Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, April 20, 2010

பாரதி போற்றிப் பாடிய புரட்சி வீரர்கள்.



திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
நடத்தும் அஞ்சல் வழிப் பயிற்சி - பாடம்
பாரதி போற்றிப் பாடிய புரட்சி வீரர்கள்.
(தொ.மு.சி.ரகுநாதன்: "பாரதி - காலமும் கருத்தும்")

இந்திய தேச விடுதலைக்காக மட்டுமல்லாமல், மானிடச் சாதியின் விடுதலைக்கும் தனது கவிதா சக்தியைப் பயன்படுத்திய தேசிய மகாகவி பாரதி. அவனது கவிதைகள் யாவும் நாட்டு மக்கள் உள்ளங்களில் விடுதலை வேட்கையையும், தாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தின. அப்படிப்பட்ட நோக்கத்தில் அந்த மகாகவி பல புரட்சியாளர்களைப் பற்றி பல பாடல்களைப் பாடியுள்ளது அனைவரும் அறிந்த செய்தி. அப்படி பாரதியால் போற்றிப் பாடப்பட்ட இரு மாவீரர்களைப் பற்றிய வரலாற்றையும் அப்பாடல்கள் பற்றிய பின்னணியையும் அவனது பாடல்கள் மூலமாக இந்தக் கட்டுரையில் ஒரு சிறிது காணலாம். அறிஞர் தொ.மு.சி.ரகுநாதன் தனது "பாரதி - காலமும் கருத்தும்" நூலில் இவ்விரு பாடல்கள் குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். பாரதி ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவரைப் பற்றி முந்தைய பாடமொன்றில் விரிவாக எழுதியிருக்கிறோம். இவருடைய நூல்களைத் தேடிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.

(அ) வந்தேமாதரம்:
பாரதியின் 'வந்தேமாதரம்' பாடல் அனைவரும் அறிந்த வொன்று. வந்தேமாதரம் என்றால் 'தாயை வணங்குவோம்' என்று பொருள். மகாகவி தனது வந்தேமாதரம் பாடலில் இவ்வாறு கூறுகிறார்:-
"வந்தேமாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"

வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திரரின் 'ஆனந்த மடம்' எனும் பெருங்கதையில் இடம் பெற்றது இந்த வந்தேமாதரம் பாடல். 1773இல் வங்கத்தில் நடைபெற்ற சன்னியாசிகளின் கலகத்தை அடிப்படையாக வைத்து பங்கிம் சந்திரர் 1882இல் இந்தக் கதையை எழுதினார். இந்த கதையில் சுவாமி பவானந்தர் என்று ஒரு வீர சன்னியாசி. இவர் அன்னியரிடமிருந்து நாட்டை மீட்பதற்காகத் தான் பிறந்த தாய் நாட்டையே பெற்ற தாயாகப் போற்றி, அவளுக்கு அஞ்சலி செய்வதாகப் பாடப்படும் பாட்டு இது. சுவாமி விவேகானந்தர் தம்மைச் சந்திக்க வரும் இளைஞர்களிடம் "ஆனந்த மடம்" நூலைப் படிக்குமாறு கூறியதாகச் செய்திகள் உண்டு.

வங்கத்தில் காளி வழிபாடும், துர்க்கா பூஜையும் மிக முக்கியமான வழிபாடுகள் என்பதை அனைவரும் அறிவர். இந்த இறை வழிபாட்டு உணர்வை நாட்டைத் தாயாக வணங்கும் தேசிய சமய உணர்வாக மாற்றிய பெருமை பங்கிம் சந்திரருக்கு உண்டு. இந்த வந்தேமாதரம் பாடல் மக்கள் உள்ளங்களில் கனன்றுகொண்டிருந்தாலும், அது வெடித்து வெளிக்கிளம்பியது லார்டு கர்ஜானின் வங்கப் பிரிவினையின் போதுதான். வங்கப் பிரிவினைக்குப் பின் மக்கள் மத்தியில் 'வந்தேமாதரம்' எனும் கோஷம் தேசிய இயக்கத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கியது. தீயவர்களையும், தீமைகளையும் சம்ஹாரம் செய்வதற்காக கைகளில் வாளேந்தி நிற்கும் பயங்கரியாகக் காட்சியளிக்கும் காளிமாதா, நம் பாரத தேசத்தின் வடிவமாகக் கொள்ளப்பட்டு வணங்கப்பட்டாள். அரவிந்தர், விபின் சந்த்ர பால் ஆகியோர் இந்த வழக்கத்திற்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.

இவ்வாறு காளிதேவியை பாரதமாதாவாகக் கண்டு தேசியத்தை சமயமாக ஏற்றுக்கொண்டு புரட்சிகர நடவடிக்கைகள் தொடங்கின. வங்கத்தில் காளி வழிபாடு போலவே, பஞ்சாபில் குரு கோவிந்த சிங்கின் புகழைப் பரப்பி தேசாபிமானத்தை வளர்க்கவும், மராட்டிய பிரதேசத்தில் கணபதி பூஜை வழிபாட்டினை தேசிய விழாவாகக் கொண்டாடவும் தொடங்கினர். மராட்டிய சுதந்திர வீரன் சத்ரபதி சிவாஜியை வணங்கும் வீர வழிபாட்டினையும் தேசிய இயக்கத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கினர். இதற்கு லோகமான்ய பால கங்காதர திலகர் அடிகோலினார். தமிழ்நாட்டில் சங்ககால தெய்வமான கொற்றவை தொடங்கி இன்றுள்ள மாரியம்மன், காளியம்மன், துர்க்கை போன்ற ருத்ர சொரூபமான பல பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டு வருகின்றனர். இந்த காரணங்களால் மகாகவி பாரதிக்கும் காளியின் வடிவத்தில் பாரத அன்னையை சித்தரிப்பது எளிதாயிருந்தது. தமிழ்நாட்டு மரபுக்கும் இது ஒத்ததாக இருந்தது. இதனையே பாரதத்தை தாய் வடிவில் கண்டு பாரதி பாடிய தேசிய கீதங்கள் பலவும் நமக்கு உணர்த்துகின்றன.

