அறிஞர் தொ.மு.சி. ரகுநாதன்.
(பாரதியின் புகழ் பரப்பிய முன்னோடிகளில் ஒருவர் அமரர் தொ.மு.சி.ரகுநாதன். கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக அமரர் ஜீவாவுக்குப் பிறகு செயலாற்றியவர். இவர் சிறந்த ஆய்வாளர், முற்போக்கு சிந்தனையாளர், தமிழறிஞர். மகாகவியின் நூற்றாண்டு விழாவையொட்டி இவர் எழுதி வெளியிட்ட நூல் "பாரதி - காலமும் கருத்தும்" என்பது. மகாகவி பாரதியை பல்வேறு கோணங்களிலிருந்து ஆய்வு செய்து எழுதியுள்ள இந்த நூல் "இலக்கியச் சிந்தனை" மற்றும் "சாகித்திய அகாதமி" பரிசுகளைப் பெற்ற பெருமைக்குரியது. அறிஞர் தொ.மு.சி. அவர்கள் பாரதி பற்றி எழுதிய நூல்களில் இது நான்காவது நூல். இந்த நூலின் முன்னுரையில் இவர் "பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின் ஓர் அம்சத்தைப் பற்றி மட்டுமே இந்த நூலில் ஆராய்ந்திருக்கிறேன்" என்கிறார். தனக்கு இலக்கியத்தின் நோக்கத்தையும், போக்கையும் போதித்து வளர்த்ததில் மகாகவி பாரதிக்கு பெரும் பங்குண்டு என்கிறார் இவர். நாற்பது ஆண்டு காலமாக பாரதியைப் பயின்று வந்திருக்கிறேன், பயின்று வருகிறேன் என்று கூறும் இவர் மகாகவி பாரதி முதன்முதலில் ஆசிரியராக இருந்து பணியாற்றிய "சக்கரவர்த்தினி" இதழ் பற்றிய ஆராய்ச்சியை இந்த நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த அரிய நூலிலிருந்து பாரதியின் "சக்கரவர்த்தினி" பற்றிய பகுதியை உங்களுக்கு பாரதி அஞ்சல் வழிப் பயிற்சியில் நான்காவது பாடமாக அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அறிஞர் தொ.மு.சி. அவர்களின் மூத்த சகோதரர் தொ.மு.பாஸ்கர தொண்டைமான் தஞ்சாவூர் கலைக்கூடம் அமைவதற்கும், தமிழ்நாட்டு ஆலயங்களின் பெருமைகளை கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தவும் காரணமாயிருந்த அரும் பெரும் கலைக் காதலராகவும், அரசாங்க உயர் அதிகாரியாகவும், இலக்கியவாதியாகவும் இருந்திருக்கிறார். அறிஞர் தொ.மு.சியின் இதர நூல்களையும் வாங்கிப் படித்து இன்புறுமாறு வேண்டிக்கொள் கிறோம்.
(நன்றி: "நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை". தொ.மு.சி. ரகுநாதன்.)
December 2007
திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
இணைந்து வழங்கும் பாரதி பற்றிய அஞ்சல் வழிப்பயிற்சி.
பாடம் 4.
மகாகவி பாரதியாரின் முதல் பத்திரிகை "சக்கரவர்த்தினி"
"பாரதியின் பத்திரிகைத் தொழில் பிரவேசம் 'சுதேசமித்திரனோடு' தொடங்கியது. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தான் பார்த்துவந்த தற்காலிக உபாத்திமைத் தொழிலை (1-8-1904 முதல் 10-11-1904 வரை) விரைவிலேயே உதறித் தள்ளிவிட்டு 1904ஆம் ஆண்டு நவம்பர் மாத மத்தியில் "சுதேசமித்திர"னில் உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தார். பின்னர் ஒன்றரை ஆண்டு காலம் கழித்து 1906ஆம் ஆண்டு மே மாதத்தில் பாரதி "இந்தியா" பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, "சுதேசமித்திர"னிலிருந்து விலகினார். ஆனால் அதில் அவர் சட்டபூர்வமான ஆசிரியர் என்ற அறிவிப்பு இல்லை எனினும் ஆசிரியர் பொறுப்பு முழுவதும் அவர் கையில்தான் இருந்தது.
பாரதி 1904க்கும் 1906க்குமிடையில் ஒன்றரையாண்டு காலத்தில் "சக்கரவர்த்தினி" என்ற பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பு வகித்ததாக தெரியவந்திருக்கிறது. இதனைப் பற்றி பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன் தரும் குறிப்புகள்:
1. பெ.தூரன் இவ்வாறு எழுதுகிறார்: "சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவே இருப்பதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. அவருடைய கருத்துக்களையும், புதிய தேசிய உணர்ச்சியையும் யாதொரு தடையுமில்லாமல் வெளியிடுவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. சுதேசமித்திரன் அலுவலகத்திலிருந்தே "சக்கரவர்த்தினி" என்ற மாத இதழ் வெளியாயிற்று. அதற்குப் பாரதியார் ஆசிரியராக இருந்தார் (பாரதி தமிழ்: பக்.21)"
2. "பாரதியார் 1904ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு வந்து சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட அவருக்கு அதிகம் வாய்ப்பு இருக்கவில்லை. 'சுதேசமித்திரன்' அலுவலகத்திலிருந்தே "சக்கரவர்த்தினி" என்ற மாத இதழும் வெளியாயிற்று. அதற்கு பாரதியார் ஆசிரியரானார். 1905 நவம்பர் மாதத்தில் வெளியான அதன் இதழிலிருந்து, வந்தேமாதரம் என்ற கட்டுரை 28-12-1905 'சுதேசமித்திரன்' இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்பத்திரிகை எவ்வளவு காலம் நடைபெற்றதென்று தெரியவில்லை. இதில் பாரதியாரால் எழுதப்பட்ட "வியாசங்களும் பாடல்களும் புதுமணம் கமழ்ந்து யாவராலும் விரும்பப்பட்டன" என்று எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு "சென்று போன நாட்கள்" என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்."
திரு ரா.அ.பத்மநாபன் கூறுகிறார்: "சுதேசமித்திரனில் இருந்த பாரதி அதே காரியாலத்திலிருந்து வெளிவந்த "சக்கரவர்த்தினி" மாதப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். ஆனாலும் இதிலும் சரி, மித்திரனிலும் சரி, அவர் தம்முடைய மனம்போல் தமது தீவிரமான கருத்துக்களைக் கொட்டித் தீர்க்க இடமிருக்கவில்லை......"
இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே முதலில் பெ.தூரன் அவர்களும் பின்னர் ரா.அ.பத்மநாபனும் "சக்கரவர்த்தினி"யைப் பற்றிய தமது குறிப்புகளை எழுதியுள்ளனர். ஆயினும் பாரதி சுதேசமித்திரனில் வேலை பார்த்த காலத்திலேயே அவனை ஆசிரியராகக் கொண்டு "சக்கரவர்த்தினி" என்ற மாதப்பத்திரிகை ஒன்று வெளிவந்தது என்ற செய்தி மட்டுமே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
பாரதி பத்திரிகை உலகில் புகுந்த காலத்தில், சக்கரவர்த்தினி என்ற சொல்லாட்சி விக்டோரியா மகாராணியையே குறித்து வந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. எனவே விக்டோரியா மகாராணியைக் குறிக்கும் பெயரில் ஒரு தீவிரவாத அரசியல் பத்திரிகை, அதுவும் பாரதியின் ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்திருந்தால் அது விந்தையினும் விந்தையல்லவா? அவ்வாறாயின் பாரதி ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த 'சக்கரவர்த்தினி' பத்திரிகை ஓர் அரசியல் பத்திரிகையா? அல்லது செய்தி வர்த்தமானப் பத்திரிகையா?
"சக்கரவர்த்தினி" பத்திரிகை எப்போது தொடங்கப்பட்டது? இதில் எவ்வளவு காலம் பாரதி ஆசிரியராக இருந்தான்? எப்போது விலகிக் கொண்டான்? இத்தகைய கேள்விகள் எழுகின்றன.
இந்தப் பத்திரிகை 'சுதேசமித்திரன்' அலுவலகத்திலிருந்துதான் வெளிவந்ததா? அதற்கு ஏற்கனவே நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்கள் உதவவில்லை; மாறாக அதனை மறுக்கவே உதவுகின்றது. ஏனெனில் பாரதி "சுதேசமித்திரனில்" உதவி ஆசிரியராகச் சேர்ந்த காலத்தில் அதன் அலுவலகம் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் அரண்மனைக்காரன் தெருவில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் "சக்கரவர்த்தினியோ" சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து பிரசுரமானதாகத் தெரிகிறது.
"சுதேசமித்திரன்" அலுவலகத்திலிருந்து 'சக்கரவர்த்தினி' வெளிவரவில்லை என்று கொள்வதற்குச் சுதேசமித்திரனில் அந்தக் காலத்தில் வெளிவந்துள்ள ஒரு விளம்பரமும் நமக்கு உதவுகிறது. 1905 அக்டோபர் மூன்றாவது வாரத்தில் கீழ்கண்ட விளம்பரம் பிரசுரமாகியுள்ளது.
சக்கரவர்த்தினி
தமிழுணர்வோர் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இம்மாதாந்தரப் பத்திரிகை அவசியம் இருக்க வேண்டும். வருஷமொன்றுக்கு ரூபா இரண்டே விலை.
மானேஜர், 100, வீரராகவ முதலித் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை.
சுதேசமித்திரன் அலுவலகத்திலிருந்து சக்கரவர்த்தினி வெளிவரவில்லை என்பதற்கு இந்த விளம்பரம் நல்லதொரு சான்றாகும்.
அடுத்து 'சக்கரவர்த்தினி' எத்தகைய பத்திரிகை? அரசியல் பத்திரிகையா? அல்லது வேறு பத்திரிகையா? பாரதி காலத்தில் சக்கரவர்த்தினி என்ற பெயர் விக்டோரியா மகாராணியையே குறித்தது என்று முன்னர் பார்த்தோம். இதனை வலியுறுத்தும் விதத்தில் திருமதி குகப்பிரியை (அந்தக் காலத்தில் பிரபலமான எழுத்தாளர்) 1960ஆம் ஆண்டு சென்னை வானொலியில் பேசிய ஒரு பேச்சு நமக்கு உதவுகிறது. "அந்தக் காலத்துப் பத்திரிகைகள்" பற்றிய அந்த உரையின்போது, அவர் "பொதுவாக வாணி, விலாசினி, விவேக சிந்தாமணி, விவேக போதினி, பிழைக்கும் வழி போன்ற பத்திரிகைகளும், விக்டோரியா மகாராணியின் நினைவின் சின்னமாகப் பெண்களுக்கென்று சக்கரவர்த்தினி, மாதர் மனோரஞ்சினி, பெண் கல்வி, ஹிதஹாரிணி போன்றவைகளும் வெளிவந்தன" என்று கூறியுள்ளார். அவ்வாறாயின் சக்கரவர்த்தினி, விக்டோரியா மகாராணியின் பெயரில் பெண்களுக்கென்று வெளிவந்த பத்திரிகைதானா?
இந்தக் கேள்விக்கு விடைகாண அந்தக் காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் பற்றிய விவரங்கள் பலவற்றையும் ஆராய்ந்து பார்த்ததில், 1961இல் சைவ சித்தாந்தக் கழகம் மூலம் சு.அ.ராமசாமிப் புலவர் எழுதி வெளியிட்ட "நாள், கிழமை, திங்கள் இதழ் விளக்க வரிசை" என்ற நூலில் சில விவரங்கள் கிட்டின. சைவ சித்தாந்தக் கழகம் தனது பார்வைக்குக் கிட்டிய பழந்தமிழ்ப் பத்திரிகைகளைப் பற்றித் தொகுத்துத் தந்துள்ள விவரக் குறிப்பே இந்த நூல். இந்நூலில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்களுக்கென வெளிவந்த "சுகுணகுணபோதினி", "மாதர் மித்திரி", "பெண்மதி போதினி", "மாதர் மனோரஞ்சனி", "தமிழ் மாது" முதலிய பத்திரிகைகளோடு, 'சக்கரவர்த்தினி' பத்திரிகை பற்றியும் பின்வரும் விவரங்கள் காணக்கிடைக்கின்றன.
