Wednesday, April 21, 2010
"கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்"
திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
நடத்தும் மகாகவி பாரதி பற்றிய இலவச அஞ்சல் வழிப்பயிற்சி - பாடம்
பாரதி - "கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்"
(மகாகவியைப் பற்றி அவருடைய சீடரான பாரதிதாசன் அகில இந்திய வானொலியில் நடந்த கவியரங்க நிகழ்ச்சியொன்றில் பாடிய கவிதை வரிகள் மகாகவியின் பெருமைகளை எல்லா பரிமாணங்களிலும் வெளிக்கொணர்ந்தது. அப்படி அவர் பாடிய அந்தக் கவிதை இன்று வரை மேடைகள் தோறும் பாரதி - பாரதிதாசன் அன்பர்களால் குறிப்பிடப்படுகின்றது. அந்தக் கவிதை வரிகளைக் கொண்டு ஒவ்வொரு வரிக்கும் ஒரு கட்டுரையாக தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் தி.சா.ராஜு அவர்கள் "பாவேந்தரின் பாரதி" எனும் நூலை எழுதினார். அதன் பிரதிகள் இப்போது கிடைக்கிறதா தெரியவில்லை. எனினும், அந்த நூலில் பாரதிதாசன் பாரதியைப் போற்றிய "கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்" எனும் தலைப்பிலான கட்டுரையை, சில தேவையான விளக்கங்களோடு இந்த மாதப் பாடமாகக் கொடுத்திருக்கிறோம். படியுங்கள்.)
1946-ம் ஆண்டு - பாரத தேசம் சுதந்திரமடைவதற்கு முன்பு, சுதந்திரம் பெறும் நாள் நெருங்கி விட்டது என்று மக்கள் உணருகின்ற நேரம் அகில இந்திய வானொலி ஒரு கவியரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன் தலைவர் பாரதிதாசன். கவியரங்கத்தில் பங்கேற்ற கவிஞர்கள் பாடி முடித்தபின் கவியரங்கத் தலைவர் பாரதிதாசன் தன் கவிதையை வழங்கினார்.
"தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம் தமிழுக்குத் தகும் உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் துவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான் ...
என்று தொடங்கி அதன்பின் அந்த மகாகவிஞனின் பெருமைகளை வரிசைப்படுத்திச் சொல்லச் சொல்ல அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அவை:
பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன், புதிய
அறம் பாடவந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் ...
இப்படி பாரதியைப் பற்றி அவர் வர்ணித்துக் கொண்டே போனார். கேட்டவர் அனைவரும் உணர்ச்சிப் பிழம்புகளாயினர். பெருமை வாய்ந்த கவிஞர் பெருமானின் தகுதி வாய்ந்த சீடனாய்த் தன் பெயரையே மாற்றிக்கொண்ட அந்த பெருந்தகையாளன் தன் குருநாதரின் பெருமைகளைச் சொல்லச் சொல்ல கேட்போர் மகிழ்ந்து ஆர்ப்பரித்தனர். தன் கவிதையின் இறுதியில் "என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!" என்று தன் வியப்பை வெளியிட்டு வாழ்த்தியபோது அரங்கம் அதிர்ந்ததாம். இந்தக் கவிதையில் பாரதிதாசன் தன் குருநாதரைப் பற்றிக் கூறும் பதிமூன்று பெருமைகள் அனைத்தையும் விளக்கி ஓர் நூலை எழுத்தாளர் தி.சா.ராஜு அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதில் 'கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்' எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இந்த மாதப் பாடமாகப் பார்ப்போம். அவருடைய கட்டுரையின் இடையிடையே பாடம் படிப்போருக்கு விளங்கும் பொருட்டு சில இடைச்செறுகல்களையும் சேர்த்திருக்கிறோம். மகாகவி பாரதியார் எழுதியுள்ள 'ஞானரதம்' முதலான சில அற்புதக் கதைகளின் சிறப்பை இந்நூலில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்த விமரிசனத்தைப் படித்தபின் அந்த கதைகளைத் தேடிப் படித்துப் பாருங்கள், அப்போதுதான் அதன் சிறப்பினைப் புரிந்து கொள்ள முடியும். இவைகள் பொழுதுபோக்குக்காகப் படிக்கக்கூடிய கதைகள் அல்ல. ஆழ்ந்த கருத்துக்களும், கவியுள்ளத்தின் மேலோங்கிய புலமையையும் இவற்றில் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
கதாசிரியர் பாரதி
பாரதியார் ஒரு மகாகவி என்று எல்லோருக்கும் தெரியும். அவர் மிகச் சிறந்த கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்ற விவரத்தையும் சிலர் அறிவார்கள். ஆனால் அவர் மிகச் சிறந்த கதாசிரியர் என்ற தகவல் முற்றிலும் புதிது. பாரதி என்ற முழு இயக்கத்தின் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்து அனுபவித்தவர் கனகசுப்புரத்தினம். ஆகவே அவர் அந்தக் கதாசிரியரின் திறமையை ஒப்பற்ற சொற்களால் சமைத்து உலகிற்கு அறிவித்து விட்டார். அதன் பொருளை அறிந்து கொள்ள வேண்டியது நம் கடமை.
பார்க்கப் போனால் மனவளம் உள்ளவர்கள்தான் கதையைப் படைக்க முடியும். ஒரு சமுதாயத்தில் எந்த அளவுக்கு கதை சொல்லும் திறனும், அதைக் கேட்கும் ஆர்வமும் பெருகியிருக்கிறதோ, அந்த உயரத்திற்குத்தான் அதன் வளர்ச்சியும் என்று கொள்ள வேண்டும். கதை என்பது என்ன? அது கற்பனை என்று, சொல்லுபவருக்கும், கேட்பவருக்கும் தெரியும். என்றாலும் அது முழுவதும் கற்பனையும் இல்லை. அதனுள் உண்மையும் பொதிந்திருக்கும் என்ற விவரம் மன வளர்ச்சி யுள்ளவர்களுக்குத்தான் தெரியும்.
ஒரு நல்ல கதையே படிப்பினை, ஒரு நலங்குறைந்த கதையிலும் படிப்பினை இருக்கும், என்ற முதுமொழி ஒன்று கூறுவதுண்டு. 'இவ்வளவு தொலைவு என்னைத் தொடர்ந்து வந்த நாயும், என்னுடன் அனுமதிக்கப்படாவிட்டால், எனக்கும் சுவர்க்கம் வேண்டாம்' என்று யுதிஷ்டிரன் சொன்னான்*.
