Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, April 20, 2010

தமிழிலக்கிய மரபில் பாரதியார்


திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
இணைந்து நடத்தும் அஞ்சல் வழிப்பயிற்சி - பாடம் தமிழிலக்கிய மரபில் பாரதியார்
முனைவர் இரா. கலியபெருமாள்.
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி, தஞ்சாவூர்

(மகாகவி பாரதியார் பண்டைய தமிழ் மரபு, இலக்கிய இலக்கண மரபுகளின்படி பாடிய கவிஞரா அன்றி சாதாரண நாட்டுப்புற பாடல்களை புனையும் கவிஞரா என்ற பேச்சு சிலரால் பல காலத்துக்கு முன்பு எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது. இன்று அத்தகைய விவாதங்கள் முற்றிலும் மறைந்து போனாலும், அந்நாளில் அத்தகைய கருத்து பரப்பப்பட்டு விட்டதால் விட்டகுறை தொட்டகுறையாக ஒருசிலர் மத்தியில் இன்னமும் அதன் தாக்கம் விஞ்சி நிற்கிறது. மகாகவி பாரதி தமிழிலக்கிய மரபில் வந்து, பண்டைய இலக்கிய இலக்கண முறைகளை நன்கு கற்று அதன் வழியில் நின்று பாடியவர் என்பதை நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி பேராசிரியர் முனைவர் இரா. கலியபெருமாள் அவர்கள் இந்தக் கட்டுரையில் நிலைநாட்டி யிருக்கிறார். திருவையாறு பாரதி இயக்கம் தனது வெள்ளிவிழா ஆண்டையொட்டி, மாதம் ஒரு கூட்டம் நடத்தி அதில் பல்வேறு தலைப்புக்களில் அறிஞர் பலரை உரையாற்றச் செய்தார்கள். அதில் ஒரு மாத உரையாக முனைவர் இரா.கலியபெருமாள் நிகழ்த்திய உரையின் சாரம்தான் இந்த மாதம் பாடமாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. முனைவர் இரா. கலியபெருமாள் அவர்கள் பல இலக்கிய வகுப்புகளை ஆண்டுக் கணக்கில் நடத்தி வருபவர்.

பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1935இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்று செய்தியும் பாரதி தமிழிலக்கிய மரபில் வந்தவர் என்ற கருத்தை வலுப்படுத்த உதவும் என்பதால் அந்தச் செய்தியை முதலில் மிகச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம். "நான் கண்ட பெரியவர்கள்" என்ற தலைப்பில் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தனது ஆசானான 'பாஷா கவிசேகர' மகாவித்வான் ரா. இராகவையங்கார் சுவாமிகள் பற்றி ஓர் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இவர் கூறும் ஒரு பகுதியைக் கீழே தருகிறோம்.)

"1935இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் என்பவற்றை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டு மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றேன். இயற்பியலில் இயல்பாகவே எனக்கொரு ஈடுபாடு இருந்தது. அத்துறையின் தலைவராக இருந்த திரு எஸ்.ஆர்.ராவ் இயற்பியல் ஆனர்சில் சேருமாறு என்னிடம் கூறினார். எனவே இயற்பியல் ஆனர்சில் சேர்ந்துவிட்டேன். .....

நாவலர் சோமசுந்தர பாரதியார் எனது தந்தையாருக்கு ஒரு கடிதம் எழுதினார். "உங்கள் மகனே தமிழ் எம்.ஏ. படிக்க வராமல் இயற்பியலில் சேர்ந்துவிட்டால், யாரைக் குறை சொல்வது?" என்று. நாவலர் சோமசுந்தர பாரதியாரும் எனது தந்தையும் என்னைத் தமிழ்த்துறைக்கு மாற்றவேண்டும் என்ற முடிவில் இருந்தார்கள். நாவலர் பாரதியார் என்னை அழைத்து "நீ தமிழுக்கு வந்துவிடப்பா!" என்றார். அதற்கு "திரு ரா.இராகவையங்கார் சுவாமிகள் பாடம் எடுப்பதானால் வருகிறேன்" என்றேன். அவ்வாறு சொல்வதற்கு ஒரு காரணமிருந்தது. திரு சுவாமிகள் ஆராய்ச்சித் துறையில் தலைமை வகித்தாரே தவிர தமிழ் துறைக்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. என்னை அனுப்பிய பிறகு நாவலர் பாரதியார் சுவாமிகளை அழைத்து வைத்துகொண்டு, என்னையும் வருமாறு பணித்தார். நான் இருக்கும்போதே என்னுடைய வேண்டுகோளைச் சுவாமிகளிடம் கூறிவிட்டு, நான் இன்னாருடைய மகன் என்பதையும் நினைவுபடுத்தினார். அதைக் கேட்ட சுவாமிகள் "பாரதி! என் நண்பர் முதலியார் மிகப் பெரிய அறிவாளி என்பது தெரியும் அதனால் அவருடைய மகனும் அவ்வாறு இருப்பானென்று எங்கே சொல்லியிருக்கிறது? என்றார். அப்பொழுது பாரதியார் "சரி சுவாமி, ஒரு நாளைக்குப் பாடமெடுத்துப் பாருங்கள் அவன் இப்பொழுது இயற்பியலில்தான் இருக்கிறான். நீங்களே விரும்பி ஒரு பாடம் எடுப்பதானால் அவன் தமிழுக்கு வருவான்" என்று கூறியவுடன், "சரி!" என்று கூறிவிட்டு சுவாமிகள் போய்விட்டார். (பிறகு அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் தமிழ் எம்.ஏ.வில் சேர்கிறார். ரா.இராகவையங்கார் சுவாமிகள் பாடம் எடுக்கிறார்.) அந்த நிலையில் ...