"சக்கரவர்த்தினி" (தொடக்கம்: 1905) மாத இதழ் பார்வைக்குக் கிடைத்தது. மலர் 2, இதழ் 9 1907 ஏப்ரல் மாத இதழ். ஆசிரியர் எம்.எஸ்.நடேசய்யர்; வெளியிட்டவர் பி.வைத்தியநாதய்யர். அச்சகம்: ஏ.எல்.வி.அச்சகம், சென்னை. அளவு 24 x 16 செ.மீ. பக்.32. சந்தா ரூ.2; தனியிதழ் 3 அணா. "இவ்விதழ் பெண்கள் முன்னேற்றத்தின் பொருட்டு வெளியிடப்பட்டது. 'மாதர் ஆடவர் கடமை', 'பெண்களும் பேயென்னும் வியாதியும்', 'கலாவதி' முதலிய கட்டுரைகள் பார்வைக்குக் கிடைத்த இதழில் வெளியாகியுள்ளன".
இந்தக் குறிப்பைக் கண்டவுடன் பாரதி ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த 'சக்கரவர்த்தினி' பத்திரிகை இதுவாகவே இருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. ஏனெனில், பாரதி சுதேசமித்திரனில் நவம்பர் 1904 முதல் மே 1906 வரை வேலை பார்த்த அதே காலத்திற்குட்பட்டு 1905இல் சக்கரவர்த்தினி தோன்றியிருக்கிறது. விளம்பரத்தில் காணப்படும் மலர் 2, இதழ் 9 என்பது 1907 ஏப்ரல் மாதத்தில் வெளியானது என்பதை கணக்கிட்டுப் பார்க்கும்போது சக்கரவர்த்தினி 1905 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. பாரதி 1906 மே மாதத்தில் "இந்தியா" பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு போய்விட்டதால் குறிப்பிட்ட விளம்பரத்தில் வந்த சக்கரவர்த்தினி இதழுக்கு பாரதி ஆசிரியராக இருக்கவில்லை. அதனால்தான் 1907 ஏப்ரல் சக்ரவர்த்தினி இதழுக்கு ஆசிரியர் எம்.எஸ்.நடேசய்யர் என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவ்வளவு ஊகங்களுக்குப் பிறகும் சக்கரவர்த்தினி 1905இல் வெளிவந்தது என்பதைத் தவிர, அதில் பாரதி பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாததால் மேற்கண்ட செய்திகள் அனைத்தும் ஊர்ஜிதம் செய்ய இயலாமல் ஊகங்களாக மட்டுமே இருந்தன. இந்த நிலையில் விசுவாவசு வருஷம், புரட்டாசி மாதம் வெளிவந்த "செந்தமிழ்" என்றொரு பத்திரிகையின் இதழ் ஒன்றில் ஓர் மதிப்புரை வெளியாகியது. அது:--
"சக்கரவர்த்தினி: இது சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகை. பெண்பாலாரின் அறிவுப் பெருக்கத்துக்கென்று தொடங்கப் பெற்றது இது. இதன் முதல் இரு பகுதிகள் கிடைக்கப்பெற்றோம். நம் நாட்டு மாதர்கள் நிலையைச் சீர்படுத்துவதற்கென்றே எத்தனை பத்திரிகைகள் வெளிவந்தாலும் அவை மிகையாகாதென்று பத்திராசிரியர் இப்பத்திரிகையின் முதல் பகுதியில் எழுதியது முற்றிலும் பொருத்தமேயாம். ஒரு நாட்டின் சீரும் சிறப்பும் அந்நாட்டு மாதர்களைப் பொறுத்தே பெரும்பாலும் இருத்தலின் தேச நலத்தைக் கருதும் நன் மக்களெல்லாம் அதிலும் கவலை செலுத்தற்குரியர். இப்பத்திரிகை பெண்பாலார்க்கு முக்கியமாகத் தெரிய வேண்டிய பல இனிய வியாசங்களைத் தன்பால் நிரம்ப உள்ளது. இதுபோன்ற சிறந்த பத்திரங்களை நம்நாட்டு மாதர்கள் பெற்றுப் படித்துவரின் அவர்கள் லெளகீக வைதீக ஞானங்களில் தேர்ச்சி பெற்று விளங்குவரென்பது திண்ணம். இதற்குச் சுதேசமித்திரன் பத்திராசிரியராகிய ஸ்ரீ ஜி.சுப்பிரமணிய ஐயரவர்கள் முதலிய நல்லறிஞர்கள் விஷயமெழுதி வருகின்றனர். இதன் பத்திராசிரியர் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியாரவர்கள். இந்தப் பத்திரிகையை எல்லாரும் அபிமானித்து, அதனை நடாத்துபவர்க்கு ஊக்கமளித்து வர நம்மவர்கள் கடமைப் பட்டவர்களாவர்."
மேற்கூறிய 'செந்தமிழ்' இதழ் வெளிவந்த காலம் விசுவாவசு வருஷம், புரட்டாசி மாதம், அதாவது 1905 செப்டம்பர் மாத மத்தியாகும். இவ்விதழில் 'சக்கரவர்த்தினி' பத்திரிகையின் முதலிரு பகுதிகள் கிடைக்கப் பெற்றோம் எனக் கூறப்பட்டுள்ளதால், 'செந்தமிழ்' பத்திராதிபருக்கு 1905 ஆகஸ்ட், செப்டம்பர் மாத இதழ்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன என்பது தெளிவு. இதிலிருந்து 'சக்கரவர்த்தினி' பத்திரிகை 1905 ஆகஸ்ட்டில் துவக்கப்பட்டிருக்கிறது என்பதும், அப்போது அதன் ஆசிரியராக பாரதி இருந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது.
இந்த விவரங்களிலிருந்து நமக்குத் தெரிய வரும் செய்தி, பாரதி முதன்முதலில் ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த பத்திரிகை பெண்பாலரின் அறிவுப் பெருக்கத்துக்கென்று தொடங்கப் பெற்றது என்பதாகும். இருப்பினும் நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. தீவிர அரசியல் வாதியாக இருந்த பாரதி, முதன்முதலில் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரு பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொள்வானேன்? தான் ஆசிரியர் பொறுப்பில் இருந்தும் அந்தப் பத்திரிகையில் அரசியல் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பெண்கள் முன்னேற்றம் குறித்து அதிகம் பயன்படுத்தியது ஏன்? இதற்கு விடை காண்பது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல!