* (இந்த வரலாற்றைத் தெரிந்து கொண்டால்தானே நமக்குப் புரியும்? இதோ அந்தக் கதை:- மகாபாரதக் கதையின் இறுதியில் பாண்டவர்கள் ஐவரும் மனைவி திரெளபதி உடன்வர தங்கள் நாட்டை நீங்கி சுவர்க்கத்திற்குப் பயணப்பட்டனர். தவக்கோலம் பூண்டு தத்தமது வயதுப்படி மூத்தவன் முதலாவதாகவும் மற்றவர்கள் தொடர்ந்தும் போனார்கள். கடைசியாக திரெளபதி சென்றாள். அவளுக்குப் பின் ஒரு நாயும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றது. அர்ஜுனன் தன் கையில் காண்டீபம் எனும் வில்லையும் அம்புறாத் தூணியையும் எடுத்துச் சென்றான். அப்போது அக்னி தேவதை தோன்றி இந்த காண்டீபத்தை வருணனிடமிருந்து பெற்றாய், அதை இப்போது அவனிடம் திரும்பக் கொடுத்து விடு, இந்தக் கடலில் வீசிவிடு என்றது. அர்ஜுனன் அப்படியே செய்தான். அப்படிச் செய்யும்போது உலக பந்தங்களை விட்டுவிட்டான்.
பின்னர் பாண்டவர்கள் பூமியை வலம் செய்துகொண்டு இமயமலைச்சாரலில் நுழைந்து மேலே செல்லத் தொடங்கினர். அங்கு பரந்து விரிந்திருந்த மணற்பீடபூமியில் நடந்தார்கள். வடக்கே மேருமலை, அங்கிருந்து மேலே சுவர்க்கம் செல்ல திட்டமிட்டிருந்தார்கள். அப்போது அந்த மணல்வெளியில் திரெளபதி வீழ்ந்து இறந்தாள். பீமன் தருமனிடம் திரெளபதி இறந்தது ஏன் என்று கேட்டான். அதற்கு தருமன் அவள் ஐவரிடத்தும் அன்பு வைத்திருந்தாள் என்றாலும் அர்ஜுனனிடம் தனிப்பாசம் இருந்தது. அந்த பாரபட்சம் காரணமாகவே அவள் இறந்தாள் என்று திரும்பிப் பார்க்காமலே தருமன் கூறி நடந்தான். சற்று தூரம் போனபின் சகாதேவன் வீழ்ந்து இறந்தான். அவன் இறந்த காரணம் பற்றி பீமன் கேட்டதற்கு, தருமன், சாஸ்திர ஞானத்தில் தனக்கு நிகர் யாருமில்லை என்று கல்விச் செருக்கு காரணமாக அவன் மாண்டான் என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான் தருமன். அடுத்தபடி நகுலன் உயிர் துறந்தான். தன் மேனியழகைப் பற்றிய தற்பெருமையினால் அவன் இறந்தான் என்று தருமன் சொல்லித் திரும்பிப்பாராமல் நடந்தான். அடுத்ததாக அர்ஜுனன் இறந்து வீழ்ந்தான். அதற்கு அவன் தனியொரு ஆளாய் எதிரிகளை வெல்ல முடியும் என்று செருக்கோடு போரிட்டதனால் மாண்டான் என்று கூறி நடந்தான் தருமன். பின்னர் பீமன் சொன்னான், அண்ணா, இப்போது என் முறை, நான் மாண்டு போவேன், அதற்குக் காரணத்தைச் சொல்லிவிட்டுப் போ என்றான். தருமன் சொன்னான் உன்னுடைய உடல் வலிமை பற்றிய உன் செருக்கே உன் இறப்புக்குக் காரணம் என்று சொல்ல பீமனும் இறந்து வீழ்ந்தான்.
இப்போது தருமன் மட்டும் தனியாக மேல்நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். இதுவரை அவர்களைப் பின்பற்றி வந்த நாயும் அவனுடன் வந்தது. அப்போது இந்திரன் அவன் முன் தோன்றி தன்னுடன் விமானத்தில் ஏறி சொர்க்கத்துக்குப் போகலாம் வா என்றான். என் சகோதரர்களும், திரெளபதியும் என்ன கதி ஆனார்கள் என்றான் தருமன். இந்திரன் இதுவரை நீ ஏன் திரும்பிப் பார்க்கவில்லை என்று கேட்டான், அதற்கு தருமன் சொன்னான் திரும்பிப் பார்த்திருந்தால் எனக்கு இருந்த சகோதரபாசம் விடவில்லை என்பதால் நானும் வீழ்ந்திருப்பேன் என்றான். ஒரு லட்சியத்திற்காகப் பயணம் செய்வோன் பந்தபாசத்திற்கு அடிமையாகக் கூடாது என்றான். இந்திரன் சொன்னான் உன் சகோதரர்களும் திரெளபதியும் சொர்க்கத்தில் சூட்சும சரீரத்தோடு காத்திருக்கிறார்கள். ஆனால் நீ மட்டும் இந்த மனித சரீரத்தோடு அங்கு வரலாம், இந்த விமானத்தில் ஏறிக்கொள் என்றான். அப்போது அவனுடன் வந்த நாய் முதலில் விமானத்தில் ஏற முயன்றது. இந்த நாய்க்கு சொர்க்கத்தில் இடமில்லை நீ மட்டும் வா என்றான் இந்திரன்.
என்னை நம்பி என்னுடன் வந்த இந்த நாய்க்கு இடமில்லை யென்றால் நான் சொர்க்கத்துக்கு வரமாட்டேன் என்றான் தருமன். அப்போது இந்திரன் கேட்டான், இந்த நாயோடு இருப்பதானால் மண்ணுலகத்தில் இரு, உன் சகோதரர்கள் மனைவியுடன் இருக்க வேண்டுமானால் சொர்க்கத்துக்கு வா என்றான். அதற்கு யுதிஷ்டிரன் எல்லா பிராணிகளையும் தெய்வீகம் வாய்ந்தவைகளாக நான் எண்ணுகிறேன். என்னை நம்பி வந்த நாயைப் புறக்கணிப்பது தர்மமாகாது. என்னுடன் பிறந்தவர்களையும் சொர்க்கத்தையும் நான் துறக்க ஆயத்தமாக இருக்கிறேன் ஆனால் என்னை நம்பி வந்த நாயை நான் பிரியேன் என்றான். அப்போது அந்த நாய் அழகு நிறைந்த தர்ம தேவதையாகக் காட்சியளித்து, தருமனைப் பார்த்து, "மகனே! உன்னை நான் பெரிதும் பாராட்டுகிறேன். முன்பொரு தடவை நச்சுப் பொய்கையில் உன்னை நான் சோதித்தேன். உன் சொந்தச் சகோதரர்களுக்கும் மாற்றாந்தாய் சகோதரர்களுக்கும் இடையில் யாதொரு வித்தியாசமும் நீ பாராட்டவில்லை. இப்போது இந்த அற்பப் பிராணியிடம் நீ வைத்திருக்கும் கருணையைக் கண்டேன். உன் பூதவுடலோடு நீ சொர்க்கத்துக்கு வரலாம்" என்றது தர்ம தேவதை.) இந்தக் கதையே ஒரு படிப்பினை, பெருநீதி. எல்லா யுகத்திற்கும் பொருந்தக் கூடிய பொது மரபு.