தினந்தோறும் மாலை நான்கரை மணிக்குத் தன் தடிக்கம்பை ஊன்றிக்கொண்டு சுவாமிகள் வருவதை, அந்தக் கைத்தடி சிமெண்டுத் தரையில் பட்டு டொக் டொக் என்று ஒலியெழுப்புவதை வைத்தே அறியமுடியும். ஒரு நாள் நான்கரை மணியாகியும் சுவாமிகள் வரவில்லை. அவர் காலந்தாழ்த்தி வரக்கூடும் என்று நினைத்த நான் ஆசிரியருக்குரிய நாற்காலியில் அமர்ந்துகொண்டு பெருங்குரலில் "சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்" என்ற பாட்டைப் பாடிக்கொண்டிருந்தேன். திடீரென்று சுவாமிகள் வகுப்பினுள் நுழைந்துவிட்டார். டொக் டொக் சத்தம் கேட்காததால் ஏமாந்துவிட்டோம். காரணத்தைப் பின்னர் அறிந்தோம். அவர் பயன்படுத்தும் கைத்தடியின் அடியில் ரப்பர் வைத்துக் கட்டிவிட்டதால் சத்தம் எழவில்லை. அவரைக் கண்டவுடன் பதைபதைப்புடன் எழுந்து பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தோம். என் குரலை நன்கு அறிந்திருந்த சுவாமிகள் "முதலியார் மகனே! யார் பாட்டுடா அது?" என்று கேட்டார். அது பாரதியாருடைய பாடல் என்று விடையிறுத்தேன். சுவாமிகள் "ஏண்டா! அரசாங்கத்துக்கு விரோதமா நாட்டுப் பாடல்கள்தான் பாடியிருக்கிறான் பாரதின்னு நினைச்சேன், இப்படிக்கூடப் பாடியிருக்கிறானா? இன்னும் சில பாடல்களைச் சொல்லு" என்றார். நான் மேலும் பாடிக்கொண்டிருந்தேன். "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்" என்று தொடங்கும் பாடலில் வரும்

"பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்ற பகுதியைப் பாடும்போது கண்ணீர் வடிக்கத் தொடங்கிய சுவாமிகள், கண்ணீரும் கம்பலையுமாகவே கேட்டுக் கொண்டிருந்தார். பாட்டை நிறுத்தியவுடன் "அடேய்! நம்மாழ்வார் பாட்டுத் தெரியுமா உனக்கு! இதே கருத்தை

"நண்ணாதார் முறுவலிப்ப நள்ளூற்றார் கரைந்து ஏங்க
எண்ணாராத் துயர் விளைக்கும் இவையன்ன உலகியற்கை" (2502)

என்ற பாடல்தான் 'பஞ்சமும் நோயும்' என்ற சொற்களில் வெளிப்படுகிறது" என்றார்.

"காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா"

என்ற பகுதியைப் பாடியவுடன், "இதே கருத்தை நம்மாழ்வார் ஒரு பாடலில் பாடியுள்ளார்" என்று கூறிவிட்டு அந்த அடிகளையும் எடுத்துச் சொன்னார்: அவை:

"மண்ணையிருந்து துழாவி 'வாமனன் மண்ணிது என்னும்
விண்ணைத் தொழுதவன் மேவு வைகுந்த மென்றுகை காட்டும் - (நம். 2447)

"அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும்; மெய் வேவாள்" - (நம் 2449)

சைவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நம்மாழ்வரைப்பற்றியோ அவர்கள் பாடல்கள் பற்றியோ ஒன்றும் தெரியாது.

(அதன் பின்னர் அன்றிரவு துணை வேந்தரின் கார் மாணவர் விடுதிக்கு வந்து அ.ச.ஞா.வை அழைப்பதாகக் கூறி கார் டிரைவர் அழைத்துச் சென்றார். பின்னர் நடந்தவற்றை அ.ச.ஞா.வின் வாக்கால் கேட்போம்.)

துணை வேந்தர் எனக்கு மிகவும் பழக்கமானவர். 'அடே! கம்மனாட்டி' என்றுதான் என்னை அழைப்பார். உள்ளே நுழைந்தவுடன் இந்தச் செல்லப் பெயரில் என்னை அழைத்து "நீ சுவாமிகளுக்கு ஏதோ பாரதி பாட்டுப் பாடிக்காட்டினாயாமே! அதைக் கேட்டுச் சுவாமிகள் மிகவும் உருகிப் போய்விட்டார். எங்கே அதைத் திரும்பிப் பாடு" என்றார். எதிரே அமர்ந்து பாடினேன். எதிரேயிருந்த இருவரும் பெரு மூப்படைந்தவர்கள்; ஆனாலும் என்ன! இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தது. ஒருவர் தமிழறிஞர். உலகம் தலைமேல் வைத்துக் கொண்டாடும் மூதறிஞர்; மற்றொருவர் உலகம் முழுவதும் போற்றும் மாபெரும் அரசியல்வாதி, துணைவேந்தர் மகாகனம் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியார் அவர்கள் - இந்த இரண்டு மேதைகளும் கண்ணீர் பெருகப் பாரதியின் பாடல்களைக் கேட்டது எனக்கு வியப்பைத் தந்தது.

1938இல் பாரதியின் நாட்டுப் பாடல்கள் மட்டும்தான் மக்களால் ஓரளவு அறியப் பெற்றிருந்தன. ஏனைய பாடல்கள் சிறுசிறு நூல்களாக வந்திருந்த போதிலும் அவற்றை யாரும் விரும்பிப் படிப்பதில்லை. அன்றியும் அன்றைய தமிழ்ப்புலவர்கள் பாரதியை ஒரு கவிஞனாக நினைத்ததேயில்லை. மரபுக் கவிதைகளைத் தவிரப் பிறவற்றை அவர்கள் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் இப்பெருமக்கள் இருவரும் பாரதியின் பாடல்களை வழிந்தோடும் கண்ணீருடன் கேட்டது பெருவியப்பை தந்தது. இரண்டு மாமனிதர்களைச் சந்தித்ததாக அன்று நான் புரிந்துகொள்ளவில்லை. அறுபது ஆண்டுகள் கழித்து இப்போது அதனை உணர்கிறேன்".