முதலாவதாக 'சக்கரவர்த்தினி' பாரதியின் சொந்தப் பத்திரிகை அல்ல. அதன் உரிமையாளர் பி.வைத்தியநாத ஐயர் என்பவர். சொந்தப் பத்திரிகை நடத்தும் அளவுக்கு பாரதிக்கு என்றும் பண வசதி இல்லை, பிதுரார்ஜித சொத்தும் அவருக்கு மிஞ்சியிருக்கவில்லை. அதனால்தான் அவர் காசிக்குச் செல்லும்படி நேர்ந்தது. பின்னர் எட்டயபுரம் மன்னர் ஆதரவில் சிறிது காலம் இருக்க நேர்ந்தது. பிறகு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பதினேழரை ரூபாய் சம்பளத்துக்குத் தமிழாசிரியராக வேலை பார்க்க நேர்ந்தது. சுதேசமித்திரனிலும் அவருக்குச் சம்பளம் ஒன்றும் அதிகம் இல்லை. சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் என்றாலும் சம்பளம் மிகக் குறைவு. எனவே சுதேசமித்திரனில் சேர்ந்த எட்டு மாதங்களில் சொந்த பத்திரிகை நடத்தும் வசதி அவனுக்கு அப்போது இல்லை. 'சக்கரவர்த்தினி' பத்திராதிபருக்கு 'இந்தியா' பத்திரிகை உரிமையாளர் திருமலாச்சாரியார் போல அரசியல் ஈடுபாடு இல்லாமல் பெண்கள் முன்னேற்றம் குறித்து மட்டும் பாரதியோடு ஒத்துப் போயிருக்கலாம், அதனால் அவருடைய பத்திரிகைக்கு ஆசிரியராகப் போயிருக்கலாம், பிறகு 'இந்தியா' பத்திரிகையில் தன் சொந்த அரசியல் கருத்துக்களை எழுதும் வாய்ப்புக் கிடைத்ததும் அங்கு மாறிச் சென்றிருக்கலாம். சுதேசமித்திரனில் குறைந்த சம்பளம் கருதி உபரி வருமானத்திற்காகவும், சுதேசமித்திரன் அதிபர் ஜி.சுப்பிரமணிய ஐயரின் அனுமதியோடு சக்கரவர்த்தினிக்குச் சென்றிருக்கலாம். ஆயினும் அரசியல்வாதியாக இருந்தும் பாரதி முதன்முதலில் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரு பத்திரிகையின் ஆசிரியராக ஏன் பொறுப்பு ஏற்றுக்கொண்டான்?
இந்தக் கேள்விக்கு விடை காண முயல்வோம். சக்கரவர்த்தினி 1905 ஆகஸ்ட்டில்தான் வெளிவரத் தொடங்கியது. பாரதிக்கு பால்ய பருவத்திலேயே தேசபக்தி நெஞ்சில் தோன்றிவிட்டது என்றாலும், அவன் அதில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது இந்நாட்டில் "சுதேசிய இயக்கம்" தோன்றிய பின்னர்தான். அந்த சுதேசி இயக்கம் 'சக்கரவர்த்தினி' பத்திரிகை தொடங்கிய பிறகுதான் இந்த நாட்டில் ஏற்பட்டது. அரசியல் ஆர்வம் ஏற்படுவதற்கு முன்னதாகவே பாரதிக்கு காசியில் இருந்த 1898 முதல் 1903 தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்தில் பெருத்த ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. பாரதியின் காசிவாச கால நண்பர் கரூர் பண்டித எஸ்.நாராயண ஐயங்கார் எழுதுவதாவது:--
"காசியில் ஒரு சமயம் சரஸ்வதி பூஜையன்று பாரதி தமிழில் ஒரு உபந்நியாஸம் செய்ய விரும்பினார். வசிக்கும் வீட்டின் கூடத்தில் உபந்நியாஸத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை வகிக்க காசியிலேயே பிரபல வித்வானாகிய ஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள் இசைந்தார். பெண் கல்வி என்பது பேச்சுக்கு விஷயமாகக் கொள்ளப்பட்டது. சுப்பையா (பாரதி) தமிழில் பிரசங்கம் நிகழ்த்தினார். பிரசங்கம் காரசாரமாக இருந்தது. ஸ்திரீகளுக்குக் கல்வி அவசியமானது என்று அவர் வற்புறுத்திப் பேசினார். தலைவர் அந்த அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; கண்டித்தும் பேசினார். சுப்பையாவுக்கு கோபம் மிகுந்துவிட்டது. பெண்கள் கல்வி இன்றித் தேசம் முன்னுக்கு வர முடியாது என்று மேலும் அடித்துப் பேசினார். பெண்களின் சமத்துவத்தைப் பற்றி அடிக்கடி அவர் வற்புறுத்திப் பேசுவது வழக்கம். பெண்கள் கல்வி, சமத்துவம் இந்த இரு விஷயங்களைத் தவிர அப்போது வேறு எதிலும் அவர் அதிகக் கவனம் செலுத்தவில்லை" ("காசியில் சுப்பையா" தினமணி சுடர் கட்டுரை 8-9-1956)
இளமையிலேயே ஷெல்லியிடம் பெரிதும் ஈடுபட்டு "ஷெல்லிதாசன்" என்று தன்னை அழைத்துக் கொண்ட பாரதி, ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியைப் போலவே பெண்கள் முன்னேற்றத்திலும், விடுதலையிலும் அதிகக் கவனம் செலுத்தியதில் அதிசயம் எதுவும் இல்லை. எனவே பாரதி மாதர் விடுதலையிலும் தீவிர அக்கறை கொண்டிருந்தான் என்பது தெளிவு. இதனால் 'சக்கரவர்த்தினி' ஆசிரியப் பொறுப்பை 1905 ஆகஸ்ட்டில் மனப்பூர்வமாக விரும்பியே ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்று நாம் முடிவு கட்டலாம்.
பாரதி அந்த பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அதே மாதத்திலேயே சுதேசிய இயக்கம் பிறப்பெடுத்து விட்டது. வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்று வைஸ்ராய் கர்ஸான் அறிவித்ததும், அங்கு பேரெழுச்சி வெடித்தது. இந்தச் செய்தி கேட்டு பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி தனது ஆங்கில நூலான "India Struggles for Freedom" என்ற நூலில் சொல்லுகிறார்: "வங்காளம் வேதனையால் முனகவில்லை. கர்ஜித்தது. மாகாணத் தலைவர்கள் கூடி வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அன்னிய சாமான்களைப் பகிஷ்கரிப்பது என்று முடிவெடுத்தனர். மேலும் 1905 ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று நடந்த ஒரு கூட்டத்தில்தான் சுதேசி இயக்கம் ஆரம்பமானது".