பாரதி பாரதத்தாயை எப்படிக் காண்கிறான்? பாரத சமுதாயம் முழுவதையுமே பாரதத் தாயின் வடிவமாகக் காணும் பாரதி

"முப்பது கோடி முகமுடையாள் - உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்"
என்று பாடிவிட்டு, அவளைப் பின்வருமாறு வர்ணிக்கிறான்.
"அறுபது கோடித் தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
செறுவது நாடி வருபவரைத் துகள்
செய்து கிடத்துவள் தாய்.

பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
தோமிழைப்பார் முன் நின்றிடுங்கால், கொடும்
துர்க்கை யனையவள் தாய்.

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள் தாய் - அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்."

பாரதத் தாயை அறங்கள் தழைக்கக் செய்பவள் என்று பாடவந்த அதே மூச்சிலேயே, அந்தத் தாயின் அறவழிக்குக் குந்தகம் விளைவித்து அவளோடு எவரேனும் மோத வந்தால் அந்தத் தாய் மறக்கோலம் பூண்டு, தன்னை எதிர்ப்பவர்களைத் தூள் தூளாக்கி மண்ணோடு மண்ணாய்க் கிடத்தி விடுவாள் என்றும், அவள் பூமியை காட்டிலும் பொறுமை மிக்கவள்தான் என்றாலும் எவரேனும் அவளுக்குத் துரோகம் இழைக்கத் துணிந்தால், அந்தத் தாய் பொறுமையை விடுத்துப் பொங்கியெழுந்து, அரக்கர்களைத் துவம்சம் செய்யும் துர்க்கையாகவும் மாறி விடுவாள் என்றும், நல்லரசாட்சி நடந்தால் அவள் அதனை ஆதரித்து நிற்பாள், மாறாக ஆட்சியாளர்கள் கொடுங்கோலர்களாக இருந்தால், அவளும் கொற்றவையாக மாறி அவர்களை விழுங்கித் தீர்த்து ஆனந்த நடனம் புரிவாள் என்கிறார் பாரதி.

எனவேதான் தாயாக விளங்கும் அவள் தருணம் வந்தால் அன்னியரை அழிக்கப் பேயாகவும் மாறிவிடுவாள் என்று உணர்த்தும் விதத்தில்

"பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை" ------ என்று தொடங்கி
"பாரதப் போரெனில் எளிதோ? - விறல்
பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடி வந்தாலும் - கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்"

என்றும் பாடி முடிக்கிறார் பாரதி. பாரதத் தாய் தன் புத்திரர்களான அர்ஜுனன் போன்ற வீரர்களின் வில்லிற் புகுந்து செயல்படுவாள், அப்படி எதிர்ப்பவர்கள் கோடிக்கணக்கினராயினும் அவர்களை மாய்த்து அங்கு பாய்ந்தோடும் குருதி வெள்ளத்தில் நீந்திக் களிப்பாள் என்கிறார்.

இதேபோல, பாரத தேவியின் நாடு, நகர், ஆறு, மலை போன்ற பத்து அம்சங்களையும் போற்றித் "திருத் தசாங்கம்" பாடுகையில்

"பரிமிசை ஊர்வாள் அல்லள்; பாரனைத்தும் அஞ்சும்
அரிமிசையே ஊர்வாள் அவள்!"

சாதாரண குதிரையின் மீது அல்ல, இவ்வுலகமே அஞ்சுகின்ற சிங்கத்தின் மீது ஏறி வலம் வருவாள் என்கிறார்.

மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜியின் குல தெய்வமான பவானியின் வடிவத்தில் பாரத அன்னையை பாரதி காண்கிறான். 1907இல் சென்னையிலும் 'சிவாஜி தினம்' கொண்டாடப்பட்ட செய்தியை அறிவித்து, "அப்போது சிவாஜியின் குலதெய்வமும் ஆரிய ஜனங்களின் வீர தேவியுமாகிய பவானிக்கு ஸ்ரீ ஸி.சுப்பிரமணிய பாரதியால் கூறப்பட்ட வணக்கம்" என்ற குறிப்போடு "இந்தியா" பத்திரிகையில் வந்த செய்தி.