இந்த வரலாற்றுச் செய்தியுடன் முனைவர் இரா.கலியபெருமாள் அவர்களுடைய கட்டுரையை உங்களுக்கு அளிக்கிறோம். படித்து இன்புறுங்கள்.)

ooooOOOoooo

"வண்டமிழ் மூவர்" எனத் தொல்காப்பியராலும் "மூன்று குலத் தமிழ் மன்னர்" எனப் பாரதியாராலும் போற்றப்பெற்ற மூவேந்தர்களால் ஆளப்பெற்ற இத்தமிழகத்தில், "ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்த" தமிழ் மொழியில் பாட்டும் உரையுமாகப் பல்கி வழங்கி வந்த இலக்கியங்கள் பலப்பல. அவற்றுள் காலக் கேட்டால் அழிந்தன போக எஞ்சி நின்றவற்றைப் பண்டைச் சான்றோர்கள் பாட்டும் தொகையும் எனத் தொகுத்துப் பேணிக் காத்தனர். அவைதாம் இற்றைய நாள் தமிழர்க்குள்ள அளப்பரிய கருவூலங்களாகும். அவ்விலக்கியங்கள் அகப்பொருள் சார்ந்தவை என்றும், புறப்பொருள் சார்ந்தவை எனவும் இருவேறு வகையின. பாடுபொருள்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கியங்களைப் பகுத்ததோடு அன்றி அவற்றை அடி வரையறை கொண்டும், திணை வரையறை கொண்டும், பாவகை கொண்டும், பாக்களின் எண்ணிக்கை கொண்டும், பாக்களின் நடை அமைதி நோக்கியும் வேறு வேறு பெயரிட்டு வழங்கினர். இதனை அவ்விலக்கியங்களின் பெயர்களைக் கேட்ட மாத்திரையானே அனைவரும் அறிவர்.

இவ்வாறாய் அமைந்து நடந்தியங்கிய தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுணர்ந்து தமிழ்ப் புலமையில் ஆழங்கால்பட்டு நின்ற கவிஞருள் ஒருவர்தான் அமரகவி சி.சுப்பிரமணிய பாரதியார் ஆவார். அவரின் இலக்கண புலமையையும், இலக்கிய நுகர் திறனையும், பாடும் திறனையும், படைக்கும் ஆற்றலையும் ஓரோ வழி அவரின் படைப்புகளைக் கண்டோரும் அறிவர். பண்டை நாள் தமிழ் இலக்கியங்கள் எப்படி உரை, பாட்டு, உரைப்பாட்டு என்று முத்திறத்தனவாய் மூன்று வேறு வடிவங்களில் ஒளிர்ந்தனவோ அப்படியேதான் பாரதியாரின் இலக்கியங்களும் பொலிகின்றன. அவற்றுள் உரை தவிர்ந்த ஏனைப் பாட்டும், உரைப் பாட்டும் பாரதியாரின் படைப்புகளில் மரபு வழிப்பட்ட இலக்கியப் பாங்கில் நின்று நிலவுகின்றன என்பதைக் காண முயல்கிறது இக்கட்டுரை. உரைப்பாட்டு என்பது ஆசிரியரால் வசனகவிதை எனப் பெயரிடப் பெற்று தனிப்பகுதியாய் இயல்கிறது. எனவே, ஏனைய பாட்டைப் பற்றியதாக மட்டுமே இக்கட்டுரை அமைகிறது.

பாரதியார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவிலும் இருபதாம் நூற்றாண்டின் முதலிலும் வாழ்ந்தவர் ஆவார். தாம் பிறப்பதற்கு முன் தோன்றித் தமிழ்த் தொண்டாற்றிய பெரியோர்கள் வழிகளைப் பின்பற்றியதோடு தம் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், தம் படைப்புகளில் பதிவு செய்துவிட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அந்தப் பணியினை பாரதியார் செம்மையாகவே செய்துள்ளார். மற்றை நாள் கவிஞருக்குப் போலன்றி இவரின் தோள் மீது புதுப்புது சுமைகளைக் காலம் சுமத்தியது. மரபு நிலையில் இருந்து மாறிப் போய் விடாமலும் நல்லனவாய் தமக்குத் தோன்றிய புதிய மாற்றங்களை ஏற்பதிலுமாக இவரின் தமிழ்ப்பணி நடந்தது என்பதை நினைவில் போற்றல் வேண்டும்.

இதனை "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் தாய்மொழிக்குப் புத்துயிர் தருவோன் ஆகிறான்" என்றும் "காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்" என்றும் இவர் எழுதியுள்ள 'பாஞ்சாலி சபத'க் காவியத்தின் முன்னுரை நமக்கு இவரின் எண்ணத்தினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

மேலும் இவர் எழுதியுள்ள 'பாஞ்சாலி சபத'க் குறிப்புரைகளில் "பழமையிலே பெரும்பகுதி உயர்வு சான்றதுதான். அதிலும் பாரத தேசத்தினராகிய நம்மவரின் நடைகள் அறிவும் திறனும் பொருந்தியனவாகும். ஆயினும் இழிந்த அமானுஷீக நடைகள் சில இவற்றோடு கலந்துள்ளன .... லோகக்ஷேமத்திற்கும், லோகாபிவிருத்திக்கும் இந்த 'மாமூல்' பக்தி எத்தனை பெரிய இடையூறு என்பதை நம்மவர்கள் இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை" என்ற பகுதியிலும் பழமை புதுமை பற்றிய இவரின் கோட்பாடு தெற்றெனத் தெரிகிறது. மேலும் தமிழ் நாட்டையும், இந்திய நாட்டையும் பற்றி

"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" என்று தொல்காப்பியப் பாயிரமும்
"தென்குமரி வட பெருங்கல்" எனப் புறநானூறும்
"குமரியொடு வட இமயம்" எனப் பதிற்றுப் பத்தும்
"வேங்கடம் குமரித் தீம்புனல் பெளவம்"
"நெடியோன் குன்றமும் தொடியோன் பெளவமும்"

எனச் சிலப்பதிகாரமும் சுட்டிச் செல்லும் பான்மையைக் கற்றுணர்ந்த பாரதியார் தம்முடைய படைப்புக்களில்

"நீலத்திரைக் கடலோரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு" எனத் தமிழகத்தையும்

"வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரியடி பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - அதன்
கிழக்கிலும்மேற்கிலும்பாப்பா" என இந்திய நாட்டையும் பாடியுள்ள திறலும்

"ஆதியில் தமிழ் நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகன்" எனத் தொல்காப்பியச் சொல்லதிகாரச் சேனாவரையரின் வாழ்த்துச் செய்யுளும்

"தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்"
"என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான்" எனக் கம்பரும் தந்துள்ள - தமிழ், சிவன், அகத்தியன் தொடர்பான தரவுகளின் வழிநின்று பாரதியாரும்

"ஆதி சிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரியமைந்தன் அகத்தியன் என்று"
எனத் தமிழ்த்தாயின் கூற்றாகத் தம்முடைய கவிதையினில் பாடியுள்ள பாங்கும் இவரின் தமிழ் மரபின் மீதுள்ள பற்றினை நமக்குக் காட்டுகிறது.