பயணம் செய்யும் மகனின் கையில் துணியினால் மூடிய கலயத்தைக் கொடுக்கிறாள் ஒரு தாயார். அதனுள் நீரும் ஒரு நண்டும் உள்ளன. வழி நடந்ததனால் களைத்துப் போன மகன் தலைமாட்டில் கலயத்தை வைத்துவிட்டு உறங்கிப் போகிறான். பாம்பு ஒன்று ஊர்ந்து வந்து கலயத்தினுள் தலையை விடுகிறது. நண்டு அதைக் கத்தரிக்கிறது. ஆகவே, 'தாய் சொல்லைத் தட்டாதே', என்பது ஒரு படிப்பினை கதை. இதில் நீதி போதனை இருக்கிறது என்றாலும் அதை விளக்குவதற்காக நிகழ்ச்சிகள் வலுக்கட்டாயமாகக் கோத்த கதை.
கவிஞர் செவியுற்ற கதைகள்
தாய் உருவத்தில் வரும் கண்ணன் (கண்ணன் - என் தாய்) தன் மகன் பாரதிக்குக் கதைகள் சொல்லுகிறாள். அதை அவரே விவரிக்கக் கேட்போம்.
'கண்ணனெனும் பெயருடையாள் - என்னைக்
கட்டி நிறை வான் எனுந்தன் கையிலணைத்து
மண்ணெனும் தன் மடியில் வைத்தே - பல
மாயமுறும் கதை சொல்லி மனங்களிப்பாள்' ... எப்பேர்ப்பட்ட கதைகள்?
'இன்ப மெனச் சில கதைகள் - எனக்
கேற்ற மென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள்' ... அதை அவர் சொல்லும் முறை மிகச் சிறப்புடையது.
'என் பருவம் என்றன் விருப்பம் எனும் --
இவற்றினுக் கிணங்க வென்னுள மறிந்தே
அன்போடவள் சொல்லி வருவாள் - அதில்
அற்புத முண்டாய்ப் பரவச மடைவேன்.'
ஒருவேளை தான் தன் தாயிடம் கேட்ட கதைகளைத்தான் அவன் நமக்கெல்லாம் கூறி நம்மையும் பரவசப் படுத்துகிறனோ?
ஞானரதம்
ஞானரதம் என்றோர் கற்பனைத் தேரைப் படைத்து அதை உலாவ விடுகிறார் கவிஞர்.
'ஞானரதம் போலொரு நூல் - எழுதுதற்கு
நானிலத்தில் ஆளில்லை'
என்ற உண்மையைக் கூறுகிறார் பாவேந்தர். அந்த ரதம் உபசாந்தி லோகம், கந்தர்வலோகம், சத்தியலோகம், மண்ணுலகம், தர்மலோகம் என்றும் பல இடங்களுக்குப் பவனி வருகிறது. உலாவும் மனச்சிறு புள்ளினை எங்ஙணும் ஓட்டி மகிழ்ந்த களியாட்டம் அது. ஆகவே,
'பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர்
வண்டு பாடுவதும் வியப்போ?'
இந்த ஞானச் சகடம் குறித்துப் பாரதியாரே பேசுகிறார். சகல மனிதர்களிடத்திலும் ஈசன் ஞானமென்பதோர் தெய்வீக ரதத்தைக் கொடுத்திருக்கிறார். அது விரும்பிய திசைகளுக் கெல்லாம் சென்று விரும்பிய காட்சிகளை எல்லாம் பார்த்து வரக்கூடிய வல்லமை யுடையது. எங்கெல்லாம் அழைத்துப் போய்விடுகிறார் கவிஞர். பயணத்தில் அலுப்புத் தோன்றாமலிருக்கப் பருவக் கன்னி ஒருத்தியையும் துணை அனுப்புகிறார். அந்தப் பெண் எப்படியிருப்பாள்? அவளைப் பற்றிய வர்ணனையை மகாகவியின் வாக்கால் பார்க்கலாம்.
"சந்திர கலை வீசும் முகம், அதன் மீது சிறியதும், மூன்று விரல் உயரமுடையதுமான, மலர்களால் செய்யப்பட்ட கிரீடம், உயிரென்ற வண்டு வீழ்ந்து சிறகிழந்து தள்ளாடும் கள்ளூற்றுக்களாகிய இரண்டு கரிய விழிகள், தின்பதற்கல்லாது, தின்னப் படுவதற்கு அமைந்தன போன்ற பற்கள் (இந்தக் கற்பனையை, உலகில் எந்த மொழியிலும் எவரும் கையாளவில்லை) தனது பாலிறகுகளால் விகாரஞ் செய்யப்படாத திவ்விய உருவம், தீண்டுவோன் உடற்குள்ளே இன்ப மயமான மின்சாரம் ஏற்றுகின்ற கைகள், மண்ணுலகத்துப் பெண்களைப் பேசுமிடத்து, கந்தர்வச் சாயல் என்கிறார்கள். இவளது இயலையும், சாயலையும் என்னென்பேன். தெய்வ இயல், தெய்வச் சாயல் ........"
உயரப் பற
அந்தப் பெண்ணுடன் கைகோத்துக் கொண்டு உலவுகிறார் கவிஞர் - அல்ல - பறக்கிறார். அவருக்கும் சிறகுகள் முளைத்து விடுகின்றன. அந்த நாட்டில் தேவையான போது, ஆண் பெண், இருபாலருக்கும் சிறகுகள் முளைக்கும். கந்தர்வ லோகத்தில் குழந்தைகள் பந்தாடுகிறார்கள். ரோஜாப்பூக்களினால் ஆன பந்து, அங்கு மதனன் விழா நடைபெறுகிறது. அருவி, வாவி, நந்தவனம் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கிறார்கள். சித்திரச் சாலையின் எழில் நெஞ்சை அள்ளுகிறது. தெய்வீக இன்னிசை கேட்டுக் கொண்டே இருக்கிறது. உடலுக்கு மிகவும் இதமான தட்ப வெப்பம், எப்போதும் சந்திர கிரணங்களைப் போன்ற ஒளி.