"ஹே மாதா! ஹே பவானி! மஹாவீரே! ஆரிய சக்தி, உன்னை நமஸ்கரிக்கின்றோம். பரத கண்டத்து முப்பது கோடி ஜனங்களையும் நாசம் செய்துவிட வேண்டுமென்று யாரெல்லாமோ விரும்பிய போதிலும், எங்களுக்கு ஜீவாதாரமாக இருந்து ரக்ஷிப்பவள் நீ! எங்களையே சகாப்த காலமாக இந்த நாட்டில் எங்கள் ஜாதியாரின் புஜத்திலேயும் ஹிருதயத்திலேயும் நின்று விளங்க அவர்களுக்கு வீரத் தன்மையும் பராக்கிரமும் மனத்துணிவும் இஷ்ட சித்தியும் தந்து காத்து வந்தவள் நீ! ஆதியிலே தர்ம ஸ்வரூபமாய், அதர்மத்தைச் செய்பவர்களான, ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித், மாரீசாதி ராக்ஷஸர்களையெல்லாம் பொடியாக்கிட ஸ்ரீ ராமனுக்குத் துணையாக நின்றவள் நீ! சீனம் முதலிய வடநாட்டு மிலேச்சர்களையெல்லாம் வெற்றிகொண்டு, அவர்களுக்குள்ளே தர்ம ஸ்தாபனம் செய்து, ஆரிய வர்த்தத்து மஹா வீரர்களுக்குள்ளே நிகரற்றவராக விளங்கிய அர்ஜுனனுக்கு ஸஹாயம் செய்தவள் நீ! பீஷ்மர், பீமன், கர்ணன், அபிமன்யு, துரோணர், நிருபன், அசுவத்தாமன் முதலிய வீர சிகாமணிக்கெல்லாம் தோளிலே வலிமையும், மனத்திலே திடமும் கொடுத்து வீர ஸ்வர்க்கம் அருளினவள் நீ! க்ஷத்திரியர்கள் தர்ம நெறியினின்று விலகிய காலத்திலே பரசுராமனைக் கொண்டு அவர்களையெல்லாம் ஸம்ஹரித்து எங்களுடைய ஆரிய ஜாதியின் பெருமையைக் காப்பாற்றியவள் நீ! பிரதாப ஸிம்ஹன் முதலிய ஆயிரக்கணக்கான ராஜபுத்ர வீரர்கள் பிராணனைக் காட்டிலும் மானமே பெரிதாக மதித்து யுத்த களத்திலே துண்டுபட்டு வீழ்ந்தேனும் ஸ்வதேச தர்மத்தை நிலைநிறுத்தியது உன்னுடைய கிருபையினாலேதான். வங்க தேசத்திலே பிரதாபாதித்யன் அடைந்த கீர்த்தி உன்னுடைய கீர்த்தி! மஹமதிய ராஜாக்கள் அதர்மத்தில் சிந்தை வைத்த போது, சத்ரபதி சிவாஜி மகாராஜாவைத் தோற்றுவித்து மஹாராஷ்டிர ஸ்தாபனம் செய்தவள் நீ! உன்னை மறந்து, உன்னுடைய பாத பூஜையைக் காட்டிலும் எங்களது உதர பூஜையை பெரிதென்று நம்பி, எங்கள் ஆரிய ஜாதியாரிலே, ஒவ்வொருவனும் தனது, தனது அற்ப சுகங்களையே விரும்பி, ஸ்வதேசிய ஞானமும், ஸ்வஜாதிய ஞானமும் ஸ்வராஜ்ய அபிலாஷையும் நீங்கிப்போய் நாங்கள் அதர்ம நெறியிலே புகுந்தது பற்றி எங்கள் மீது கோபங்கொண்டு எங்களுக்கு அடிமைத் தன்மை, ரோகம், தரித்திரம் முதலியவற்றின் மூலமாக நற்புத்தி போதிக்க வேண்டுமென்று எண்ணங்கொண்டு விட்டாய் தாயே! உன்னை மறுபடியும் வணங்கத் தொடங்குகின்றோம். இந்த தரித்திர நிலையினின்றும் ரோகங்களினின்றும் இவற்றுக்கு மூலாதாரமான அதர்மத்தினின்றும் விலக்கியருள்வாயா? எங்களை அவமானத்தினின்றும் நீக்கு! எங்களை அபகீர்த்தியினின்றும் விலக்கு! எங்களுக்குப் பராக்கிரமத்தையும், ஞானத்தையும், இவற்றின் விளைவாக ஸ்வராஜ்யத்தையும் கொடுத்தருள். வந்தேமாதரம்!" ("இந்தியா" 18-5-1907).

இதே கருத்துக்களை அவர் தனது பாடல்களிலும் இவ்வாறு எழுதுகிறார்.

"முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்? எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்.
இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்த வில் யாருடை வில்? எங்கள்
மந்திரத் தெய்வதம் பாரத ராணி
வயிரவி தன்னுடை வில்.
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள் எவர் தோள்? எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.

இவ்வாறு 'வந்தேமாதரம்' எனும் மந்திரச்சொல்லை பாரததேவிக்குச் செலுத்தும் வணக்கமாக எண்ணி தேசிய சுதந்திரப் போராட்டத்திற்கு பாரதி பயன்படுத்திக் கொண்டதோடு பவானி, காளி, துர்க்கை, பைரவி போன்ற தெய்வங்களையும் பாரததேவியின் வீரத்திருவுருவாகவும் எண்ணி வழிபட்டு வந்திருக்கிறார். பாஞ்சாலத்து வீரன் குரு கோவிந்த சிங் பற்றி பாட வந்த பாரதி நாட்டுக்காகத் தம் உயிரை பலிகொடுக்கத் தயாராக முன்வந்த அவரது ஐந்து சீடர்களையும் குரு கோவிந்த சிங்

"காளியும் நமது கனக நன்னாட்டுத்
தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!"

என்று அழைத்துப் பாராட்டி பேசுவதாக பாரதி பாடுகிறான்.

(ஆ) குரு கோவிந்த சிங்:

மகாகவி பாரதியின் கவிதைத் தொகுதியில் வெளியாகியிருக்கும் "குரு கோவிந்தர்" என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள பாடல் எப்போது எழுதப்பட்டது, எப்போது 'இந்தியா' பத்திரிகையில் வந்தது என்பது தெரியவில்லை. புதுச்சேரியைச் சேர்ந்த இராமகிருஷ்ணா வாசகசாலை, ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி சங்கம், புதுவை வாலிபர் சங்கம் ஆகிய மூன்று ஸ்தாபனங்களும் 1937 செப்டம்பர் 11 அன்று புதுச்சேரியில் பாரதி நினைவு தின நிகழ்ச்சியை நடத்திய போது, அவர்களின் சார்பில் மறைந்து கிடந்த இந்தப் பாடல் "புதுச்சேரி பாரதி அன்பர்கள் சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு" குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம் என்ற தலைப்பில் 8 பக்கங்கள் கொண்ட சிறு நூலாக முதன்முதல் வெளிவந்தது. இந்தக் கவிதை பாரதி சிவாஜியைப் பற்றி எழுதிய காலத்தையொட்டியே அதாவது 1906-1907 காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே இதன் உருவம் உள்ளடக்கம் முதலியன நமக்கு உணர்த்துகின்றன.