இனி தமிழில் உள்ள மரபுவழிப்பட்ட இலக்கிய வகைகளையும் அவையிவற்றைப் பாரதியார் பின்பற்றிப் புத்திலக்கியங்கள் படைத்தவற்றையும் காணலாம்.

மாலை, அந்தாதி, தூது, பள்ளு, சீட்டுக்கவி, பள்ளிஎழுச்சி, மொழிபெயர்ப்பு எனப் பெயரிய இலக்கிய வகையினைப் பாரதியார் படைத்துள்ளார்.

மாலையும் அந்தாதியும்:

அந்தாதி என்ற பெயரில் அவர் பாடல்கள் இயற்றாவிடினும், அந்தாதி இலக்கணம் அமையப் பாடிய இலக்கியங்கள் அவர் படைப்புக்களில் காணப்படுகின்றன. விநாயகர் நான்மணிமாலை, பாரதமாதா நவரத்ன மாலை என்ற இரண்டு மாலை நூல்களை அந்தாதி அமையப் பாடியுள்ளார். இது ஐங்குறு நூற்றுத் தொண்டிப் பத்தினையும், பதிற்றுப் பத்தின் நான்காம் பத்தினையும் நமக்கு நினைவூட்டுகிறது.

இவற்றுள் விநாயகர் நான்மணி மாலையை வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம், அகவல் என்னும் நால்வகைப் பாக்களையே மணிகளாகக் கொண்டு மாலையாகத் தொகுத்துள்ளார். வகை ஒன்றினுக்குப் பத்து பாடல்களாக நாற்பது பாக்களால் தொகுக்கப்பட்ட ஒரு பாமாலையே இந்நூலாகும். இவருக்கு முன் வாழ்ந்த கவிஞர்களால் பல நான்மணி மாலைகளும், மும்மணிக் கோவைகளும் எழுதப் பெற்று வழங்கி வந்தமை வெள்ளிடை.

இப்பாவகையில் வெண்பா யாப்பதும் கட்டளைக் கலித்துறைப் பாக்கள் இயற்றுவதும் யாப்பிலக்கணங்களைப் பழுதறக் கற்றுப் பலமுறை பாக்கள் எழுதிய பயிற்சியுடையார்க்கன்றி ஏனையோர்க்குக் கைவாராப் பான்மையனவாகும் என்பதனை அறிந்தோர் அறிவர்.

"காசினியில் பிள்ளைத் தமிழுக் கம்புலி புலி
பேசும் உலாவில் பெதும்பைப் புலி - ஆசு
வலவர்க்கு வண்ணம்புலி மற்றெல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி" என்ற தனிச் செய்யுளும்

"அடியடி தோறும் ஐஞ்சீராகி
முதற்சீர் நான்கும் வெண்டளையாகிக்
கடையொரு சீரும் விளங்காயாகி
நேர்பதி நாறே நிரை பதினேழ் என்று
ஓதினர் கலித்துறை ஓரடிக்கெழுத்தே"

என்று யாப்பதிகார நூற்பாவும் மேற்படிச் செய்யுள்கள் எழுத்தெண்ணிப் பாடப்படுபவை என்பதை உணர்த்துவனவாகும். இத்துணை சிறப்பு வாய்ந்த கவிகளை எழுதுவது பாரதியார் போன்ற வரகவிகட்கே வாய்ந்தவொரு பேறாகும் என்க.

அதைப் போலவே பாரதமாதா நவரத்ன மாலையும் ஒன்பது வகையான பா வடிவங்களைக் கொண்டு தொடுக்கப் பெற்றதாகும்.

வெண்பா, கலித்துறை, எண்சீர்கழிநெடிலடி விருத்தம், ஆசிரியப்பா, தரவு கொச்சகக் கலிப்பா, வஞ்சிவிருத்தம், கலிப்பா, அறுசீர் விருத்தம், எழுசீர்க்கழிநெடிலடி விருத்தம் என்பவையே அப்பாமணிகள் ஆகும்.

தூதும் பள்ளும்:

இவை இரண்டும் சிற்றிலக்கிய வகையினைச் சேர்ந்தவையாகும். இவ்விலக்கிய வகைக்கென ஓதப்பெற்ற இலக்கண வழி நின்று பாரதியார் முருகக் கடவுள் மீது கிளித்தூது பாடியுள்ளார். "சொல்ல வல்லாயோ கிளியே" என்ற பாட்டே அஃது. தூது விடற்கு ஏற்ற பொருள்களாக இலக்கணம் கூறும் பொருள்களில் கிளியும் ஒன்றென்பது "அழகர் கிள்ளை விடு தூது" என்ற சிற்றிலக்கியத்தால் விளங்கும். பள்ளு இலக்கியமாகப் பாரதியார் பாடாவிட்டாலும் பள்ளுப்பாட்டும் சுதந்திரப்பள்ளு என்ற தலைப்பினில் அமைந்த பாட்டும் அந்த இலக்கிய வகையினை நினைவூட்டுவதாகக் கொள்ள இடமளிக்கிறது.

திருப்பள்ளி எழுச்சியும், திருத்தசாங்கமும்.

மன்னனையோ, இறைவனையோ காலை வேளையில் நின்றேத்துவோர், இருந்தேத்துவோர், பக்தர்கள் கூடிநின்று துயில் உணர்த்துவதாகப் பாடப் பெறுவதாகும். இது தொல்காப்பியம் காட்டும் துயிலெடை போன்றது. முன்னது துயில் உணர்த்தவும், பின்னது துயிலவும் பாடப் பெறும் பாங்கினது. துயிலுகின்ற பாரதத் தாயினைத் துயில் நீங்கப் பாரதியாரால் பாடப் பெற்றது பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியாகும்.

