Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Friday, August 26, 2011

மகாகவியின் 90ஆவது நினைவு நாள்

                                                                            பாரதி
பாரதி விழா

அருமை பாரதி அன்பர்களே!

வருகிற 11-9-2011 ஞாயிறன்று மகாகவியின் 90ஆவது நினைவு நாள். அன்று திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் நமது பாரதி இயக்கத்தின் சார்பில் ஓர் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. அதில் பாரதி அன்பர்கள், கல்லூரி மாணவர்கள் தங்கள் கருத்துரைகளை வழங்கவிருக்கிறார்கள். திருவையாறு இசைக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் பாரதி பாடலிசை வழங்குகிறார்கள்.  1956இல் சென்னை பாரதி சங்கத்தில் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆற்றிய தலைமை உரையினை இங்கு படிக்கத் தருகின்றோம். எந்தக் காலத்துக்கும் ஏற்ற உரை அது. படியுங்கள். நன்றி.

இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம் - திருவையாறு பாரதி இயக்கம்.
=============

(1956 செப்டம்பர் 11 சென்னை பாரதி சங்கத்தின் சார்பில் சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் நடைபெற்ற பாரதியார் விழாவில் தமிழ்நாடு அரசவைக் கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆற்றிய தலைமை உரை - நன்றி "பாரதி சங்கம்", சென்னை)

 நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை

அன்பர்களே!

வணக்கம். அமரனாகி விட்டதால் கண்ணுக்குத் தோன்றாவிட்டாலும் நம்முடைய கருத்தில் நின்று காட்சியளிக்கும் தேசிய மகாகவி சுப்ரமணிய பாரதிக்கு நாமனைவரும் முதலில் அஞ்சலி செய்வோம். பாரதியை நாம் மறந்து விடாமல், அவர் பாடித் தந்த அறவொழுக்கங்களை வாழ்க்கையில் மேற்கொள்ள நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கவே இந்த பாரதி சங்கத்தை ஏற்படுத்தித் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் அரும்பெரும் சேவைகள் செய்து அமரராகிவிட்ட 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம்.

இனி, பாரதிப் புலவனை நினைவிற் கொள்ளுவோம். பாரதி எதற்காகத் தோன்றினார்? என்ன செய்தார்? அவர் பாடித்தந்த பாட்டுகளின் குறிக்கோள் என்ன? இப்போதுள்ள சூழ்நிலையில் அவருடைய பாடல்கள் நமக்கு எவ்வளவு பயனளிக்கக் கூடியவை என்பனவற்றைச் சிறிது சிந்தனை செய்வோம்.

அடிமைத் தனத்தால் நமக்குள் வளர்ந்திருந்த அன்னிய மோகங்களால் மங்கிக் கிடந்த தமிழ் மொழிக்கு மறுமலர்ச்சி தந்தவன் பாரதிப் புலவன். தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ்ப் பண்புகளின் நன்மைகளையும் முற்றிலும் மறந்து கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பிப் புத்துயிர் கொடுத்துப் பழந்தமிழில் நிறைந்து கிடக்கும் நல்லறிவுகளுக்குப் புது மெருகு கொடுத்தவன் பாரதிப் புலவன். தெய்வ நம்பிக்கைக்கும் தினசரி வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லாதது போல் பேசப்பட்டு வந்த திண்ணை வேதாந்தத்தைத் திணறச் செய்தவன் பாரதிப் புலவன். தெய்வத்தைக் காணவேண்டுமானால் இல்வாழ்க்கையை வெறுக்க வேண்டும் என்றும், மனைவியையும், மக்களையும் மறக்க வேண்டும் என்றும், சுக போகங்களைத் துறக்க வேண்டும் என்றும் பொது அறிவாகப் போதிப்பது தமிழறிவுக்குப் பொருந்தாது என்பதைச் சொல்லிலும் பாட்டிலும் வாழ்க்கையிலும் வற்புறுத்திக் காட்டியவன் பாரதிப் புலவன்.