அங்குள்ள மாளிகைகளைக் கஸ்தூரிக் கற்களாலும், தேவ சந்தன மரத்தாலும் அமைத்திருக்கிறார்கள். அங்கேயுள்ள இருக்கையில்தான் எவ்வளவு சுகம்? இலவம் பஞ்சு போன்ற ஏதோ ஒரு பொருள் பொதிந்தனவாய், வெண்பட்டால் மறைக்கப் பட்டிருந்தன. அதில் அமர்ந்த வுடனேயே தாயின் மடியில் சாய்ந்தது போல் உள்ளத்திற்கு ஆறுதல் உண்டாகிறதாம். அங்கே பரந்து கிடக்கும் கடல் தென்படுகிறது. புஷ்பக் குன்றுகள் போன்ற கப்பல்கள், அன்னங்களைப் போல படகுகள், வெள்ளி மேகம், அங்குள்ள தாரகைகள் வானக் கடலிலே வெடித்தெழும் வயிரங்கள்.
ஒரு பாரசீகப் பழமொழி உண்டு. 'குடிகாரன் முதலில் மதுவை விழுங்குவான்; அடுத்து, மது அவனை விழுங்கும்' என்று. கவிஞர் கந்தர்வ லோகத்தில் அந்த நிலையில் தான் இருக்கிறார். ஒரு நாள் தனியே உட்கார்ந்திருக்கும் போது பல் வகையான சிந்தனைகள் அவருடைய உள்ளத்தில் உதிக்கின்றன. இந்தக் கந்தர்வலோகத்தில் இவர்கள் தினமும் செய்த காரியத்தையே திரும்பத் திரும்பச் செய்து நிறைவுற்று வாழ்கிறார்களே, அவர்களிடம் அணு அளவுகூட அதிருப்தி இல்லையே, ஆனால் என்னை அதிருப்தி கவ்வுகிறதே!
அப்போது பர்வதகுமாரி அங்கு வந்து, அவரைத் தழுவிக்கொண்டு சில அதி அற்புதமான உண்மைகளைத் தெரிவிக்கிறாள். 'எங்கள் உலகத்தில் நோய்கள் இல்லை, மரணம் இல்லை, பொய் இல்லை, இரட்டுற மொழிதல் இல்லை என்றாலும் மானுட ஜன்மம் எவ்வளவோ சிறப்புடையது. எதிலும் திருப்தி ஏற்படாததால் அந்தப் பிறப்பு ஆத்ம தேட்டத்திற்கு மிகவும் செளகர்யமாக அமைந்துள்ளது. தேவர்கள்கூட விடுதலை அடைய வேண்டுமானால் மானுட ஜன்மம் எடுத்தே தீரவேண்டும். சங்கரர், சுகர், ஜனகர், கிருஷ்ணன் போன்றவர்கள் கந்தர்வ லோகத்தில் பிறக்க இயலாது. (மானுடத்தின் பெருமையை கம்பர் மட்டுமல்ல, மகாகவி பாரதியும் இங்ஙனம் போற்றுகிறார்)
'தேவர் அனையவர் கயவர்' என்று அதனால்தான் சென்னாப்போதார் கூறினாரோ?
தொடர்ந்து கவிஞர் நம்மைச் சத்திய லோகத்துக்கும், தர்மலோகத்துக்கும் அழைத்துச் செல்லுகிறார். தர்மலோகத்திற்குப் போகும் போது ஓர் இளைஞனைச் சந்திக்கிறார். அவனைக் கண்டதும், அந்த வடிவத்தைப் பார்த்தே சொக்கி, மயங்கி காலில் விழுந்து வணங்குகிறார்.
உபநிஷத்தில் உறைந்த கவி
"தர்மம் சர" (அறமே செய்க!)
என்று அவன் கவிஞரை வாழ்த்துகிறான். (இந்த மகா வாக்கியத்தைப் பாரதி தைத்ரீய உபநிஷத்திலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறார். எப்போதுமே அவர் உள்ளம் வேத வானில் ஊர்ந்து கொண்டிருந்தது)
தர்மலோகத்தில் அவர் கண்வ மகரிஷியைச் சந்திக்கிறார். எல்லோரையும் விட்டு அவர் கண்வரைத் தேர்ந்தெடுப்பானேன்? தன் முயற்சியால் மேன்மை எய்திய விஸ்வாமித்திரரின் மகளான க்ஷத்திரியப் பெண்ணைத் தமது வளர்ப்பு மகளாக ஏற்றுக் கொண்டதாலா? வேதங்களிலேயே கண்வாகை சிறப்பு மிக்கதாகும். சில முக்கியமான ஐயப்பாடுகளை அவர் முன்பு வைக்கிறார்.
"ஸ்வாமி! ஒருவன் பிறக்கும் போதே பிராமணனாகப் பிறக்கிறானா? அல்லது பயிற்சியினால் பிராமணன் ஆகிறானா?"
வெடிப்புறப் பேசுகிறார் முனிவர். பிறக்கும் போது மனிதர்களெல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும், குணகர்மங்களினாலும், வெவ்வேறு வர்ணத்தினராகின்றார்கள். மண்ணுலகில், பாரத தேசத்தில்தான் வர்ணாசிரம பேதங்கள் இருக்கின்றன. அங்கே தாம் சொல்வது போல் நடக்கவில்லையே!
இழிவு
கண்வருடைய மறுமொழி நம்மைத் திடுக்கிட வைக்கிறது. பாரத தேசத்தில்தான் வர்ணாசிரம பேதங்களிருப்பதாகச் சொல்லுவது பிழை. சகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில்தான் வர்ணாசிரம நெறி சீர்கெட்டுப் போயிருக்கின்றது. பூர்வத்திலே, பாரத நாட்டில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத்தான் இருந்தது. தற்போது தவறிவிட்டது. அது பற்றியே அந்நாட்டினர், வறுமை, நோய், அடிமைத்தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.
கவிஞர் வேண்டுகிறார்; பிராமண தர்மங்களை எனக்குப் போதனை செய்ய வேண்டும்.
உலகத்தாருக்கு அறிவுப் பயிற்சி கொடுக்கும் வகுப்பினர் பிராமணராவார்கள். சகல விதமான நூல்களிலும் பயிற்சி கொண்டிருத்தல், அதனை உலகத்தாருக்குப் போதனை செய்தல், உலகத்துத் தொழில்களெல்லாம் இனிது நடப்பதற்கு ஆதரவாயிருத்தல், லெளகிகப் பெருமைகளிலே ஆசையில்லாமை - இவையே சுருங்கச் சொல்லுமிடத்து பிராமண தர்மத்தின் சாராம்சங்களாகும்.