குரு கோவிந்த சிங், சீக்கியர்களின் பத்தாவது குரு. 1675இல் கோவிந்தரின் தந்தையும், ஒன்பதாவது குருவுமான தேஜ் பகதூரை, முகலாயர்கள் சின்னாபின்னமாக வெட்டித் தள்ளிக் கொன்றுவிட்ட நிலையில், குரு கோவிந்தர் சீக்கியர்களையெல்லாம் ராணுவ ரீதியில் சீக்கியர்களுக்கிடையே முன்பு இருந்த ஜாதி பேதங்களையெல்லாம் கை கழுவிவிட்டு 'சீக்கியர்' எனும் ஒரே இனமாக ஒன்று திரட்டினார். இதனால் சீக்கியர்கள் பிரத்தியேகமான சிகை அலங்காரம், சமயச் சின்னங்களான தலைப்பாகை, கிர்ப்பான் எனும் உடை வாள் அணிதல் ஆகியவற்றை மேற்கொண்டனர். இவ்வாறு ஒன்றுபட்டுத் திரண்ட சீக்கிய இனம் முகலாயர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. இருந்தும் சீக்கியர்கள் முகலாயர்களுக்கு எதிராக நடந்த போர்களில் வெற்றி பெறவில்லை. இறுதியில் அவரும் 1708இல் கொல்லப் பட்டார். இருந்தாலும் அவர் சீக்கியர்களை ஒன்றுபடுத்திய விதமும், வீரத்தோடு போராடிய விதமும், தியாகங்களும் சீக்கிய இனத்தின் வீரத்துக்குச் சான்றாக விளங்கின.

தமிழகச் சுதந்திரப் போராட்ட வீரர் வீர முரசு வ.வெ.சு.ஐயர் "குரு கோவிந்த சிங்கன்" என்றொரு நூலை எழுதினார். மகாகவி பாரதியோ, குரு கோவிந்த சிங் பற்றி "குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம்" எனும் தலைப்பில் 204 அடிகள் கொண்ட நீண்ட கவிதை ஒன்றையே பாடி வைத்தான். இந்த பெரிய கவிதையில் பாரதி எடுத்துக் கொண்ட விஷயம், நாட்டின் விடுதலைக்காகப் போராடவும், தமது உயிரையும் தியாகம் செய்யவும், அஞ்சா நெஞ்சமும், தியாக மனப்பான்மையும் கொண்ட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதுதான். குரு கோவிந்தர் "கால்சா" என்ற தமது மார்க்கத்தைத் தொடங்குவதற்கு முன் எவ்வாறு அதற்கு வீரத் திருமணிகளான ஐந்து சீடர்களை தேர்ந்தெடுத்தார் என்பதே பாரதி பாட எடுத்துக்கொண்ட விஷயமாகும். குரு கோவிந்தர் அந்தச் சீடர்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்?

குரு கோவிந்தர் சீக்கியர்களை ஓரிடத்தில் கூட்டினார். அவர் சொல்லப்போகும் செய்தியைக் கேட்க அவர்கள் ஆயிரக்கணக்கில் கூடினர். குரு கையில் கூர் வாள் ஒன்றை ஏந்திக் கொண்டு வந்து நின்றார்:

"வாள் இதை மனிதர் மார்பிடைக் குளிப்ப
விரும்புகின்றேன் யான்; தீர்கிலா விடாய்கொள்
தருமத் தெய்வந்தான் பல குருதி
பலி விழைகின்றதால், பக்தர்காள்! நும்மிடை
நெஞ்சினைக் கிழித்து நிலமிசை உதிரம்
வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப
யார் வருகின்றீர்?"

என்று கேட்கிறார். அதாவது "தர்ம தேவதை பல உயிர்களை பலி கேட்கிறாள். உங்களில் நெஞ்சைக் கிழித்து ரத்தத்தை நிலத்தில் சிந்தி அவள் தாகத்தைத் தணிக்க யார் முன்வருகிறீர்கள்?" என்று கேட்டார். கூடியிருந்த மக்கட்கூட்டம் நடுங்கியது; வாய் பேசாமல் இருந்தனர். கூட்டத்தில் ஒரே ஒருவன் மட்டும் எழுந்திருந்து "நான் வருகிறேன்" என்று முன்வருகிறான். அவனை குரு கோவிந்தர் கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார். சிறிது நேரத்தில் கோவிலுக்குள்ளிருந்து குருதி ஆறாய் ஓடி வருகிறது. தொடர்ந்து குரு கோவிந்தர் ரத்தம் தோய்ந்த வாளுடன் கோவிலுக்குள்ளிருந்து வெளியே வருகிறார்.

"மானுடர் நெஞ்சினில் வாளினைப் பதிக்க
சித்தம் நான் கொண்டேன், தேவிதான் பின்னுமோர்
பலி கேட்கின்றாள் பக்தர்காள்! நும்முளே
இன்னும் இங்கொருவன் இரத்தமே தந்து இக்
காளியின் தாகம் கழித்திடத் துணிவோன்
எவனுளன்?"