இந்த சுதேசி இயக்கம் பாரதியைக் கவர்ந்தது. சென்னையில் 1905 செப்டம்பர் 14 அன்று நடந்த "சுதேசிய மாணவர்களின் கடற்கரைப் பெருங்கூட்டத்தில், பாரதி தனது "வங்க தேசத்து வாழ்த்துக் கவி"களைப் பாடினான். அது, மறுநாள் 15-9-1905 அன்று சுதேசமித்திரனில் பிரசுரமாகியுள்ளது. ("வங்கமே வாழிய" என்ற தலைப்பிலான பாடல்கள்.)
இதன் பின்னர் வங்கப் பிரிவினை அமலுக்கு வரவிருந்த நாளான 16-10-1905 அன்று முதல் வங்கத்தில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. அந்த சந்தர்ப்பத்தில் பங்கிம் சந்திரரின் வந்தேமாதர கீதம், தேசிய கீதம் போல மக்களால் ஆர்வத்துடன் பாடப்பட்டது. அப்போதுதான் பாரதி அந்தப் பாடலை தமிழாக்கி 'சக்கரவர்த்தினி' நவம்பர் மாத இதழில் வெளியிடுகிறான். இதுவே பின்னர் 'சுதேசமித்திரனிலும்' வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு பாரதி எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு கூறுகிறான்: "இப்போது பெங்காள மாகாணத்திலிருக்கும் ஒவ்வொரு ஹிந்துவாலும் ஸாம கீதத்தைப்போல அத்தனை பக்தியுடன் பாடப்பட்டு வருகின்ற வந்தேமாதரம் என்ற திவ்ய கீதம் 25 வருஷங்களுக்கு முன்பு பங்கிம் சந்திரர் 'ஆனந்த மடம்' எனும் பெரு நூலை எழுதும்போதே, இந்தப் பாட்டு அடுத்த 25 வருஷங்களுக்குள்ளாக வங்க மக்கள் எல்லோருடைய நாவிலும் இருக்கும் என்பதை அறிந்திருந்தார் போலும்". எனவே பாரதி சுதேசி இயக்கம் வங்கத்தில் தோன்றிய அதே நேரத்தில் அதில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.
இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்: -- 'பங்கிம் சந்திரரின் "ஆனந்த மடம்" எனும் நவீனத்தைத் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்த்து, 1908இல் வெளியிட்ட மகேசகுமார் சர்மா, தமது மொழிபெயர்ப்புக்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்: --
"இதில் வரும் வந்தேமாதரம் பாடலையும், கவி ஜயதேவரின் கீத கோவிந்த கீர்த்தனைகள் சிலவற்றையும் நான் கேட்ட பொழுதெல்லாம் தமக்குள்ள அவசர வேலைகளைக்கூட பாராமல், மனமுவந்து தயைகூர்ந்து இன்சுவை ஒழுகும் செந்தமிழ்ப் பாக்களில் மொழிபெயர்த்து அளித்த தேசபக்த ஆசுகவியும், "இந்தியா" பத்திரிகாசிரியருமான ஸ்ரீயுத சி.சுப்பிரமணிய பாரதியிடம் நன்றிக்கடன் பட்டவனாயுள்ளேன்".
மகேசகுமார் சர்மாவின் இந்த முன்னுரைக் குறிப்பின்படி அவர் வேண்டிக்கொண்டதின்படி பாரதி வந்தேமாதரம் கீதத்தை தமிழாக்கிக் கொடுத்ததைப் போலத் தெரிகிறது. ஆனால் வங்காளத்தில் பங்கிம் சந்திரரின் வந்தேமாதர கீதம் தேசிய கீதம்போல் அக்டோபரில் ஒலிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே பாரதி அதனைத் தமிழாக்கி, சக்கரவர்த்தினி நவம்பர் இதழில் வெளியிட்டிருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருக்கால் அந்த காலகட்டத்திலேயே பாரதியும் மகேசகுமார் சர்மாவும் இதனைத் தமிழாக்குவது குறித்துப் பேசியிருக்கலாமோ என்னவோ?
பாரதி பற்றி ஆய்வு நடத்தி நூல்கள் வெளியிட்டுள்ள பெ.தூரன் அவர்கள் மகேசகுமார் சர்மாவின் உறவினரான வி.கே.ராமநாத ஐயர் தம்மிடம் "வந்தேமாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பை ஒட்டிய ரஸமான சம்பவத்தை'க் கூறியதாகக் குறிப்பிட்டு, 'மகேசகுமார் சர்மா "ஆனந்த மடம்" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்து அழகாக கொண்டு வந்திருக்கிறார். அதிலே வெளியிடுவதற்காக வந்தேமாதர கீதத்தை மொழிபெயர்த்துத் தரும்படி பாரதியாரைக் கேட்டுக் கொண்டாராம். இரண்டு மூன்று மாதங்கள் அவருடைய வேண்டுகோள் நிறைவேறவில்லை. பிறகு ஒரு நாள் இரவு சுமார் பத்து மணிக்கு திருவல்லிக்கேணியில் குடியிருந்த பாரதியார் சென்னை ஜார்ஜ் டவுனில் குடியிருந்த மகேசகுமார் சர்மாவின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி "சர்மா! பாட்டு வந்துவிட்டது, எழுதிக்கொள்! கடற்கரையில் உட்கார்ந்திருந்தேன், நீ கேட்ட பாட்டு திடீரென்று உதயமாயிற்று. கடற்கரை ஓரமாகவே நேராக நடந்து இங்கே வந்து விட்டேன்" என்று கூறினாராம்.
ராமநாதய்யர் கூறியுள்ள விஷயம் நாடகத் தன்மையோடு ரஸமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது உண்மையாக இருக்க முடியாது என்பதை மேற்கண்ட விவரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மகேசகுமார் சர்மா கேட்டுக்கொண்டும் வந்தேமாதர கீதத்தைப் பாரதி, இரண்டு மூன்று மாதங்கள் மொழிபெயர்த்துத் தரவில்லை என்கிறார் அவர். ஒரு வேளை ஜயதேவரின் கீதகோவிந்தத்தைத் தமிழாக்கித் தர தாமதமாகியிருக்கலாமோ என்னவோ? சுதேசியப் போராட்டத்தில் கவனம் செலுத்தியிருந்த பாரதிக்கு சிருங்கார ரஸம் நிரம்பிய ஜயதேவரின் கீதகோவிந்தத்தை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் இல்லாது போயிருக்கலாம். ஆனால் தேச உணர்வை ஊட்டுகின்ற வந்தேமாதரத்தை எவருடைய தூண்டுதலும் இல்லாமல் சொந்த உத்வேகத்திலேயே செய்து முடித்திருக்க வேண்டும்.
