சியுடன் உதவிய நன்கொடைகளைக் கொண்டு கட்டிய அற்புதத் திருப்பணி.
இத்தகைய மணிமண்டபத்தைத் திறந்து வைப்பதற்காக மண்டபத்திற்கு அஸ்திவாரம் நாட்டிய ராஜாஜி, கல்கத்தாவிலிருந்து பறந்து வருகிறார். வங்க மக்களின் உள்ளத்தைத் தமது அன்புப் பணியினாலும் அறிவின் சிறப்பினாலும் பரிபூரணமாகக் கவர்ந்த மேற்கு வங்காளத்துக் கவர்னர் வருகிறார். தமிழ் நாட்டின் தவப்புதல்வர் வருகிறார். ஒப்பற்ற புனிதத் தன்மை பொருந்திய இந்தத் தமிழர் திருவிழாவில் கலந்து மகிழ்வதற்குச் சென்னை மாகாணத்துப் *பிரதம மந்திரியும், இதர மந்திரிகளும் சபாநாயகரும் விஜயம் செய்கிறார்கள். (*அந்தக் காலத்தில் மாநில முதல்வரைப் 'பிரதம மந்திரி' என்றே அழைத்தார்கள்).
தமிழ் நாடெங்குமுள்ள தமிழன்பர்களும் எழுத்தாளர்களும் பத்திரிகாசிரியர்களும் வருகிறார்கள்.
"ஜயமுண்டு பயமில்லை மனமே - இந்த
ஜன்மத்திலே விடுதலை யுண்டு நிலையுண்டு" என்றும்
"பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்"
என்றும் பாடிய தீர்க்கதரிசியின் ஞாபகார்த்த மண்டபத்தை அக்டோபர் 13ம் தேதி காலையில் பொழுது புலர்ந்தவுடனே கவர்னர் ராஜாஜி திறந்து வைக்கிறார்.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே!" என்றும்
"வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!"
என்றும் பாடிய அமுதத் தமிழ்க் கவியின் உருவச் சிலையைப் பிரதம மந்திரி ஓமாந்தூர் ரெட்டியார் திறந்து வைக்கிறார்.
"பாரத நாடு பழம்பெரும் நாடே!
பாடுவ மிஃதை எமக்கில்லை ஈடே!" என்றும்
"பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு!"
என்றும் பாடிய தேசபக்த ஆசுகவியின் ஞாபகார்த்த மண்டப விழாவைப் பல்லாயிரம் மக்கள் அன்று கண்டு களிப்பார்கள்.
"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு!" என்றும்
"ஏழையென்றும் அடிமை யென்றும்
எவருமில்லை சாதியில்"
என்றும் பாடிய சமதர்ம சுதந்திரக் கவிஞரின் ஞாபகார்த்த மண்டபத் திறப்பு விழா பூரண சுதந்திரம் பெற்ற பாரத நாட்டில் நடைபெறப் போகிறது.
பாரதி மண்டப அஸ்திவார விழா நடைபெற்ற அன்று, "அடிமை இந்தியாவில் இந்த அஸ்திவார விழாவை நடத்துகிறோம். மண்டபம் கட்டித் திறப்பு விழா நடத்தும் போது பாரதியாரின் தவம் பலித்துப் பாரத நாடு சுதந்திரம் பெற்றிருக்கும்!" என்று சொன்ன வாக்கு அற்புதமாய்ப் பலித்து விட்டது!
பாரதியார் தெய்வத் தமிழ் மொழியில் இன்பக் கவிதைகளில் கூறியுள்ள மற்ற தீர்க்க தரிசனங்களும் கூடிய விரைவில் நிறைவேறும் என்று நம்புவோமாக! அந்த வரகவியின் வாக்கு எல்லா விதத்திலும் உண்மையாகும் என்று உறுதி கொள்வோமாக!
பாடுவோம்! கொண்டாடுவோம்!! (1949 செப்டம்பர் 11ம் தேதி கல்கி இதழின் தலையங்கம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒரு நாட்டில் ஒரு மகாகவி தோன்றக்கூடும் என்று இலக்கிய ஆராய்ச்சியாளரும் சரித்திரக்காரரும் திட்டமாய்க் கூறுகிறார்கள். குறைந்த பட்சம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இடையறாமல் தொடர்ந்து கலைகளும் இலக்கியமும் வளர்ந்து வந்த நாட்டிலேதான் மூன்று மாகாகவிகள் வரிசைக் கிரமத்தில் தோன்றியிருக்க முடியும்.