என்று கேட்டு, அடுத்து உயிர்ப்பலி கொடுக்க எவன் உளன் என்று அழைக்கிறார். அடுத்து ஒருவன் வருகிறான். மீண்டும் முன் போலவே நடக்கிறது. மறுபடி குரு ரத்தம் தோய்ந்த வாளுடன் வெளியே வருகிறார். வந்து "தேவியின் தாகம் இன்னும் தீரவில்லை, மேலும் பலி கேட்கிறாள்" என்கிறார். இப்படி ஐந்து பேர் முன்வர, அனைவருக்கும் முன்போன்றே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பின்னர் வெளியே வந்து குரு இப்படிச் சொல்லுகிறார்.

"அறத்தினைத் தமது ஓர் அறிவினால் கொண்ட
மட்டிலே மானிடர் மாண்பெறலாகார்
அறமது தழைப்ப, நெஞ்சகம் காட்டி
வாள்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்.
அவரே மெய்ம்மையோர்; முத்தரும் அவரே!"

அறிவு கொண்டு தர்மத்தை புரிந்து கொள்வது மட்டும் போதாது, தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக குத்த வரும் வாளுக்கு நெஞ்சைக் காட்டி உயிர்த் தியாகம் புரிபவரே மெய்ஞானிகள் என்ற உண்மையை உணர்த்துவதற்கென்றே இந்த சோதனையை நடத்தியதாகக் கூறி, தாம் யாரையும் பலியிடவில்லை யென்றும், வெளியே ஓடிவந்தது ஆட்டின் ரத்தமே என்று சொல்லி அந்த ஐவரையும் வெளியே கூட்டிக் கொண்டு வந்து காட்டினார். அந்த ஐந்து பேரையும் குரு கோவிந்தர் மார்புறத் தழுவி, ஆசிகள் கூறி, பின்னர் மக்களுக்குச் சொல்கிறார்:

"காளியும் நமது கனக நன்னாட்டுத்
தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!
நடுக்கம் நீர் எய்த நான் ஐம்முறையும்
பலியிடச் சென்றது பாவனை மன்ற
என் கரத்தால் கொலோ நும் உயிர் எடுப்பன்?
ஐம்முறை தானும் அன்பரை மறைத்து நும்
நெஞ்சச் சோதனை நிகழ்த்தினன் யானே!
தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர்
என்பது தெளிந்தேன். என் கர வாளால்
அறுத்தது இங்கு இன்று ஐந்து ஆடுகள் காண்பீர்
சோதனை வழியினும் துணிவினக் கண்டேன்
களித்தது என் நெஞ்சம். கழிந்தன கவலைகள்"

இவ்வாறு நாட்டுக்காக தம் இன்னுயிரை தேவிக்குப் பலி கொடுக்க முன்வந்த ஐந்து வீரர்களைத் தமது முதல் சீடர்களாகக் கொண்டே, குரு கோவிந்தர் தமது "கால்சா" என்ற மார்க்கத்தைத் தொடங்குகிறார். இதன்பின் அவர்களுக்கு தீட்சை அளித்து உபதேசம் செய்கிறார்:

"தாய்த் திரு நாட்டைச் சந்ததம் போற்றி
புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்!"

என்று குரு கோவிந்தர் அவர்களை வாழ்த்த, சீடர்கள் அவனடி போற்றி ஆர்த்தனர். "குரு கோவிந்தன் நாட்டிய கொடி உயர்ந்து அசைய குவலயம் புகழ்ந்தது. ஆடியே மாய்ந்தது ஒளரங்கசீப் ஆட்சி". என்று பாடல் முடிகிறது. குரு கோவிந்த சிங்குக்குக் கிடைத்த ஐந்து சீடர்களைப் போன்று அஞ்சா நெஞ்சம் படைத்த இளைஞர்கள் பாரத நாட்டை விடுவிக்கத் தம் உயிரையும் பலி கொடுக்கச் சித்தமாயிருக்க வேண்டும் என்பது பாடலின் கருத்து.

(இ) சத்ரபதி சிவாஜி:

அந்த நாள் தீவிர தேசபக்தர்கள் குரு கோவிந்த சிங்கைப் போலவே சத்ரபதி சிவாஜியையும் வீரவணக்கம் செய்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே மராட்டிய மாநிலத்தில் சிவாஜி மஹராஜுக்கு விழா எடுத்து மக்கள் மனதில் தேசிய உணர்வைத் தூண்டினார் பால கங்காதர திலகர். அப்படிப்பட்ட விழாவொன்றில் திலகர் தலைமை வகித்துப் பேசிய உரையை "சிவாஜி கூறியவை" என்ற தலைப்பில் தனது "கேசரி" பத்திரிகையில் 15-9-1897இல் வெளியிட்டார். அவரது உரைகளும், கேசரியில் அவர் எழுதியவைகளும் தீவிரவாதத்தைத் தூண்டிவிட்டு புனா நகரில் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் மராட்டிய இளைஞர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட காரணமாக இருந்ததாகக் கூறி திலகர் 1897 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். ராஜத் துரோக வழக்கு என்று அழைக்கப்பட்ட இந்த வழக்கில் திலகருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

திலகர் 1906இல் தனது "மராத்தா" பத்திரிகையில் சிவாஜி விழாவை கொண்டாட வேண்டிய அவசியம் குறித்து எழுதினார். சிவாஜி தனது தியாகத்தாலும் துணிவாற்றலாலும், ஆண்டவன் கைவிட்டுவிட்ட நாடு அல்ல இந்தியா என்பதை உலகத்துக்கு நிரூபித்தார் என்றும் அவர் எழுதினார். திலகரின் இந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட மகாகவி பாரதி தனது "இந்தியா" பத்திரிகையில் 14-7-1906 அன்று எழுதிய கட்டுரையில் கூறுகிறார்:

"தெய்வ பூஜையைக் காட்டிலும் இப்போது நமது நாடிருக்கும் நிலைமைக்கு வீர பூஜை (Hero worship) அத்தியாவசியமாகும். ராமன், அர்ஜுனன், சிவாஜி, பிரதாபர் முதலிய யுத்த வீரர்களும், புத்தர், சங்கரர் முதலிய ஞான வீரர்களும் வாழ்ந்த இந்தப் புண்ணிய தேசமானது இப்போது வீர சூன்யமாகப் போய்விட்டது. வீர பூஜையானது ஒரு தேசத்தின் அபிவிருத்திக்கு இன்றியமையாததாகும். கார்லைல் (Carlyle) என்ற ஆங்கிலேய ஞானியார் வீர பூஜையைப் பற்றி ஒரு முழு கிரந்தமே எழுதியிருக்கிறார்......"