அங்கே செவிமடுத்த செய்திகளைப் பின்னாளில் முரசு கொட்டிப் பாடுகின்றான் கவிஞன்.
"சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்று மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்
ஆதரவுற் றிங்கு வாழ்வோம் - தொழில்
ஆயிர மாண்புறச் செய்வோம்.
நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானுடச் சாதி.
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்"
மண்ணுலகம்
கவிஞர் நம்மை மீண்டும் மண்ணுலகத்திற்கு அழைத்து வருகிறார். .... கந்தர்வ நாட்டைப் பற்றிக் கேட்டீர்களே! இந்த மண்ணுலகத்தில் நமக்குள்ள செளகர்யங்களைப் பற்றிச் சிறிது கேளுங்கள்!
சென்னையில் ஒரு வாடகை வீட்டின் பின் பகுதியில் கவிஞரும், முன் பகுதியில் ஒரு ராயரும் குடியிருக்கின்றனர். அவருக்குப் பகல் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ ஓர் உத்தியோகம். உடம்பில் கோபி சந்தன முத்திரைகள் எத்தனையோ அத்தனை குழந்தைகள் அவருக்கு. அந்த நாளிலே குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரசாரம் அறவே கிடையாது. அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம். அந்த முற்றத்திலேயே ஒரு பசுமாடு. இத்துடன் ஒட்டுக் குடியாக அவருடைய பந்துக்கள் சிலர் வசித்தார்கள்.
இரவிலே கொசுக்களின் தொல்லை பொறுக்க முடியாது. எனக்குத் தூக்கமே வராது. ராயருக்குக் காச நோயாதலால் அவர் இருமிக் கொண்டே இருக்கிற சப்தம் ஓயாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள், ஒன்று மாற்றி மற்றொன்று அழுது கொண்டே இருக்கும். கர்ப்பிணியாகிய அவர் மனைவி இடையிடையே, விழித்துக் குழந்தைகளையோ, அல்லது கடவுளையோ அல்லது ராயரைத்தானோ, யாரையோ, கன்னட பாஷையிலே திட்டிவிட்டு மறுபடியும் உறங்கி விடுவாள்.
மண்ணுலகம் மிகப் பெரிது. அதில் என் அனுபவ முழுவதையும் எழுத வேண்டுமானால் மகா பாரதத்தைப் போல பதினெட்டு மடங்கு புஸ்தகமாகும். இங்கு ஓரிரண்டு மாதிரி சீன்களே குறிப்பிடப்படும்.
தொண்டர் சங்கம்
திருவல்லிக்கேணியில் 'செ......... சங்கம்' என்பதாக ஒரு தேசபக்தர் சபை உண்டு. அதில் தேசபக்தர்கள்தான் கிடையாது. நானும், சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து 'காரியங்கள்' (ஒரு காரியமும் செய்வதில்லை) நடத்தினோம். நாங்கள் தேசபக்தர்கள் இல்லை என்று, அந்த சபை ஒன்றுமில்லாமல் போய்விட்டதிலிருந்து நன்கு விளங்கும்.
நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ் சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத் தொண்டர்கள் - அதாவது காலணாவின் அடியார்க்கும் அடியார்கள்.
நையாண்டி - அங்கத இலக்கியம் (ஆங்கிலத்தில் Satire) என்பது மிக உயர்ந்த கலை. இதை எல்லோராலும் செய்ய முடியாது. அந்த வகை எழுத்தை அனுபவிப்பதற்கும் தரமுள்ள ரசிகத் தன்மை தேவை. நாட்டுப் பற்றும், சமூக சீர்திருத்த நோக்கமும் இருந்தாலும்கூட அடிமைத் தனத்தில் சிக்கிய நிலையில் சில அறிவாளிகள் இந்தியாவில் இருந்தனர். இவர்கள் தங்களை நிதானக் கட்சியினர், மிதவாதிகள் (Moderates) என்று அழைத்துக் கொண்டனர். 1907-ம் ஆண்டில் சூரத் எனும் நகரத்தில் நடந்த காங்கிரசில் இந்தப் பெருந்தகைகள் நடந்து கொண்ட முறை விடுதலை முயற்சிக்கே குந்தகமாக இருந்தது. ஆங்கிலேயர் மீது வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்கிய இந்த மாவீரர்கள் தங்கள் நாட்டுத் தொண்டர்களையே தாக்கினர்.
இதைக் குறித்து பாபு அரவிந்த கோஷ் (அப்போது அவர் யோகி அரவிந்தர் ஆகவில்லை) 'வந்தேமாதரம்' பத்திரிகையில் இரண்டு அருமையான படைப்புக்களை உருவாக்கினார். காங்கிரஸ் படுகொலை என்ற மூன்றங்க நாடகமொன்று (The Slaying of Congress - A tragedy in Three Acts) இன்னொன்று 'சதியின் உருவகம்' (Parable of Sati) இந்த இரண்டுமே நிகரற்ற படைப்புகள்.
கல்கத்தாவிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த (ஆசிரியர்: அரவிந்தர்) 'வந்தேமாதரம்' இதழின் தமிழ் வடிவமாகவே, அந்நாளில் பாரதியின் 'இந்தியா' விளங்கிற்று. அவை ஒன்றை ஒன்று அடியொற்றிப் போயின. அரவிந்தருக்குத் தமிழ்ப்பயிற்சி இருந்தது என்பதையும் அன்பர் குழாம் தெரிந்து கொள்வது நலம். அந்தச் சமயத்தில் பாரதியார் - வடமொழி, தமிழ், ஆங்கிலம் ஆகியவை கலந்த மணிப்பிரவாள நடையில் "காங்கிரஸ் கீதை" என்ற துண்டுப் பிரசுரத்தையே வெளியிட்டார்.