இனி, 'சக்கரவர்த்தினி' பத்திரிகை இதழ்களில் பெண்கள் முன்னேற்றம் தவிர, அவருடைய அரசியல் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தனவா என்பதையும் பார்க்கலாம். சக்கரவர்த்தினி பத்திரிகை இதழ்களை தேடி அலைந்த வகையில் இரண்டு இதழ்கள் 1906 ஜூலை, ஆகஸ்ட்டில் வெளியானவை கிடைத்தன. அதன் அட்டையில் காணப்பட்ட வாசகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வருமாறு:--
CHAKRAVARTINI
A TAMIL MONTHLY DEVOTED MAINLY TO
THE ELEVATION OF INDIAN LADIES.
சக்கரவர்த்தினி
தமிழ்நாட்டு மாதர்களின் அபிவிருத்தியே நோக்கமாக
வெளியிடப்படும் மாதாந்தரப் பத்திரிகை
ஆக, அட்டையில் காணப்படும் வாசகங்களே பத்திரிகையின் பிரதான நோக்கம் மாதர் முன்னேற்றம் ஒன்றே என்பதைத் தெளிவு படுத்திவிடுகிறது. அட்டையில் பத்திரிகையின் தலைப்பும், பொருளடக்கமும் மட்டுமே காணப்படுகின்றன. தலைப்புக்குக் கீழ் அந்தந்த இதழின் பொருளடக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர்கள் பெயர்களோடு இரு பத்திகளாக இடம்பெற்றிருக்கிறது. பொருளடத்துக்குக் கீழ் இரு பத்திகளுக்கும் அடியில் ஒருபுறம் பி.வைத்தியநாதய்யர், புரொப்ரைட்டர் என்றும் மறுபுறம் சி.சுப்பிரமணிய பாரதி, ஆசிரியர் என்றும் ஆங்கிலத்தில் அச்சிடப் பெற்றுள்ளது.
1906 ஜூலை மாத இதழில் "இத்துடன் நமது பத்திரிகைக்கு ஒரு வயது முற்றுப் பெறுகின்றது" என்று ஆசிரியர் குறிப்பிலிருந்து 'சக்கரவர்த்தினி' பத்திரிகை 1905 ஆகஸ்ட்டில் தொடங்கி மாதாமாதம் தவறாமல் வெளிவந்திருப்பது தெரிகிறது. அந்த இதழில் ஓர் விண்ணப்பமும், அதன் கீழ் ஒரு ஆங்கில அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
விண்ணப்பம்.
இத்துடன் நமது பத்திரிகைக்கு ஒரு வயது முற்றுப் பெறுகின்றது. அடுத்த இதழ் முதல் தகுந்த வித்வான்களாலும், கல்வித் தேர்ச்சி பெற்ற பெண்மணிகளாலும், பல உயர்ந்த விஷயங்கள் எழுதுவித்து, நமது பத்திரிகையை மிகவும் சீர்திருத்தத்துடன் பிரசுரிக்கக் கருதியிருக்கிறோம். சக்கரவர்த்தினியைப் படிக்கும் ஒவ்வொருவரும் புதிய சந்தாதாரர்கள் சேர்க்க முயற்சி பண்ணி இப்பத்திரிகையை அதிக உபயோககரமாக்க வேண்டுமென்று நமக்கிருக்கும் நோக்கம் எளிதில் நிறைவேறுமாறு புரிவார்களென நம்புகிறோம்.
நமது பத்திரிகையின் அபிவிருத்திக்குரிய ஆலோசனைகள் இதனைப் படிக்கும் பெண்மணிகளாலும் ஆடவர்களாலும் எழுதியனுப்பப்படுமாயின் அவை நன்றியறிவுடன் ஏற்றுக் கொள்ளப்படும்.
பத்திராதிபர்.
NOTICE
Contributions wanted, specially from Ladies. For terms, communicate
with the Editor. Preference is given to educational and literary articles.
இதன்மூலம் பத்திரிகையின் ஆசிரியர் பாரதி, மாதர் முன்னேற்றத்திற்கான "சக்கரவர்த்தினி" பத்திரிகையில் மாதர்களின் எழுத்துக்களே பெரிதும் இடம்பெற வேண்டும் என்று விரும்பிய உண்மை புலப்படுகிறது.
'சக்கரவர்த்தினி' பத்திரிகையின் தலையங்கப் பகுதியில் ஒரு ஈரடி குறட்பா பத்திரிகையின் லட்சிய கோஷம்போல ஒவ்வோர் இதழிலும் வெளியிட்டிருக்கிறார். அது:--
"பெண்மை யறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்
ஒண்மையுற வோங்கும் உலகு"
'பெண்களின் அறிவு உயர்ந்தால் பெருமிதம் தோன்றும்; பெண்கள் சிறந்தொளிர்ந்தால் உலகமே சிறந்தோங்கும்" என்ற கருத்துக் கொண்ட இந்தக் குறட்பாவைப் பாரதியே இயற்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
'சக்கரவர்த்தினி'யில் பாரதி எழுதியுள்ள தலையங்கத்திலிருந்து அந்தப் பத்திரிகை அதன் முதலாண்டில் அதன் கர்த்தாக்கள் எதிர்பார்த்த அளவுக்குப் பரவலாக வினியோகம் ஆகவில்லை என்றும், முதலாண்டில் ஜி.சுப்பிரமணிய ஐயர், பண்டிதை அசலாம்பிகை போன்றோர் விஷயதானம் செய்து வந்திருக்கிறார்கள் என்றும், சில பிரபுக்களும் ஜமீன்தார்களும்கூட அதற்குச் சந்தாவோ, நன்கொடையோ வழங்கி உதவியிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. அதே சமயம் பெண்களுக்காக நடத்தப்பெறும் பத்திரிகையில் பெண்களே பெரிதும் பங்கெடுக்க வேண்டும் என்றும், அவர்களது பிரச்சினைகளையும், சந்தேகங்களையும் அவர்கள் அப்பத்திரிகைக்கு எழுதியனுப்ப வேண்டுமென்றும் பாரதி விரும்பியிருப்பது தெரிகிறது.