அவ்வாறே கவிஞன் ஒருவன் தான் வழிபடும் தெய்வத்திற்கு உரிமை உடைத்தான பொருள்கள் பத்தினைத் தேர்ந்து எடுத்து அவற்றினைச் சிறப்பித்துப் பாடுவது திருத்தசாங்கம் ஆகும். பாரததேவியின் திருத்தசாங்கம் என்பது பாரதியின் படைப்பாகும். இப்பகுதியில் பாரதமாதாவின் நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்னும் பத்துப் பொருள்களும் முறையே காம்போதி, வசந்தா, மணிரங்கு, சுருட்டி, கானடா, தன்யாசி, முகாரி, செஞ்சுருட்டி, பிலஹரி, கேதாரம் என்னும் பத்து இராகங்களாய் பாரதியாரால் பாடிச் சிறப்பிக்கப் பெறுகின்றன. பாரத அன்னைக்குப் பாரதியார் பாமாலை சூட்டுவதுடன் பண் மாலையு (இராகமாலிகா) சூட்டிப் பரவும் நயம் பாராட்டற்பாலதாகும்.

இதனோடு கவிஞர் பாடியுள்ள கண்ணம்மா - அங்க வருணனையும் ஒருங்கு வைத்து எண்ணத் தகுந்த பகுதியாகும். இதில் பண்டைய கவிஞரின் பாதாதி கேச, கேசாதி பாத வர்ணனையும் அப்பரடிகளின் திருவங்கமாலை அமைப்பும் பொதிந்திருப்பதைக் காணலாம். மேலும் இறைவனைப் போற்றும் இவ்வருணனை முடி தொடங்கி அடி வரை பாடப் பெறல் வேண்டும் என்ற பான்மை பிழையாது நின்று பாரதியார் பாடியுள்ளார்.

மொழிபெயர்ப்பு:

தொல்காப்பியர் தம்முடைய இலக்கண நூலில் பலவகையான மரபு இலக்கணங்களை வகுத்துள்ளார். அவற்றில் மரபியலில் நூலின் இலக்கணம் வகுக்கத் தொடங்கி முதல் நூல் வழிநூல் பற்றி விளக்குகிறார். வழிநூல் வகையினை விளக்கத் தொடங்கி "தொகுத்தல், வகுத்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு என்று அதர்ப்பட யாத்தது வழிநூல் என்ப" என்று இலக்கணம் வகுக்கிறார். அந்நெறியில் பாரதியாரின் பாஞ்சாலி சபதம் வழிநூலாக அமைந்து பொலிகிறது. இதனை,

"எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது கற்பனை திருஷ்டாந்தங்களில் எனது 'சொந்த சரக்கு' அதிகமில்லை. தமிழ் நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி" என்று பாரதியாரின் எழுத்தே இக்கருத்துக்கு அரண் செய்கிறது.

இது தவிர பங்கிம் சந்த்ர சட்டோபாத்யாயர் எழுதிய வந்தேமாதரக் கீதத்தின் இரண்டு மொழிபெயர்ப்புகளும், ஜான்ஸ்கர் எழுதிய ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பான "கற்பனையூர்" என்ற கவிதைத் தொகுப்பும் தாகூர் எழுதிய ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பான "நாட்டுக் கல்வி" என்ற பாடல் தொகுப்பும் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்குள் வைக்கப்பட வேண்டிய தனிப் பாடல்களாகப் பொலிகின்றன.

ஆத்திசூடியும் சீட்டுக்கவியும்.

பாரதியாருக்கு மிகவும் பிடித்த பெண் புலவர் ஒளவையார் ஆவார். ஒளவை மொழி அமிழ்தம் என்றும் பண்டாய்ச்சி அவ்வை என்றும் சிறப்புறுத்துவார். "எதை வேண்டுமானாலும் இழக்கலாம் அவ்வை பாட்டுக்களுக்காக" என்பது பாரதியாரின் உள்ளம். ஒளவையாரின் ஆத்திசூடி இலக்கிய வகை பாரதியாருக்கு மிகவும் பிடித்தவையாகத் தோன்றியதாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றலுடையது இப்பா வடிவம் ஆகையாலும் பாரதியாரும் ஒளவையார் வழி நின்று ஆத்திசூடி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு கவிஞன் பிறருக்காகவோ, தனக்காகவோ பொருள் வேண்டி வள்ளல் ஒருவனுக்கு கவிதை வடிவில் கடிதம் எழுதுவது சீட்டுக்கவி மரபாகும். இப்பாவில் எழுதும் கவிஞன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளல் தகும் என்பதும் மரபு வழிப்பட்டதாகும். இதனைப் பாரதியார் சீட்டுக் கவி என்றும் ஓலைத்தூக்கு என்றும் பெயரிட்டு அழைப்பார். பா, பாட்டு, பாடல், கவி, கவிதை, செய்யுள், தூக்கு இச்சொற்கள் எல்லாம் செய்யுளைக் குறிக்கப் பாரதியார் பயன்படுத்திய பழந்தமிழ்ச் சொற்கள் ஆகும். அவற்றை அவர் பயன்படுத்திய இடங்களை நோக்கி பொருள் வேறுபாட்டினை அறிதல் நிரம்பச் சுவை பயப்பதாகும். பாணபத்திரனுக்கு பொருள் கொடுக்கச் சொல்லி சேரமானுக்குச் சிவன் எழுதிய "மதிமலி" எனத் தொடங்கும் சீட்டுக்கவியே தமிழ் உலகம் கண்ட முதல் சீட்டுக் கவியாகும். இதன் அருமை நோக்கிப் பன்னிரு திருமுறைகளில் பதிந்து கொள்ளப் பெற்றதாகும். அதையும், அது போன்ற பலவகையான சீட்டுக்கவிகளையும் பயின்றுணர்ந்த பாரதியார் இளசை வெங்கடேச இரட்டப்பப் பூபதிக்கு இரண்டு சீட்டுக் கவிகள் எழுதியுள்ளார். இதன் வழியாக கவிஞர் தம்மைப் பற்றியும் தம் கவிதையின் தரம் பற்றியும் தம் புலமைத் திறன் குறித்தும் கொண்டிருந்த எண்ணங்கள் பல வெளிப்படக் கான்கிறோம்.

வாழ்த்துப் பாக்கள்.

"வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வரமொடு வழிவழி சிறந்து
பொலிமின் என்னும் புற நிலை வாழ்த்தே
கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ" - செய்யுளியல் 110

வாழ்த்துப் பாக்களைக் கலிப்பா வகையிலும் வஞ்சிப்பா வகையிலும் பாடுதல் கூடாது என்பது தொல்காப்பியர் விதி. கவிஞர் பாரதியார் பாடியுள்ள வாழ்த்துச் செய்யுள்கள் அத்தனையும் ஆசிரியப்பாவிலும், விருத்தத்தாலுமே அமைந்து பொலிவதுடன் எப்படி வாழ்த்த வேண்டும் என்று தொல்காப்பியம் விதி வகுத்தள்ளதோ அதே பான்மையில் அமைந்துள்ளன என்பது வெளிப்படை.

இரங்கற் பாக்கள்.
"கழிந்தோர் தேஎத்துக் கழிபடர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்"

என்னும் தொல்காப்பிய விதிக்கேற்ப இறந்தோர் மீது இருப்போர் கொண்டிருந்த அன்பு காரணம் மனம் நொந்து பாடப்படுவது கையறு நிலை என்னும் இரங்கல் பாவாகும்.

ஓவியர்மணி இரவிவர்மா மேலும், சுப்பராம தீட்சிதர் மேலும் பாரதியார் பாடல்கள் தொல்காப்பியர் வழிநின்று பாடப்பெற்றவை இவை எனச் சான்று பகரும்.

வஞ்சினப் பாடல்கள்.

"இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்"

"இன்னது செய்வேன் இன்றெனில் இன்னது ஆவேன்" எனச் சூளுரைக்கும் செய்தியினை வெளியிடும் புறத்துறையே வஞ்சினப் பாடல்களாகும்.

அந்த வகையில் பாஞ்சாலி சபதம் காட்டும் வஞ்சின உரைகளும், சிவாஜி தன் சைன்யத்திடம் கூறும் உரைகளும் "இதந்தரு மனையின் நீங்கி" என்ற பாடலும் அமைந்துள்ளன என்பதனைக் கவிதைகளில் காண முடிகிறது.

காப்பிய இலக்கண நெறியும் பாஞ்சாலி சபதமும்.

"பெருங் காப்பிய நிலையே பேசுங்காலை வாழ்த்து வணக்கம்" எனத் தொடங்கும் தொல்காப்பிய இலக்கணங் குறித்த தண்டியலங்கார நூற்பாவில் கண்ட இலக்கணங்களுக்கு ஏற்பக் கடவுள் வாழ்த்துக் கூறி காப்பியக் கதையினை ஐந்து சருக்கங்களாகப் பகுத்துக் கொண்டு நாடு, நகரம், ஆறு, கொடி முதலியவற்றினை முறையாகக் கூறி மாலைக் கால வருணனை போன்றவற்றை விளக்குவதுடன் கவிஞரே கதை சொல்லும் போக்கிலே தானும் ஒரு பாத்திரமாக மாறிக் கவிக் கூற்றாகச் சில சொல்லிக் காவியத்தின் முடிவினைக் கூறும் தன்மை, நூல் கற்பார் அறிய வேண்டிய நீதிகளை உரைக்கும் முறை ஆகியன மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.

பாக்கள் பெயரால் அமையும் இலக்கிய வகை.

பாரத வெண்பா, நளவெண்பா, போற்றித் திருவகவல் போல அமைந்துள்ள சிலவற்றையும் பாரதியார் கவிதைகளில் காண முடிகிறது.

1. மகாசக்தி வெண்பா 2. விடுதலை வெண்பா (அந்தாதி வடிவில் அமைந்தது) 3. இரட்டைக் குறள் வெண்செந்துறை (நான்) 4. இளசை ஒரு பா ஒரு பஃது (பத்து வெண்பாக்களால் ஆனது, இளசை (எட்டயபுரம்) பற்றிக் கூறுவது) 5. போற்றி அகவல் 6. விருத்தம் என்ற தலைப்பில் அடங்கியவை (வாழிய செந்தமிழ், பூபேந்திரர் விஜயம்) 7. ஒரு பொருள் குறித்த ஐந்து பாடல்களால் ஆன பஞ்சகம் (மகாசக்தி பஞ்சகம், மகாத்மா காந்தி பஞ்சகம்) 8. கண்ணிகளால் ஆன பாடல்கள் (தமிழ்க் கண்ணி, கிளிக்கண்ணி, மற்றும் வையம் முழுதும், அறிவே தெய்வம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம், லஜபதிராய் பிரலாபம்) இவ்வகையானவையும் பண்டை மரபின என்பதற்கு தனித்தனியான சான்றாதாரங்கள் உள்ளன.

அகப்பொருள் துறைகளில் பாரதியார்.

பாரதியாரின் கண்ணன் பாட்டு, திருக்கோவையார், திருவாசகம், ஞானசம்பந்தர் தேவாரம், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை மன்னன் பாசுரங்கள் போன்றவற்றில் காணலாகும் நாயக நாயகி பாவங்களைச் சுட்டுவதுடன் காட்சி வியப்பு, நாணிக் கண் புதைத்தல், பாங்கித் தூது, முகத்திரை களைதல், குறியிடம் தவறியது என்பன போன்ற அகத்துறை பற்றிய பாடல்களாகவும் அமைந்துள்ளன. மேலும் இந்நூல் அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகளைக் குறித்து "ரஸம்" என்ற மொழியால் சுட்டுவதும் காணத்தகும். தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் அகத்திணைக்குரியனவாகக் காட்டும் மெய்ப்பாடுகளே அதிகம் பேசப்படுகின்றன.

"காமப்பகுதி கடவுளும் வரையார்", "குழவி மருங்கினும் கிழவதாகும்", "மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே" என்றத் தொல்காப்பிய புறத்திணையியல் நூற்பாக்களின் விதிகளின்படி கடவுளர் மீது கொள்ளும் காதலும், கடவுளரைக் குழந்தைகளாகக் கருதுவதும் அகப்பொருள் பற்றியதாயினும் தலைவனுடைய இயற்பெயர் சுட்டப் பெறுவதும் ஆகிய அனைத்தையும் தன்னுள் கொண்டு தொல்காப்பிய இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்வதும் தெரிய வேண்டிய செய்திகளாகும்.