* "தர்ம க்ஷேத்ரே சூரத் க்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவஹ:"
என்று துவங்கி, கீதையின் சந்தத்திலேயே சூரத் நகரத்தில் நிகழ்ந்த நாற்காலிப் போரை வர்ணிக்கிறார். அங்கு நாற்காலிகளாலேயே, நிதானக் கட்சியினர் தீவிரக்கட்சியினரைத் தாக்கினர். (இங்கு தீவிரக்கட்சியினர் எனப்பட்டோர் சுதந்திர இயக்கத்தில் திலகரின் தலைமையில் இயங்கியவர்கள், இன்றைய 'பயங்கரவாதிகள்' எனும் பொருளில் பார்க்கக்கூடாது)
(பகவத் கீதையின் தொடக்கத்தில் வருகின்ற ஒரு ஸ்லோகத்தை இப்படி உருமாற்றி சூரத் காங்கிரசுக்கு உதாரணம் காட்டினார் பாரதியார். கீதையின் முதல் ஸ்லோகம் இதோ: திருதராஷ்ட்ர உவாச "தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய". இதன் பொருள் திருதராஷ்டிரர் சொல்லுகிறார், ஸஞ்ஜய! தர்மபூமியான குருக்ஷேத்திரத்தில் ஒன்றாகக் கூடியிருந்து யுத்தம் செய்ய விரும்பியிருக்கிற என்னுடைய மக்களும், பாண்டுவின் புதல்வர்களும் என்ன செய்தார்கள்?" என்கிறார். இதை மாற்றி எழுதிய பாரதியார் குருக்ஷேத்திரத்துக்குப் பதிலாக சூரத் நகரத்தில் மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே நடந்தது என்ன என்பதுபோல கேள்வியை மாற்றிக் கேட்கிறார்)
அந்தக் காலகட்டத்தில் 'இந்தியா' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளிலும், அவர் எழுதிய பாடல்களிலும் இதுபோன்ற நையாண்டி அம்சம் நிறைய இருக்கும். மீண்டும் 1917-ல் காங்கிரஸ் கட்சியில் அன்னிபெசண்டின் கை ஓங்கியபோது, "பொன் வால் நரி" (A Fox with Golden Tail) என்ற நையாண்டி நூல் எழுதினார் பாரதியார். அதைப் பலர் படித்துப் பாராட்டினர். அந்த நூலின் ஆயிரம் பிரதி வேண்டுமென யாரோ ஒருவர் தந்தி கொடுத்திருந்தாராம், அதற்கு பாரதியார் 'நான் என் மூளையைக் கசக்கிப் பிழிந்து "பாஞ்சாலி சபதம்" எழுதியிருக்கிறேன், அதை வாங்கி படிக்க நாதியில்லை, இந்த பொன்வால் நரி நூலின் ஆயிரம் பிரதிகள் வேண்டுமாம், கிடக்கிறான்கள் 'விதவைப் பயல்கள்' என்று கோபம் கொண்டாராம்.
'அகடவிகட', 'சாஸ்திரி தர்க்கம்', 'பிராயச்சித்தம்' இப்படிச் சில கதைகள். இவற்றில் தமிழ்நாட்டு வைதிகர்கள் செய்யும் வீண் விவாதங்களைப் பற்றிய கற்பனை உரையாடல் படிக்கச் சுவையாக இருக்கும்.
பிராயச்சித்தம்
பிராயச்சித்தம் என்ற தலைப்பில் ஒரு நாடகம். கப்பல் ஏறிக் கரை கடந்து சென்றால் ஜாதிப்பிரஷ்டம் என்ற நிலை இருந்த காலம். இராமச்சந்திர ஐயர் என்பவர் இங்கிலாந்துக்குச் செல்கிறார்; அங்கு மேரி குட்றிச் எனும் ஆங்கில மாதை திருமணம் செய்து கொண்டு மனைவியோடு ஊர் திரும்புகிறார். அதுமுதல் அவருக்கு இங்கிலீஷ் ராமச்சந்திர ஐயர் என்ற பெயர் வந்தது. அவர் மனைவி மேரி தன் பெயரை சீதாதேவி என்று மற்றிக் கொண்டாள். இவர்கள் நல்ல வசதி படைத்தவர்கள்.
கடல் கடந்து சென்றமைக்காக இவர் 'பிராயச்சித்தம்' செய்து கொள்ள விரும்பி குள்ளநரி ஐயரை அழைக்கிறார். இடையங்குடி நிஷ்கர்ம ஸ்வாமிகள் மடத்து சர்வாதிகாரி மாஷாபூப தீக்ஷிதருக்குக் இவருக்கும் ஓர் உடையாடல் நடக்கிறது. இவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தட்சிணை விஷயமாகப் பேசிக் கொள்கிறார்கள். பிறருக்குப் புரியக்கூடாது என்பதற்காக சம்ஸ்கிருத மொழியில் பேசுகின்றனர்.
தீக்ஷிதர் கேட்கிறார், "அஸ்ய வாக்யம் ஸபலம் வாநவா?" (இவருடைய பேச்சில் பயன் உண்டா?) இப்படிக் கேட்டுவிட்டு தீக்ஷிதர் எட்டு வகையான பிராயச்சித்தங்கள் உண்டு என்று சொல்கிறார். இதற்கு வெங்கு சாஸ்திரி என்பவர் சொல்வதாவது: "யுஷ மதர்த்தே ரெளப்ய ஸஹஸ்ரம்" (உங்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்) என்கிறார்.
அடுத்து தீக்ஷிதர் கூறுகிறார்: "ஸ்ஹஸ்ர த்வயம் தாத்வ்யம்" (இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்)
சாஸ்திரி சொல்கிறார்: "ஸஹஸ்ரோபரி பஞ்ச சதம் ஸாத்யம்" (ஆயிரத்து ஐநூறு என்றால் முடியும்)
வெங்கு சாஸ்திரி ஏதேதோ பேச, தீக்ஷிதர் கூறுகிறார், "குடிலம் இகம் ஸர்வம், மஹ்யம் பஞ்ச ஸணுஸ்ரம் தாதவ்யமேவ" (இதெல்லாம் திருட்டு வார்த்தை. எனக்கு ஐயாயிரம் கொடுத்து விட வேண்டும்).
வெங்கு சாஸ்திரி: "அதிலாப நகர்யோ நரசோபவிஷ்யதி" (மிதமிஞ்சி ஆசைப் பட்டால் காரியம் கெட்டுப் போகும்)
இப்படி இவர்களுடைய உரையாடல் போகிறது. கடல்கடந்து சென்ற ஒருவருக்குப் பிராயச்சித்தம் செய்வதற்கு இவர்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கும் பொருட்டு சம்ஸ்கிருதத்தில் பேரம் பேசி உரையாடுவது பாரதியின் நகைச்சுவைக்கு ஓர் நல்ல உதாரணம்.
நையாண்டி இலக்கியம் பாரதியின் படைப்புகளில் சத்தான பகுதி. பாரதி தொடர்ந்து எழுதுகிறார்:- "மனித ஜாதிக்குத் தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம், இறங்காத விஷம், இதன் பெயர் பணம்."