கிடைத்த இரு இதழ்களிலும் தலையங்கத்தைத் தவிர, ஒவ்வோர் இதழிலும் பாரதி தனது படைப்புக்கள் ஒவ்வொன்றே இடம் பெறுமாறு பார்த்துக் கொண்டிருக்கிறான். பத்திரிகையின் பெரும் பகுதிப் பக்கங்களைத் தானே ஆக்கிரமித்துக் கொண்டுவிடாமல், அதிகமான பக்கங்களை ஏனைய எழுத்தாளர்களின் கதை, கட்டுரை, நாடகம், பாடல் முதலியவற்றுக்கே ஒதுக்கியிருக்கிறான்.
ஜூலை 1906 மாத இதழில் சக்கரவர்த்தினியில் பாரதி தொடர்ச்சியாக எழுதிவந்துள்ள "துளஸீபாயி சரித்திரம்" என்ற நெடுங்கதையின் இறுதிப்பகுதி இடம் பெற்றிருக்கிறது. இதனை அவன் "ஷெல்லிதாஸ்" என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கிறான். "ஷெல்லிதாசன்" என்ற புனைப்பெயரில் பாரதி ஆரம்ப காலத்தில் எழுதிவந்தான் என்று பாரதி வரலாற்றாசிரியர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதற்கு ஆதாரமாக எந்தச் சான்றையும் காட்டவில்லை. எனினும் 'சக்கரவர்த்தினி' இதழ் மூலம் அவன் இந்தப் புனைபெயரில் எழுதிவந்ததற்கான முதல் சான்று நமக்குக் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
'சக்கரவர்த்தினி' இதழ்களில் பாரதி எழுதிய "துளஸீபாயி சரித்திரம்" தொடராக வந்திருக்கிறது. அதன் முழுக்கதை என்னவென்று தெரியாவிட்டாலும், கிடைத்த பகுதிகளிலிருந்து இது ஒரு முகலாயர் காலத்துக் கதை என்பது தெரிகிறது. துளஸீபாய் எனும் ரஜபுத்ர வம்சத்துப் பெண்மணிக்கும் அப்பஸ்கான் என்ற முஸ்லீம் வீரனுக்கும் இடையே மலர்ந்த காதல் பற்றிய கதை என்று தெரிகிறது. கிடைத்த இறுதிப் பகுதியிலிருந்து இருவேறு மதங்களைச் சேர்ந்த இந்த இளம் காதலர்களிடையே மலர்ந்த காதல் தோல்வியுற்று நிராசையாக முடியாமல் இருவரும் ஒன்றுகூடிய நிகழ்ச்சி மங்களகரமாக முடிகிறது. இதிலிருந்து, ஜாதிவிட்டு ஜாதியில் திருமணம் செய்யும் கலப்புத் திருமணம் மட்டுமல்லாது மதம்விட்டு மதம் திருமணம் செய்யும் கலப்புத் திருமணத்தையும் பாரதி ஆதரித்திருக்கிறான் என்பதையும், மேலும் வங்கப் பிரிவினை நடந்து முடிந்த சில மாதங்களிலேயே எழுதத் தொடங்கிய இந்தக் கதையில் பாரதி இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறான் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.
1906 ஆகஸ்ட் இதழில் பாரதி இராஜாராம் மோஹன்ராய் பற்றி நான்கு பக்க கட்டுரையொன்றை எழுதியிருக்கிறான். "இந்நாட்டு மாதர்களின் அபிவிருத்தியின் பொருட்டாக முதன்முதல் பாடுபட்ட மஹான் ராஜாராம் மோஹனராய் என்பவர்" என்று தொடங்கும் இந்தக் கட்டுரையில் பாரதி ராஜாராம் மோஹன்ராயின் பிரம்மஞான தத்துவம் பற்றிச் சுருக்கமாகக் கூறிவிட்டு அவரது சீர்திருத்தப் பணிகளையே பெரிதும் வலியுறுத்துகிறான். அவர் விக்கிரக ஆராதனை முதலான விஷயங்களில் தனித்த கருத்துடையவர் என்பதைக் குறிப்பிட்டு அதனைத் தானும் நியாயப்படுத்தி கட்டுரையின் பிற்பகுதியில் எழுதுகிறார்.
ராஜாராம் மோஹன்ராயின் பெருமையை கட்டுரையின் இறுதியில் கூறும்போது பாரதி எழுதுகிறார்:-- "ஊருக்கு ஊர் ராம் மோஹனருடைய சிலை ஸ்தாபித்திருக்க வேண்டும். எண்ணிறந்த ஸ்திரி ஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும்பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் (உடன்கட்டை ஏறுதல்) அரக்கனை மிதித்து கொல்லும்படியாக முதலிலே தூக்கப்பட்ட ராம் மோஹனரின் திருவடிகளை நாம் மறந்து விட்டால் நமக்கு உய்வுண்டாமா? இத்தேசத்திலிருந்து ஒவ்வொரு பாஷையிலேயும் அவரது திருச்சரித்திரம் எழுதப்பட்டு அதனை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டாமா?
சக்கரவர்த்தினி பத்திரிகையில் ஏனையோர் எழுதியுள்ள விஷயங்கள்:
1906 ஜூலை, ஆகஸ்டு மாதச் "சக்கரவர்த்தினி" இதழ்களில் பாரதியின் படைப்புக்களைத் தவிர, மகேச குமார் சர்மா (பங்கிம் சந்த்ரரின் ஆனந்த மடம் நாவலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்) எஸ்.வி.ஸ்ரீனிவாச அய்யர், டி.வி.அய்யாசாமி அய்யர், எஸ். ஸ்ரீனிவாச ஐயர், எல்.நாராயணசாமி அய்யர் ஆகியோரின் எழுத்துக்களும் மற்றும் பண்டிதை அசலாம்பிகை அம்மை ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மையார் ஆகிய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. பாரதியே 1906 ஆகஸ்ட் இதழ் தலையங்கத்தில் கூறியுள்ளபடி, மாதர் முன்னேற்றத்துக்காக நடத்தப் பெற்ற 'சக்கரவர்த்தினி'யில், மாதர்கள் எழுதிய எழுத்தோவியங்கள் மிகவும் குறைவாக இருந்திருக்கின்றன என்று தெரிகிறது.