"சிவாஜி மகோத்சவத்தால் நாம் அறிவதென்ன?" என்ற தலைப்பில் பாரதி மற்றொரு கட்டுரை எழுதினார். அதன் பயனாக தமிழ் நாட்டில் பல இடங்களில் சிவாஜி விழா கொண்டாடப்பட்டது. 1907 மே மாதத்தில் சென்னையில் நடந்த சிவாஜி திருநாளின்போது "பவானி வணக்கம்" என்று முன்பே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட வரிகளைப் பேசியிருந்தார். அதே மாதத்தில் தஞ்சாவூரிலும் சிவாஜி திருநாள் நடைபெற்றது, அதுபற்றிய குறிப்பையும் பாரதி "இந்தியா" பத்திரிகையில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் 17-11-1906 அன்று "இந்தியா பத்திரிகையில் சத்ரபதி சிவாஜியின் படத்தை வெளியிட்டு, "புராதன மகாராஷ்டிர சக்ரவர்த்தியாகிய ராஜேந்திர சத்ரபதி சிவாஜி மகாராஜா" என்ற தலைப்பு கொடுத்து மற்றொரு பக்கத்தில் "சத்ரபதி சிவாஜி தனது சைன்யத்துக்குக் கூறியது" என்று ஒரு கவிதையைப் பிரசுரித்திருந்தார்.

இப்போது நமக்குக் கிடைத்துள்ள இந்தப் பாடல் "இந்தியா" பத்திரிகையில் 17-11-1906 இதழ் தொடங்கி 8-12-1906 இதழ் வரையிலான நான்கு வாரங்கள் வெளிவந்தவை. எனினும் பாரதி வாக்களித்திருந்தபடி அது 'புஸ்தக ரூபமாக' வெளிவரவில்லை. அது முற்றுப் பெறாத பாடலாகவே நின்றுவிட்டது. அது முற்றுப் பெறாமல் போன விவரத்தை நமது முதல் பாடமான எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு எழுதிய "சென்றுபோன நாட்கள்" எனும் கட்டுரையில் காணலாம். இந்தப் பாடல் சிவாஜி தன் சைனியத்தாருக்குக் கூறியதாக எழுதப்பட்டிருந்தாலும், ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக போராட நாட்டு மக்களைத் தூண்டுவதாகத்தான் அமைந்திருந்தது. இப்போது அந்தப் பாடலைப் பார்ப்போம்.

"ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம்!
ஜய ஜய மாதா! ஜய ஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!"

சிவாஜி வாழ்ந்தது 17ஆம் நூற்றாண்டு. வந்தே மாதரம் கோஷம் எழுந்தது 19ஆம் நூற்றாண்டில். சிவாஜியின் குலதெய்வமான பவானிக்கு ஜெய கோஷம் எழுப்பிய கையோடு, வந்தேமாதரம் என்று கூறுவதற்குக் காரணம் நிகழ்காலத்துக்கும் அது பொருந்தும் என கூறுவதற்குத்தான். இவ்வாறு ஜய கோஷம் எழுப்பி தன் சேனா வீரர்களையும் தளபதிகளையும் நோக்கி உரையாற்றி அவர்களை வாழ்த்திவிட்டு

"மாற்றலர் தம் புலை நாற்றமே அறியா
ஆற்றல் கொண்டிருந்தது இவ்வரும் புகழ் நாடு!
வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!"

என்று கூறி இந்த நாட்டில் அன்னியன் காலடி வைப்பதைக் கூட பாரத தேவி பொறுப்பாளோ? என்ற கேள்வி எழுப்புகிறான். அதனைத் தொடர்ந்து

"பாரத பூமி பழம்பெரும் பூமி!
நீரதன் புதல்வர்: இந்நினை வகற்றாதீர்!
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர்: இந்நினை வகற்றாதீர்!"

என்று அவர்களுக்குத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறான். பின்னர் இந்த நாட்டின் நதிகள், காடுகள், கடல்கள் மற்றும் இந்த நாட்டின் ஞானச் செல்வங்கள் முதலியவற்றையெல்லாம் புகழ்ந்து பாடிவிட்டு

"பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?
நீரதன் புதல்வர்: இந்நினை வகற்றாதீர்!"

என்று திரும்பத் திரும்ப "நீர் இந்த பாரத நாட்டின் புதல்வர், இந்த நினைவை அகற்றாதீர்" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். இத்தகைய நாட்டை அன்னியர்கள் வந்து அடிமை கொண்டு அடக்கியாண்டு அக்கிரமங்கள் பலவும் புரிந்து வருவதையெல்லாம் சிவாஜி எடுத்துக் கூறிவிட்டு

"மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?
வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து கொல் வாழ்வீர்!
மொக்குள் தான் தோன்றி முடிவ்து போல
மக்களாய் பிறந்தோர் மடிவது திண்ணம்!
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வு கொல்?
மான மொன்றிலாது மாற்றலர் தொழும்பராய்
ஈனமுற்றிருக்க எவன் கொலோ விரும்புவான்?
தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி
நாய் போல் வாழ்வோன் நமரிங் குளனோ?"