மேலும் "தனிமை இரக்கம்" என்ற தலைப்பில் அமைந்துள்ள பாரதியாரின் பாடல் காமம் மிக்க கழிபடர் கிளவியாக அமைகிறது. மணி மொழியாளோடு கழித்த நாட்கள் சிலவற்றைத் தெய்வ நாட்கள் என்றும் வளி எனப் பறந்த நாட்கள் என்றும் கூறும் பாரதியார் அவளைப் பிரிந்த நாட்களை "கிரியெனக் கிடந்த முடம்படு தினங்கள்" எனக் கூறுகிறார். "தேவர் மன்னன் மிடிமையைப் பாடல் போல தீயக் கைக்கிளையான் எவன் பாடுகேன்" என்ற பாடலில் கைக்கிளை இலக்கணம் பேசப்படுகிறது. "கைக்கிளைப் பெயர் கொண்ட பெருந்துயர்க் காதல் அஃது கருதவும் தீயதால்" என்ற வரிகளில் கைக்கிளைக் கண்ணீர் வடிக்கிறது.

கண்ணன் பாட்டில் சில பாடல்களும், குயில் பாட்டும் ஒருவகையால் பெருந்திணையாய் அமைந்திடும் தன்மையும் நோக்கற்பாலதாகும்.


பாரதியாரும் பாட்டுக்களும்.

தமிழ் மொழியானது படிக்கவும் பாடவுமான உரைநடைப் பாட்டு என்ற இருவகையினை உடைய ஒரு மொழியாகும். பாட்டு என்பது பாடுவதற்காகவே எழுதப்பெறுவது. அதனால்தான் பாக்களுக்கு செப்பல், அகவல், துள்ளல், தூங்கள் ஓசைகள் வகுக்கப்பெற்றன. ஏந்திசை, ஒழுகிசை, தூங்கிசை என்பனவும் அவற்றின் உட்கூறுகளே.

"இழுக்குடைப் பாட்டிற்கு இசை நன்று" எனும் பழம் பாட்டடியும் இதனை உணர்த்தும். பாரதியார் எழுதிய பாட்டுக்கள் அனைத்தும் அவரே பாடிப் பதம் பார்த்துப் பாடுவதற்காகவே எழுதப் பெற்றவையாகும். அதனால்தான் பெரும்பாலான பாடல்களுக்கு அவரே பண்ணும் தாளமும் தவறாது பதிவு செய்துள்ளார். மேலும் அப்பாடலைப் பாடுவோன் வெளிப்படுத்த வேண்டிய கேட்போன் எய்த வேண்டிய மெய்ப்பாடுகளையும் (ரஸம்) எழுதியுள்ளார்.

பங்கிம் சந்திரரின் பாட்டு இவரால் மொழிபெயர்க்கப் பெற்றபோது தமக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தினைக் கூறும்போது:-

"முன்னொருமுறை முழுதும் அகவலாக ஒரு மொழிபெயர்ப்பு எழுதியிருந்தேன். ஆனால் அது பாடுவதற்கு நயப்படாதாகையால் இப்போது பல சந்தங்கள் தழுவி மொழிபெயர்த்து எழுதப்பட்டிருக்கிறது" என்று எழுதியிருப்பதும், "எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு" எனப் பாஞ்சாலி சபத முன்னுரையில் சுட்டி இருப்பதும், ராகம், தாளம் குறிப்புகள் காட்டப் பெறாத பாட்டுகளுக்குப் பாட வேண்டிய சந்தக் குறிப்புகள் சிலவற்றைத் தந்திருப்பதும், குறிப்பிடத்தக்கவை.

'பாஞ்சாலி சபதம்' (53 - 83) உரைக் குறிப்பில் "நாலடி எண்சீர்ச் சிந்து சம்பாஷணைகள் முதலியவற்றைத் திறமையுடனும் உண்மையுடனும் காட்டுவதற்கு இப்பாட்டின் நடை மிகவும் செள்கரியம் ஆதலைப் பாடிப் பார்த்து உணர்ந்து கொள்க" என்றும் "183 - 195" முடிய உள்ள சிந்துகள் தெருவில் ஊசிகளும் பாசிமணிகளும் விற்பதோடு பிச்சை எடுக்கவும் செய்கின்ற பெண்கள்

"மாயக் காரனம்மா - கிருஷ்ணன்
மகுடிக் காரனம்மா"

என்று பாடும் நடை சூதாட்ட வருணனைக்கும் அதில் ஏற்படும் பரபரத்த வார்த்தைகளையும் செய்கைகளையும் விளக்குவதற்கும் இந்நடை மிகவும் பொருந்தியது என்பது எளிதிலே காணப்படும் என்றும் எழுதியுள்ளார். இதிலிருந்து பாட்டுக்குத் தேவையான ஓசைகளை எங்கிருந்து எப்படித் தேர்ந்து எடுத்துக் கொண்டார் என்பதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

மேலும் சில பாடல்களின் தலைப்பில் 'காவடிச் சிந்து' என்றும், சிலவற்றில் 'நொண்டிச் சிந்து' என்றும், சிலவற்றில் 'தாயுமானவர் ஆனந்தக் களிப்பு' என்றும், சிலவற்றில் 'நந்தனார் சரித்திரத்தில் உள்ள இன்னின்ன பாடல்களின் வருண மெட்டு' என்றும் குறிப்பதிலிருந்தும் பாரதியாரின் பாட்டில் பயனறிவும் திறனும், ஓசை இன்பம் உணர்ந்து அவர் எய்தும் உவமையிலா இன்பமும் உள்ளங்கை நெல்லிக்கனியாம்.

இத்துடன் தெய்வங்களின் மேல் அவர் பாடியுள்ள வேலவன் பாட்டு, முருகன் பாட்டு, வள்ளிப்பாட்டு, கண்ணன் பாட்டு, கோவிந்தன் பாட்டு, ராதைப் பாட்டு, காளிப்பாட்டு, நவராத்திரிப் பாட்டுக்களும் மனிதர் பற்றிப் பாடியுள்ள பண்டாரப் பாட்டு, கோணங்கி, மறவன் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு, அம்மாக்கண்ணுப் பாட்டு, பாப்பாப் பாட்டு, பள்ளுப் பாட்டுக்களும், பறவைகள் மீது பாடியுள்ள கிளிப்பாட்டு, குருவிப்பாட்டு, குயில் பாட்டுக்களும் இவையின்றி இன்னும் பல தலைப்புகளில் இயற்கை, தெய்வங்கள் பற்றியபாடல்களும் பாரதியார் தம் நெஞ்சைப் பாட்டினிலே பறிகொடுத்த தன்மையினைப் பளிச்செனக் காட்டுகிறது.