இவர்கள் எழுதியுள்ள விஷயங்கள் பெரும்பாலும் பத்திரிகையின் நோக்கமாகிய மாதர் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவையாகவே உள்ளன. உதாரணமாக "பெண்மணிகளின் பரிதாபகரமான ஏலம்" என்ற தலைப்பில் டி.வி.அய்யசாமி அய்யர் (ஜூலை இதழில்) எழுதியுள்ள கட்டுரை வரதட்சிணைக் கொடுமையைக் கண்டித்து எழுதியது. "பெண்கள் அபிவிருத்தியடைவதின் அவசியத் தன்மை" என்ற தலைப்பில் எஸ்.ஸ்ரீனிவாச அய்யர் எழுதியுள்ளது பெண் கல்வியை வலியுறுத்தி எழுதப்பட்ட கட்டுரையாகும். "ராம திலகம்" என்ற தலைப்பில் ஒரு தொடர் நாடகம் வந்திருக்கிறது. இது ஷேக்ஸ்பியரின் 'ரோமியோ - ஜூலியட்' நாடகத்தின் அப்பட்டமான தழுவல். இந்த நாடக ஆசிரியர் ரோமியோவை ராமாமிர்தமாகவும், ஜூலியட்டை திலகமாகவும் மாற்றி, நாடகத்துக்கு ராமதிலகம் என்று பெயர் வைத்துவிட்டார். இதில் நாயகனும் நாயகியும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கலப்புத் திருமணத்தை வரவேற்று இந்த நாடகம் எழுதப்பட்டிருக்கிறது.
ஆடவர்கள் எழுதியுள்ள விஷயங்களைத் தவிர, ஜூலை இதழில் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் எழுதியுள்ள "படித்த பெண்களினால் எய்தும் பயன்" என்ற தொடர் கட்டுரையின் இறுதிப் பகுதி இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்டுரை 'பெண்கள் படித்தால் கெட்டுப் போய்விடுவார்கள்' என்ற போலி வாதத்தை மறுப்பதாகவும், கணவன் மனைவி இருவருக்கும் கல்வி எத்தனை அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. அடுத்ததாக ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி "பார்வதி சோபனம்" என்ற தலைப்பில் பாடியுள்ள அம்மானைப் பாடலில் 'மன்மத தகனம்' என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. இந்த அம்மானைப் பாட்டில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவும் இல்லை.
'சக்கரவர்த்தினி' பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் பாரதி பத்திரிகையின் இதழ்களில் புத்தக விமர்சனம், பொது வர்த்தமானங்கள் என்ற தலைப்பில் செய்திக் குறிப்புகள் ஆகியனவற்றையும் தனது பெயரைக் குறிப்பிடாமல் எழுதியிருக்கிறார்.
உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார் நடத்திய "குமரி மலர்" எனும் இதழில் கிடைத்த சில தகவல்களின்படி 1906 ஆண்டு பிப்ரவரி, மார்ச் 'சக்கரவர்த்தினி' இதழ்களில் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் 'மகாமகோபாத்யாய' பட்டம் பெற்றதற்காக நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பாரதி பாடிய "செம்பருதி ஒளி பெற்றான்" எனும் மூன்று பாடல்களும், அய்யரவர்களைப் பற்றி பாரதி முன்னுரையாக எழுதிய ஒரு சிறு குறிப்போடு வெளியாகியிருக்கிறது என்பது தெரிய வருகிறது. அது தவிர "மாதர் கல்விக் கணக்கு" என்ற தலைப்பில் இந்திய மாதரின் கல்வி நிலை மிகவும் பரிதாபமாக இருப்பதைப் பற்றியும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் லக்ஷ்மிநரசு நாயுடு என்பவர் வேறொரு வாராந்திரப் பத்திரிகையில் எழுதியிருந்த கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு "பெளத்த மார்க்கத்தில் மாதர்கள் நிலை" என்ற நீண்ட கட்டுரையும் எழுதியிருப்பதும் தெரியவருகிறது. 1906 மார்ச் இதழில் சுவாமி விவேகானந்தர் பற்றி "ஸ்ரீமத் ஸ்வாமி விவேகானந்த பரமஹம்சர்" எனும் தலைப்பில் அவரது வாழ்க்கை, பணி பற்றி சில மாதங்கள் தொடர்ச்சியாக எழுதியதும் தெரிய வருகிறது. இந்தக் கட்டுரையில் பாரதி சுவாமி விவேகானந்தரை 'உண்மையான புருஷத் தன்மையும், வீர நெறியும் மனித வடிவெடுத்தாற்போல அவதரித்த ஸ்வாமிகள்" என்று போற்றியிருக்கிறான்.
இந்தக் கட்டுரையில் அறிஞர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் ஆராய்ந்து எழுதியுள்ள சில விஷயங்களைப் பாடமாகக் கொடுத்திருக்கிறோம். மேலும் பல அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரது "பாரதி: காலமும் கருத்தும்" எனும் நூலை வாங்கிப் படித்து பயன் பெறுங்கள். இனி அடுத்த பாடத்தில் சந்திக்கலாம்.
பாடம் 4. "சக்கரவர்த்தினி."
வினாக்கள்.
1. தமிழ் எழுத்தாளர் திருமதி குகப்பிரியை வானொலியில் பேசுகையில் குறிப்பிட்ட பெண்கள் பத்திரிகைகளின் பெயர்கள் எவை? இவை தவிர சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட நூலில் காணப்படும் பத்திரிகைகளின் பெயர்கள் என்னென்ன?
2. 1905இல் வெளியான "செந்தமிழ்" எனும் பத்திரிகையில் 'சக்கரவர்த்தினி' பற்றி வந்த மதிப்புரை என்ன?
3. மதுரை சேதுபதி பள்ளியில் பாரதியாருக்குக் கிடைத்த சம்பளம் எவ்வளவு?
4. "காசியில் சுப்பையா" என்ற கட்டுரையில் பண்டிட் நாராயண ஐயங்கார் குறிப்பிடும் சரஸ்வதி பூஜை உபந்நியாசம் பற்றி எழுதுக:
5. 'வந்தேமாதரம்' பாடலுக்கு முன்னுரை எழுதுகையில் பாரதி கூறும் கருத்து என்ன?
6. பாரதி நடத்திய "சக்கரவர்த்தினி" பத்திரிகை பற்றிய உங்கள் கருத்தை ஒரு பக்கத்திற்கும் மிகாமல் ஒரு கட்டுரையாக வடித்திடுக.
No comments:
Post a Comment
You can send your comments