இவ்வாறு மக்களுக்கு ஆவேசமூட்டுகிறான். சொத்தையும், சுயநலத்தையும், உயிரையும், பெரிதாக் கொண்டு தேசத்துக்காகப் போராட விரும்பாமல் ஒதுங்கி நிற்கக்கூடியவர்களை யெல்லாம், "ஆண் உருக் கொண்ட பெண்கள்" என்றும் "அலிகள்" என்றும் கடிந்துரைக்கிறான். தாய் நாட்டுக்காகப் போராட முன்வருவோரை மட்டும் தன்னுடன் இருக்கச் சொல்லுகிறான்.

"தேவி தாள் பணியும் தீரர் இங்கு இருமின்!
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்
வாளுடை முனையிலும், வயந்திகழ் சூலினும்
ஆளுடைக் கால்கள் அடியிலும், தேர்களின்
உருளையின் இடையினும், மாற்றலர் தலைகள்
உருளையிற் கண்டு நெஞ்சு உவப்புற வம்மின்!
நம் இதம், பெறுவளம் நலிந்திட விரும்பும்
*சும்பரை வேரறத் தொலைத்த பின்னன்றோ
ஆணெனப் பெறுவோம்! அன்றி நாம் இறப்பினும்
மாணுறத் தேவர் மணியுலகு அடைவோம்."

இவ்வாறு கூறிவிட்டு:

"போரெனில் இது போர்! புண்ணியத் திருப் போர்!
பாரினில் இதுபோல் பார்த்திடற் கெளிதோ?
ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே;
நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம் யாம்!

(*இந்தப் பாடல் பாரதி பிரசுராலயப் பதிப்பில் முதன் முதலில் 1937இல் வெளியிடுவதற்கு முன் திருநெல்வேலியிலிருந்து ப.ராமஸ்வாமி அய்யங்கார் நடத்தி வந்த 'உதய பாரதி' எனும் மாத இதழில் 1927இல் வெளிவந்தது. பின்னர் பாரதிதாசன் புதுவையிலிருந்து வெளியிட்டு வந்த "ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம்" எனும் மாத சஞ்சிகையில் 1935இல் மீண்டும் வெளிவந்தது. இவ்விரண்டு இதழ்களிலும் *சும்பர் என்ற சொல்லே காணப்படுகிறது. ஆனால் பின்னர் வந்த பதிப்புகளில் சும்பர் எனும் சொல்லுக்கு பதிலாக (வன்மியை) என்று அடைப்புக் குறிக்குள் கொடுத்திருக்கின்றனர். ஒரு வேளை சும்பர் எனும் சொல் நாகரிகமான சொல் அல்ல எனக் கருதி அகற்றிவிட்டார்கள் போலும்; என்றாலும் பாரதி உபயோகப் படுத்தியுள்ள சொல் "சும்பர்" தான். -- தொ.மு.சி.ரகுநாதன்)

நாட்டுக்காக ரத்தம் சிந்துவதே மகா யாகம், யக்ஞம் என்று சிவாஜி சொல்வதாக பாரதி கூறுகிறான். அதன் பின் பாரதப் போரில் அர்ஜுனன் மனம் தளர்ந்த போது அவனுக்குச் சாரதியாக வந்த கண்ணன் கீதோபதேசம் செய்து, அறிவினைத் தூண்டி, அர்ஜுனனைப் போரில் ஈடுபடுமாறு செய்த வரலாற்றைக் கூறுகிறான்.

"விசயன் அன்றிருந்த வியன்புகழ் நாட்டில்
இசையு நற்றவத்தால் இன்று வாழ்ந்திருக்கும்
ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்
தேரில், இந்நாட்டினர்; செறிவுடை உறவினர்
நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்
செம்மை தீர் மிலேச்சர்; தேசமும் பிறிதாம்
பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
சிறப்புடை ஆரியச் சீர்மையை அறியார்..."

என்று பாடிக்கொண்டு வரும்போதே பாட்டு முற்றுப் பெறாமல் நின்று விடுகிறது. 'அர்ஜுனன் அன்று எதிர்த்துப் போராட நேர்ந்ததோ இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்; மேலும் அவனது உறவினர்கள். ஆனால், இன்று நமக்கு எதிரிகளாக உள்ளவர்களோ வேற்று நாட்டைச் சேர்ந்த அன்னியர்கள்; பிறப்பிலும், பேச்சிலும், நடையிலும், உடையிலும், நாகரிகத்திலும் நமக்கு அன்னியமானவர்கள்' என்று கூறத் தொடங்கிய பாரதி, இதன் பின் என்ன பாட எண்ணியிருந்தானோ நாம் அறியோம்.