"இப்பேய்க்கு வணங்கும்படி அவனைத் தூண்டி விடுவது விருப்பம், அதாவது ருசி நீங்கிய விருப்பம், அறிவற்ற விருப்பம், ருசி சகிதமான விருப்ப முடையோர் கந்தர்வர்கள். இறைவா! எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா?" என்று வேறோர் இடத்தில் கேட்கிறார் மகாகவி.
ஞானச் சிறகு
பாரதியின் ஞானரதத்தைக் கதை என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. அவ்வகையில் ஒரு கற்பனை வர்ணனை தமிழ் மொழியில் இன்று வரை வெளிவரவில்லை. ஆதி முனிவர்களின் கருத்துக்கள், நடைமுறைகள் ஆகியன இன்றைய தினசரி வாழ்வுக்கு எந்த அளவு பொருந்தும், அவற்றை நாம் ஏன் ஏற்காமல் வாழ்கிறோம், வெறும் சக்கையைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறோம், என்ற நடைமுறை விவரத்தை அவர் மிகச்சிறந்த கற்பனா வளத்துடன், நிகரற்ற சொற்களில் கோத்து அளிக்கிறார். தமிழ்த்தாயின் திருவடிகளுக்கு இன்னொரு அழகிய மணமிக்க மாலை. உணர்வுத் தெளிவுள்ளவர்கள் இன்னும் உயரப் பறப்பதற்கேற்ற உறுதியான உந்தல். இது முழுவதுமே 'இந்தியா' வார ஏட்டில் வெளிவந்தது. ஞானரதத்தைத் தவிரவும், கவிஞர் பற்பல கதைகள் எழுதியுள்ளார். சந்திரிகையின் கதை, சின்னச்சங்கரன் கதை, ஆறில் ஒரு பங்கு, சில வேடிக்கைக் கதைகள், நவதந்திரக் கதைகள் ஆகியவற்றையும் வரைந்தார்.
சந்திரிகையின் கதையிலே, கதை என்ற அம்சத்தைவிட, பாரதி என்ற ஞானாசிரியன் இடையிடையே தோன்றி, சமுதாயத்திற்கும், தனி மனிதனுக்கும் ஏற்ற அறங்களை வெளிச்சம் காட்டிவிட்டுப் போகிற விவரம் மிகமிக இனியது. விசாலாட்சி என்ற கைம்பெண் ஒருத்தி, தான் மீண்டும் மணம் புரிந்து வாழ வேண்டுமெ என்ற ஆவல் கொள்ளுகிறாள். அந்த நோக்கத்திற்காக உதவி கோரி அவள் ஜி.சுப்பிரமணிய ஐயர், வீரேசலிங்கம் பந்துலு ஆகிய இருவரையும் சந்திக்கிறாள். இந்த இரு பெருந்தகையரும் உண்மையிலேயே வாழ்ந்தவர்கள். விதவைத் திருமணத்தில் ஆர்வம் கொண்டதோடு, ஜி.சுப்பிரமணிய ஐயர் தன் விதவை மகளுக்கு மறுமணம் செய்வித்து புரட்சி செய்தவர். இறுதியில் துறவறம் பூண்டிருந்த ஒருவர், இவளை மணம் புரிந்து கொள்ளுகிறார், அந்த இணை ஆனந்தமாக வாழ்கிறது. அந்த நல்லோவியம் ஒரு அற்புதமான வண்ணக்கோவை.
பணி தீராத மனை
சின்னச்சங்கரன் கதையும் அப்படியே! அது ஓர் அற்புதமான நகைச்சுவைக் களஞ்சியம். இது சுப்பிரமணிய சிவா நடத்தி வந்த 'ஞானபானு'வில் வெளிவந்தது. இந்த நூலும் ஏதோ வெடிகுண்டு செய்யும் இரகசியமோ எனக்கருதிப் போலீசார் அதைப் பறித்துக் கொண்டு சென்றனர். அந்த நாளையத் தனவந்தர்களின் வாழ்க்கையைக் கவிஞர் வர்ணிக்கும் முறையைப் படிக்கும் போது சிரித்துச் சிரித்து விலா நோவெடுக்கும்.
".... சேவல் சண்டை பார்த்த பிறகு பகல் ஒன்றரை மணிக்குக் குளிக்கப் போகிறார் ராமசாமிக் கவுண்டர். 'வென்னீரிலேதான் ஸ்நானம் செய்வார் ராமசாமிக் கவுண்டர். ஸ்நானம் செய்வதென்றால் அது சாதாரண காரியமன்று, ஜலத்தை எடுத்து ஊற்றுவதற்கு இரண்டு பேர், தலைதுவட்ட ஒருவன், உடம்பு துடைக்க ஒருவன், நேபாளத்து ராஜாவின் பிரேதத்துக்குக்கூட இந்த உபசாரம் நடக்காது."
மருத்துவச் சாத்திரத்தைப் பற்றிய சில உண்மைகள் பாரதியாரிடமிருந்து வெளிப்படும் போது நமக்குப் பெருவியப்பு உண்டாகிறது. ஜெர்மானிய மாமேதை ஹானிமான் 'பயம்'தான் பல நோய்களுக்கு மூலகாரணம் என்று எழுதுகிறான், கெண்ட் என்பவர் மிகச் சிறந்த மருத்துவர், வெளித் தாக்குதல்களினால் ஏற்படும் நோய்களைத் தவிர மற்றெல்லா வியாதிகளும் உள்ளத்திலெழும் மாறுதல்களின் புறத் தோற்றம் என்று ஆதாரப் பூர்வமாகக் கூறுகிறார். இதோ பாரதி:- "உள்ளத்தில் தோன்றும் அச்சம் முதலியனவே நோய்களைப் பிறப்பிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அங்ஙனம் பிறக்கும் நோய்களை நன்கு போஷனை செய்து வளர்ப்பதும், அதனின்றும் மரணத்தின் வரவை மிகவும் எளிதாக்கித் தருவதுமான தொழில்கள், பெரும்பாலும் வைத்தியர்களாலேயே செய்யப்படுகின்றன". இதை இன்றைய மருத்துவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். பெரும்பாலான நோய்கள் 'ஐயோட்றாஜெனிக்' (IOTRAGENIC) -- வைத்தியர்களால் விளைவிக்கப்பட்டது என்று அவர்களே வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.