தமிழ்நாடு அத்தகைய அதிர்ஷ்டம் வாய்ந்த நாடு. இந்த நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திருவள்ளுவர் என்னும் மகாகவி தோன்றினார். சத்தியவேதம் என்று சொல்லத்தக்க தத்துவ ஒழுக்க நூலை அற்புத சக்தி வாய்ந்த கவிதையில் அமைத்துக் கொடுத்தார். வள்ளுவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கவிச்சக்கரவர்த்தி கம்பர் அவதரித்தார். உலகத்தில் வேறு எந்த நாட்டு எந்த பாஷைக் காவியத்துக்கும் மேம்பட்டது என்று சொல்லத்தக்க இராமாயண மகா காவியத்தைத் தமிழில் செய்தளித்தார்.
கம்பருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நம்முடைய காலத்தில், மகாகவி பாரதியார் தோன்றினார். எத்தனையோ நூற்றாண்டுகள் அடிமையிருளில் கிடந்த நாட்டுக்கும், செத்தவர்கள் போல் இருந்த நாட்டு மக்களுக்கும் புத்துயிர் தந்தார். தேசபக்தியையும் சுதந்திர தாகத்தையும் தமிழ் வெறியையும், தன்னம்பிக்கையுடன் கவிதை இன்பத்துடன் கலந்து மக்களுக்கு ஊட்டினார்.
பாரதியாரின் பாடல்கள் பலவற்றில் அதி ஆச்சர்யமான தீர்க்க தரிசன சக்தியை நாம் காண்கிறோம். அவருடைய தீர்க்க தரிசன வாக்குகள் ஒவ்வொன்றாகப் பலித்து வருவதைக் கண்டு கண்டு மகிழ்கிறோம். பாரதியார் தம் காலத்தில் கண்ட தமிழ் மக்களைப் பற்றி அவ்வளவாக உற்சாகம் கொண்டு விடவில்லை. தமிழ் மக்களிடத்திலும் இந்திய மகா ஜனங்களிடத்திலும் பற்பல குறைகளைக் கண்டு நைந்துருகி, நெஞ்சுருகி நின்றார்.
"நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்" என்று மனம் பதறிக் கதறினார்.
"நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை செய்வாரடி - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி!" என்று ஆத்திரத்தைக் கொட்டினார்.
ஆயினும் இத்தகைய நிலைமையைக் கண்டுவிட்டு உற்சாகக் குறைவு அடைந்து விட்டாரோ" அடியோடு நம்பிக்கை இழந்து விட்டாரோ? அவருடைய காலத்து 'அறிவாளி'கள் சிலரைப் போல 'இந்த தேசம் உருப்படவாவது? இந்தியாவுக்கு விடுதலையாவது?' என்று சொல்லிக்கொண்டு இருந்து விட்டாரோ? இல்லவே இல்லை!
அந்த நிலைமையில், அப்படிப்பட்ட மக்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு, தீர்க்க திருஷ்டியுடன் வருங்காலத்தை நோக்கினார்.
"ஜயபேரிகை கொட்டடா!" என முழங்கினார். காரிருளுக்கு மத்தியில் பேரொளி பொங்கி வரும் அறிகுறிகளைக் கண்டார். அடிமைத்தனத்துக்கு மத்தியில் விடுதலையின் உதயப் பிரகாசத்தைக் கண்டு வரவேற்றார். இந்தியாவைப் பிடித்திருந்த பீடைகளும் இந்திய மக்களிடம் குடிகொண்டிருந்த இழிகுணங்களும் விரைவிலே அகன்று போய்விடும் என்பதை உள்ளுணர்ச்சியினால் மகாகவி பாரதியார் நிச்சயமாக அறிந்தார்.
"வலிமை யற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ"
என்ற பாடலில் அச்சம், மடமை, பலவீனம் முதலிய மக்களின் குறைபாடுகளையெல்லாம் அடித்து விரட்டுவது போல் சபித்து ஓட்டினார்.
"வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ"
என்று தாய்மொழிப் பற்றில்லாதவர்களை நாடு கடத்தினார்.
"ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் - காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ"
என்று மூட நம்பிக்கையாளரையும் சமூகத் துரோகிகளையும் அதட்டி அடித்தார். பின்னர் வருங்காலத்தில் வரப்போகும் உண்மையான பாரத ஜாதியை ஞானக்கண் கொண்டு பார்த்து சக்தி வாய்ந்த சொற்களினால் அற்புதமான கவிதை செய்து வரவேற்றார்.
"இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வளத்தினாய் வா வா வா
ஒளி யிழந்த நாட்டிலே - நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே - வா வா வா
களை யிழந்த நாட்டிலே - முன்போலே
கலை சிறக்க வந்தனை வா வா வா
விளையும் மாண்பு யாவையும் - பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா"
இப்படிப்பட்ட தீர்க்கதரிசனத்துடன் சுதந்திர பாரதத்தை அகக்கண்ணினால் கண்டு வரவேற்பு கூறிய மகானுக்கு எத்தனை விழாக்கள்தான் நடத்தக் கூடாது? தினந்தினம் ஒரு கொண்டாட்டம், ஊரெங்கும் நாடெங்கும் நடத்தி மகிழலாமே! பாரதி வாழ்ந்திருந்த காலத்து மக்களின் இலட்சணத்தைப் பற்றி அவரே நன்றாகப் பாடியிருக்கிறார். தெளிவான வசன நடையிலும் 'மண்ணுலகம்' என்னும் ஞானரதப் பகுதியில் எழுதியிருக்கிறார்.
ஆகவே, பாரதி வாழ்ந்திருந்த காலத்திலும் அதற்குப் பிற்பாடு சில காலம் வரையிலும் கூடத் தமிழ் மக்களில் பெரும்பாலோர் "பாரதி யார்? என்றும் "எந்தப் பாரதி?" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் அப்படி யாரும் கேட்பதில்லை. "நம்முடைய பாரதியார்" என்று பெருமையுடன் மார் தட்டிக் கொண்டு செல்கிறோம். "கவியரசர் பாரதியார்" என்றும் "மகாகவி பாரதியார்" என்றும் போற்றிப் புகழ்கிறோம். பாருக்கெல்லாம் அவர் பெருமையை நாம் பறை சாற்றுகிறோம்.
இந்த வருஷத்தில் பாரதியார் விழாவை முந்தைய வருஷங்களைக் காட்டிலும் அதிக குதூகலத்துடன் கொண்டாடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. பாரதியார் பாடல்களின் அச்சுப் பிரசுர உரிமையும் ஒலிப்பதிவு செய்யும் உரிமையும் தனிப்பட்ட அன்பர்களின் தனிச் சொத்துரிமையாக இருந்தது, பல பாரதி பக்தர்களின் உள்ளத்துக்குத் துன்பத்தை அளித்து வந்தது. இந்த வருஷத்தில் பாரதியார் பாடல்களுக்கிருந்த அந்த பந்தங்களெல்லாம் நிவர்த்தியாகி விட்டன. மேற்படி இருவித உரிமைகளும் பொது மக்களின் உடைமையாகிப் பொதுஜன சர்க்காரால் இப்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இவ்விதமாக அநேக பாரதி பக்தர்கள் - தமிழ் அன்பர்கள் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்த தாபத்தைத் தணித்துப் பாரதியார் பாடல்களைப் பொதுவுடமையாக்கிக் கொடுத்த சென்னை மாகாண காங்கிரஸ் சர்க்காருக்கு நமது மனமார்ந்த நன்றியை இந்தப் புனிதத் திருநாளில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அந்தக் காரியம் சாத்தியமாவதற்குப் பெரிய மனதுடன் உதவி புரிந்த ஸ்ரீ ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அவர்களையும் ஸ்ரீ சி.விச்வநாதய்யர் அவர்களையும் இன்று பாரதி திருவிழா தினத்தில் பாராட்டுகிறோம்.
மகாகவி பாரதியார் தமது சொந்தக் கரத்தினால் முத்துப்போன்ற எழுத்துக்களில் எழுதிய கையெழுத்துப் பிரதிகளை ஸ்ரீ சி.விச்வநாதய்யர் அவர்களிடமிருந்து சென்னை சர்க்கார் பெற்று எழும்பூரில் உள்ள அரசாங்கக் கண்காட்சி சாலையில் வைத்திருக்கிறார்கள். இதுவும் போற்றத் தகுந்த செயலாகும். இந்தக் கையெழுத்துப் பிரதிகளைப் பத்திரமாக வைத்துப் பாதுகாத்து வந்தால் தலைமுறை தலைமுறையாக தமிழ்நாட்டில் பிறக்கப் போகும் சந்ததிகள் இந்தப் பிரதிகளைப் பார்த்து படித்துக் கண்ணிலே ஒற்றிக்கொண்டு மகிழ்வார்கள்.
"வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெல்லாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடி யற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!
நந்தேசத்தினர் நாடொறும் உயர்க!
வந்தேமாதரம்! வந்தேமாதரம்!!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
You can send your comments