மகாகவி பாரதியே இந்தப் பாடலைப் பற்றி 'இந்தியா'வில் எழுதிய குறிப்பில், இது "சிவாஜி மகாராஜன் தமது படைகளை நோக்கிக் கூறியதாகக் கற்பனை புரிந்து" எழுதப்பட்ட பாடல் என்று குறிப்பிட்டிருக்கிறான். உண்மையில், பாரதி இந்தப் பாடலை எழுதுவதற்கு சிவாஜி தன் சேனையை நோக்கி ஆற்றிய சொற்பொழிவு என்ற சரித்திர ஆதாரம் எதுவும் இல்லை. 15-6-1897 அன்று பால கங்காதர திலகரின் 'கேசரி' பத்திரிகையில் வெளிவந்ததும், அரசாங்கத்தால் ஆட்சேபகரமானது என்று கொள்ளப்பட்டதுமான "சிவாஜி கூறியவை" எனும் கட்டுரை கூட, மாண்டுபோன சிவாஜி தன் சமாதியிலிருந்து வெளிவந்து தன் மக்களை நோக்கிக் கூறியதாகவே இருந்தது. ஆனால் அன்னியர்களான ஆங்கிலேயர்களை எதிர்த்து, ஆயுதந்தாங்கி ஒரு பெரும் போரை நடத்துவதே விடுதலைக்கான மார்க்கம் என்று உணர்த்த விரும்பிய பாரதி, ஒளரங்கசீப்பை எதிர்த்துச் சிவாஜி போர் புரிந்த சரித்திரப் பின்னணியைப் பயன்படுத்திக் கொண்டு வேண்டுமென்றே சிவாஜி தன் சேனாவீரர்களை நோக்கிக் கூறிய சொற்பொழிவாகக் கற்பனை புரிந்து தனது பாடலை எழுதத் துணிந்திருக்கிறான். இந்தப் பாடல் 1906 நவம்பர் - டிசம்பர் மாதங்களில் எழுதி வெளியிடப்பட்டுள்ளது பாரதி 1906 டிசம்பர் இறுதியில் நடந்த கல்கத்தா காங்கிரசுக்குப் பிரதிநிதியாகச் செல்வதற்கு முன்பே, அவனுக்கு இப்படிப்பட்ட போராட்ட முறைகளில் எவ்வளவு ஈடுபாடு இருந்தது என்பதை, சிவாஜி பற்றிய அவனது பாடல் வெளிவருவதற்கு முந்திய செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அவன் 'இந்தியா' பத்திரிகையில், 'ஸ்வர்ண வங்காள' (ஸோனார் பங்களா) இயக்கத்தின் சுற்றறிக்கையையும், 'ஹிந்து ஸ்வயராஜ்யம்' பத்திரிகையில் வெளிவந்த புரட்சிக்கு அறைகூவல் விடுக்கும் கட்டுரையையும் மறுபிரசுரம் செய்த உண்மையிலிருந்து நாம் ஏற்கனவே தெரிந்து கொண்டுள்ளோம். சொல்லப் போனால், ஹிந்து ஸ்வராஜ்யம், ஸ்வர்ண வங்காள இயக்கத்தின் சுற்றுப் பிரசுரம் மற்றும் 'யுகாந்தர்' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் ஆகியவை அன்னியருக்கு எதிரான புரட்சியின் அவசியத்தை எத்தனை உணர்ச்சிகரமாகவும், உத்வேகமாகவும் எடுத்துக் கூறினவோ, அத்தனை உணர்ச்சியும் உத்வேகமும் ஆத்திரமும் ஆவேசமும் இந்த ஒரே கவிதையில் பொங்கி பிரவகிக்குமாறு, அவற்றில் இடம்பெற்ற கருத்துக்களின் திரட்சியாகவே, பாரதி இந்தக் கவிதையைக் கனல் கக்கும் எரிமலையாகப் படைத்து விட்டான். உண்மையில் பாரதி படைத்துள்ள சிவாஜி பற்றிய இந்தக் கவிதை அன்னியரை எதிர்த்து மாபெரும் போருக்குத் தயாராகுமாறு இந்த நாட்டின் இளைஞர்களுக்கு உணர்ச்சியும் உத்வேகவும் ஊட்டும் விதத்தில் அறைகூவல் விடுத்த போர்ப்பரணியாகவே, போர் முழக்கமாகவே இருந்தது என்பதை 1962இல் இந்திய நாட்டின் மீது சீனர்கள் படையெடுத்த காலத்தில், சீனப் படையெடுப்புக்கு எதிரான நமது போரின்போது, பாரதியின் இந்தப் பாடலிலிருந்து எடுத்த பல வரிகளையே, தமிழக அரசாங்கமும் பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் பிரச்சாரக் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நினைவூட்டிக் கொள்ளலாம்.

மேற்கண்ட புரட்சியாளர்கள் தவிர 'யங் இத்தாலி' எனும் புரட்சி இயக்கத்தின் நாயகன் மாஜினி பற்றியும் பாரதி சிறப்பானதொரு கவிதையை எழுதியிருக்கிறார். மாஜினி பற்றிய பாரதி பாடலை முடிந்தால் வேறொரு பாடத்தில் கொடுக்க முயற்சி செய்கிறோம். இந்தப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'குரு கோவிந்த சிங்' மற்றும் 'சத்ரபதி சிவாஜி தன் சைனியத்துக்குச் சொன்னது' பாடலையும் முழுமையாகப் படித்துப் பார்த்து இன்புறுங்கள். இனி அடுத்த பாடத்தில் சந்திப்போம்.

வினாக்கள்.

1. 'வந்தேமாதரம்' பாடலை பங்கிம் சந்திரர் எழுதிய சந்தர்ப்பம் எது?
2. பாரதத்தாய் அன்னை வடிவில் இருந்து பேயாக எப்போது மாறுவாள் என்று பாரதி
கூறுகிறார்?
3. குரு கோவிந்த சிம்ஹ விஜயம் எனும் பாடல் நூல் வடிவில் வெளியான சந்தர்ப்பம் எது?
4. குரு கோவிந்த சிங் சீக்கியர்களை ஒன்று திரட்டி விடுத்த வேண்டுகோள் என்ன?
5. சத்ரபதி சிவாஜி மஹராஜ் அன்னியர் ஆட்சியை எதிர்த்து மக்களுக்கு ஆவேசமூட்டும் வகையில் கூறிய வாசகங்கள் எவை?
6. குரு கோவிந்த சிங், சத்ரபதி சிவாஜி போன்ற வீரர்களைப் போற்ற வேண்டியதின் அவசியம்
குறித்து சிறு கட்டுரை வரைக:

No comments:

Post a Comment

You can send your comments