குள்ளச்சாமி
மகாகவி பாரதி 'சும்மா' என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருக்கிறார். அதற்கு இரண்டு அத்தியாயங்கள். கதையிலே மூன்றே பாத்திரங்கள். கவிஞர், வேணு முதலி, குள்ளச்சாமி. இந்தச் சாமியார் மூலமாகத் தத்துவக் கருத்துக்களைப் புது வெள்ளம்போல் பொழிகிறார் கவிஞர். அங்கு துள்ளும் திரைகளும், நுரைகளும், சுழிப்புகளும், வண்ண மீன்களும் - அதன் அழகை எழுத்தில் வடித்துவிட இயலாது.
இந்தக் குள்ளச்சாமி உண்மையிலேயே ஒரு ஜீவன் முக்தர். இது உண்மை என்று மகான் அரவிந்தரும் உறுதிப் படுத்துகிறார். அவருடைய தலை சிறிதாக இருக்கும். அதனால் மாங்கொட்டை சாமி என்று பாரதி அவரை விளிப்பார். அந்தச் சாமியாரிடம் அவருக்கு அளவற்ற ஈடுபாடு. அவருக்கு என்ன வயது என்று யாரும் கூறமுடியாது. மூன்று தலைமுறையினர் அவரைத் தரிசித்திருக்கிறார்கள். எல்லோர் முன்பும் ஒரே உருவம், தோற்றம். "காயகற்பம் செய்து விட்டான்; அவன் வாழ்நாளைக் கணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை" என்பது கவிஞர் வாக்கு.
இந்தச் சாமிக்கும் பாரதியிடம் மிகுந்த ஈர்ப்பு. அவரைத் தேடிச்சென்று உரையாடுவார், பாடச் சொல்லிக் கேட்பார். வாடாமல்லிகை என்று கவிஞரைப் பாராட்டுவார். பாரதி இந்தச் சித்தரைப் பற்றிக் கூறியதில் பொய்யே இல்லை என்று அவருடன் பழகிய குஞ்சிதபாதம் என்பவர் எழுதுகிறார். இவர் புதுவைக் கல்லூரி பேராசிரியர், சுவாமிநாத தீட்சிதரின் மகன்.
"பாசத்தை அறுத்து விட்டான், பயத்தைச் சுட்டான்
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்
நாசத்தை அழித்து விட்டான்; யமனைக் கொன்றான்
ஞானகங்கை தனை முடி மீதேந்தி நின்றான்"
என்று கவிஞர் இந்தச் சித்தரைப் புகழ்கிறார். அவரிடமிருந்து இத்தகைய பாராட்டைப் பெறுவது எளிதல்ல என்பதை எல்லோரும் அறிவர். "சும்மாயிரு" என்ற மந்திரத்தைச் சைகை மூலமாகத் தாயுமானவருக்குக் கொடுத்தவர் மெளன குரு தேசிகர். இந்த ஒரே சொல் தாயுமானவரைப் படாத பாடுபடுத்தியிருக்கிறது.
அரிய வெண்பா
பாரதியின் குள்ளச்சாமி தாயுமானவரின் அபூர்வமான வெண்பா ஒன்றைக் கூறுகிறது. தாயுமானவர் வெண்பா பாடியிருக்கிற விவரமே அபூர்வம்.
"சும்மா இருக்கச் சுகம் உதயமாகுமே
இம்மாய யோகம் இனி ஏனடா - தம்மறிவின்
சுட்டாலே ஆகுமோ சொல்ல வேண்டாம் கர்ம
நிஷ்டா சிறு பிள்ளாய் நீ!"
வேணுமுதலி அறிவு வாதி. அவர் குள்ளச்சாமியைச் சீண்டுகிறார். குள்ளச்சாமியின் வாய்மூலம் சீறுகிறார் பாரதி. 'அநாவசியக் கேள்விகள் கேட்காதே. நான் சொல்லுவதைக் கவனி. ஹிந்து தேசத்தினுடைய ஜீவனை, யுக யுகாந்தரங்களாய் அழியாதபடி பாதுகாத்து வருவோர் இந்த யோகிகளே; சாமி சிரிக்கிறது. ஹா, ஹா, ஹா 'பலவிதமான லேகியங்களைத் தின்று தலைக்கு நூறு, நூற்றைம்பது பெண்டாட்டிகளை வைத்துக்கொண்டு தடுமாறி, நாள் தவறாமல் ஒருவருக்கொருவர் நாய்களைப்போல் அடித்துக் கொண்டு, இமயமலைக்கு வடபுறத்திலிருந்து அன்னியர் வந்த உடனே, எல்லோரும் ஈரச்சுவர் போல இடிந்து விழுந்து ராஜ்யத்தை (ஈரச்சுவர் உதாரணத்தைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தவரே பாரதி) அன்னியர் வசமாகத் தந்த உங்கள் ராஜாக்களுடைய வலிமையினால் பிழைத்திருக்கிறது என்றா நினைக்கிறாய்? போது (பொழுது) விடிந்தால் எவன் செத்துப்போவான், ஸபண்டீகரணம் (இறந்தவர்களுக்குச் செய்யப்படும் 12-ம் நாள் காரியம்) பிராமணார்த்த போஜனங்கள் (ஆண்டுதோறும் இறந்தவர்களுக்குச் செய்யும் சிரார்த்தத்தின் போது உணவு அளித்தல்) என்று சுற்றிக் கொண்டு வேத மந்திரங்களைப் பொருள் தெரியாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த உங்கள் பிராமணர்களால் இந்தத் தேசம் சாகாவரம் பெற்று வாழ்கிறதென்று நினைக்கிறாயா? அடா! வேணுமுதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்தத் தேசம் இன்றும் பிழைத்திருக்கிறது! இனி இந்த மண்ணுலகம் பிழைத்திருக்கவும் செய்யும்!
இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காகவே இப்படி 'சும்மா' என்ற கதையை எழுதியிருக்கிறார் பாரதி.
வினாக்கள்.
1. அகில இந்திய வானொலி 1946ல் நடத்திய 'கவியரங்க' நிகழ்ச்சி பற்றி கூறுக.
2. தன்னைத் தொடர்ந்து வந்த நாய்க்கும் சொர்க்கத்தில் இடங்கேட்ட தருமனின் கதையின்
கரு என்ன?
3. 'ஞானரதம்' கதையில் மண்ணுலகம் பற்றி பாரதி கூறும் செய்திகள் எவை?
4. 'பிராயச்சித்தம்' கதை ஓர் நையாண்டி இலக்கியம் - விளக்குக.
5. 'சந்திரிகையின் கதை' வலியுறுத்தும் சமுதாயக் கருத்து என்ன?
6. பாரதியாரின் கதைகள் பற்றிய உங்களது கருத்தை கட்டுரையாக வரைக.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
You can send your comments