முன்னோர் வழியில் பாரதியார்.

"முன்னோர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்" என்ற நன்னூல் பொதுப்பாயிரம் காட்டும் வழியில் நின்று நம் மகா கவிஞர்

"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை"
"சாதி இரண்டொழிய வேறில்லை"
"பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே"
"வடகோடிஉயர்ந்தென்ன தாழ்ந்தாலென்ன வான் பிறைக்கே தென்கோடு"
"வாழ்வு முற்றும் கனவு"
"களக்கமறப் பொது நடனம் கண்டு கொண்ட தருணம்"

என்ற பல சான்றோர்கள் பாடியுள்ள பாடல் வரிகளை தக்க இடத்தில் பதிவு செய்துள்ளதோடு அச்சான்றோர்களையும் அவர்களின் படைப்புக்களையும் வேறு யாரும் போற்றாத அளவிற்குப் போற்றியுள்ளார். "யாமறிந்த மொழிகளிலே" எனத் தொடங்கிய கவிஞர் "யாமறிந்த புலவரிலே" என்று கூறும் தன்மையிலேயே பாரதியாரை யாரென நம்மால் உணர முடிகிறது. "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா; யானும் வந்தேனொரு சித்தன் இந்த நாட்டில்" என்ற கவிஞரின் கூற்று இவர் வந்த வழியைக் காட்டுவதாகும்.

தமிழிலக்கிய உலகில் ஒரு புதிய முயற்சி.

இவ்வாறெல்லாம் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நெறியினைப் பற்றி நின்ற பாரதியார் தமிழலக்கிய உலகிற்கு ஒரு புதிய நெற்முறையினை உண்டாக்கித் தந்துள்ளார்.

ஒரு தலைவனோ கவிஞனோ தன்னுடைய வாழ்க்கை வரலாற்றினைத் தானே எழுதுவதென்பது புது முயற்சியாகும். ஓர் இலக்கண ஆசிரியன் வரலாற்றினைப் பாயிரம் எழுதியவர்கள் எழுதியதாகச் சில பல செய்யுள்கள் தமிழில் உள்ளன. ஆனால் தன் வரலாற்றைத் தானே கவிதை வடிவில் யாத்தளித்த பெருமை கவிஞர் பாரதியாருக்கே உண்டு. இந்த முயற்சியினையும் பாரதியார் தொடக்கத்தில் துணிவோடு செய்திடவில்லை. தயக்கத்தோடு வெளிப்படுத்திய இவரின் முயற்சி தமிழ்ச் சான்றோரால் ஏற்றுக் கொள்ளப் பெற்றதாக அவர் வெளியிட்ட குறிப்பின் வழி அறிய முடிகிறது. பாரதியார் தன் வரலாற்றுப் பாடல்களுக்கு எழுதிய முன்னுரையில் "இதன் இயல்பு தன் கூற்றெனப்படு, கதாநாயகன் தன் சரிதையைத் தான் நேராகவே சொல்லும் நடை. இக்காவியமுறை நவீனமானது. இஃது தமிழறிந்த நூலோர்கள் அங்கீகரிக்கத் தந்ததுதானா என்று பார்த்திடும் பொருட்டும் சிறிய நூலொன்றை முதலில் பதிப்பிடுகின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் "இதனைப் பதம் பார்த்து மேலோர் நன்றென்பாராயின் இவ்வழியிலேயே வேறு பல வெளியாக்குவேன்" என்றும் கூறியுள்ளார். இக்கூற்றின் துணை கொண்டு இவரது சுயசரிதையை நோக்கிடும் போது முதலில் 49 ஆசிரிய விருத்தங்கள் அடங்கிய வெளியீட்டினை வெளிப்படுத்தி அதனைத் தமிழ்ச் சான்றோர்கள் நன்றென ஏற்றுக் கொண்டதனால் மேற்கொண்டு 66 ஆசிரிய விருத்தங்களை எழுதி "பாரதி அறுபத்தாறு" என்ற பெயரில் வெளியிட்டிருக்க வெண்டும் என எண்ணுவதில் தவறில்லை.

"கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்"

என்ற நம் கவிஞரின் வாக்கின் படியே அமைந்து இயங்கிய பண்டைய பனுவல்களைக் கற்றறிந்த பாரதியார் தமிழின் பெருமையையும், அதன் தொன்மையையும் அதனைப் பேணி வளர்த்த புலவர்களையும் புரவலர்களைப் போற்றி அவர்கள் வகுத்த வழியில் நின்றுதான் தம் படைப்புக்களை உருவாக்கியுள்ளார் என்பது பாரதியாரின் கவிதைகளைப் பருந்து நோக்கில் பார்ப்போரும் அறிவர் என்பது உண்மை! (நன்றி: முனைவர் இரா. கலியபெருமாள் - நூல்: "பன்னிருவர் பார்வையில் பாரதி" திருவையாறு பாரதி இயக்க பதிப்பு)





வினாக்கள்.

1. பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ் எம்.ஏ.வகுப்பில் சேர விதித்த நிபந்தனை என்ன?
2. பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் பெரும்புலவர் ரா.ராகவையங்காரின் மனம் இளகும்படி பாடிய பாரதியாரின் பாடல்கள் எவை?
3. பண்டைய தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டின் எல்லைகள் பற்றி கூறும் பகுதிகள் எவை?
4. தூது, பள்ளு இவ்விரு வகை இலக்கியங்களில் பாரதி எழுதியுள்ள பாடல்கள் எவை?
5. சீட்டுக்கவி என்பது என்ன? இவ்வகைப் பாட்டினை பாரதி எப்படி பயன்படுத்தியுள்ளார்?
6. பாரதியார் எழுதியுள்ள 'கனவு' எனும் தலைப்பிலான சுயசரிதை பற்றி ஓர் சிறு கட்டுரை வரைக.

1 comment:

  1. மிகச்சிறந்த தொகுப்பு! மெய்சிலிர்க்கிறேன்!

    ReplyDelete

You can send your comments