ஆங்கில ஆட்சியின் அடக்கு முறையின் காரணமாக மிகத் தீவிரமுள்ள தேசபக்தரான பாரதி, நிச்சயமான வருவாய்க்கு வழியில்லாமல் புதுச்சேரியில் புகுந்திருக்க நேர்ந்தது. அங்கே வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் இல்லாமல் பல நாள் பட்டினி கிடக்கவும் நேரிட்டது. அப்படியிருந்தும் அவர் எழுதியதும் பாடியதும் என்ன? வாழ்க்கையை வெறுத்தாரா? மனைவி மக்களைத் துறந்தாரா? உலகத்தை நிந்தித்தாரா? இல்லை. தனக்கும் தன்னைப் போலவே எல்லா மனிதர்களுக்கும் நல்ல உணவு, நல்ல உடை, நல்ல இருப்பிடம் முதலியன கிடைக்க வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிப் பாடினார். எல்லா மக்களும் இல்லறத்தைச் சரியாக நடத்தி உலக இன்பங்களையெல்லாம் நல்ல முறையில் அனுபவிக்க வேண்டும் என்றும் அப்படி அனுபவிக்கும் போதே, அதற்கென்று வேறு முயற்சியில்லாமல் எல்லாச் செயல்களிலும், எல்லாப் பொருள்களிலும் ஈசனை உணர வேண்டும் என்றே பாடினார். மொத்தத்தில் தமிழ் நாட்டின் தேசியப் பரம்பரையான நல்ல பண்புகளுக்கெல்லாம் புதுவாழ்வு காட்டியவன் பாரதி புலவன்.

மேலே சொன்ன குறிப்புகளின் உண்மையை பாரதியின் பாடல்களில் பார்ப்போம்.

தமிழ்மொழி

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்" - என்கிறார்.

"தெள்ளுற்றத் தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்பு கண்டார்" - என்கிறார்.

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா" - என்கிறார்.

தமிழ் மொழியைப் போன்ற இனிய மொழி உலகத்தில் எங்குமில்லை என்று சொல்லுகிறாரே! தெளிவான அறிவு தரும் தமிழ் மொழி என்ற அமிர்தத்தின் சாரத்தைக் கண்டவர்கள் இந்த உலகத்திலேயே தேவலோகத்தின் சிறப்புகளை அடைந்தவர்களாவார்கள் என்கிறாரே! மொழிகளிலெல்லாம் உயர்ந்த மொழி தமிழ் மொழிதான், அதைத் தொழுது படிக்க வேண்டும் என்று சொல்லுகிறாரே! தமிழ் தம்முடைய தாய் மொழி என்பதற்காக மொழி வெறியினால் இப்படிச் சொல்லுகிறாரா?

பாரதியார் தமிழை மட்டும் படித்தறிந்த தனித்தமிழ்ப் பண்டிதரல்லர். வடமொழியிலும் ஆழ்ந்த படிப்புள்ளவர். அதற்கென்றே காசிக்குச் சென்று வடமொழிக் கலாசாலையில் சேர்ந்து முறைப்படி வடமொழியைக் கற்றுணர்ந்தார். அத்துடன் ஆங்கில மொழியிலும் நல்ல பயிற்சியுடையவர். மேலும் ப்ரெஞ்சு, இந்தி, வங்காளி முதலிய பிற மொழிகளையும் விரும்பிக் கற்றவர். மற்ற மொழிகளில் எவ்வளவு தேர்ச்சியுடையவர் என்பதைச் சொல்ல முடியாதென்றாலும் வடமொழியிலும், ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சியுள்ளவர். ஆங்கிலத்தையும் விலக்கி விட்டாலும் வடமொழியில் ஆழ்ந்த கல்வியுள்ளவர் என்பதில் ஐயமில்லை. வடமொழி மிகச் சிறந்த இலக்கியங்கள் உள்ளது. உலகத்துக்கெல்லாம் மெய்ஞ்ஞான ஒளி கொடுப்பது வடமொழி. அதைப் பாரதியார் அறியாதவர் அல்லர். அப்படியிருக்க, அந்த வடமொழியையும் சேர்த்து "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று அவ்வளவு அழுத்தமாகச் சொல்லுகிறாரே! ஏன்? வடமொழியைக் குறைத்துப் பேசவா? அல்லவே அல்ல. பின் ஏன்? வடமொழியிலுள்ள வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை முதலிய தலைசிறந்த இலக்கியங்களிலுள்ள எல்லா நல்லறிவுகளும் பாரதி தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்னாலேயே தமிழில் வடித்துக் கொடுக்கப்பட்டு விட்டன. வடமொழியிலுள்ள எல்லா இலக்கியங்களும் மொழிபெயர்ப்பாகவோ, வழி நூலாகவோ, சார்பு நூலாகவோ ஏற்கனவே தமிழில் இருந்ததோடு தமிழில் முதனூல்களாகிய ஐம்பெருங் காப்பியங்களும், சங்க நூல்களும், திருக்குறளும், கம்பன் இயற்றிய அற்புதக் காவியமும் இருப்பதைக் கண்டார் பாரதி. கம்பனுடைய இராமாயணமும், திருவள்ளுவருடைய திருக்குறளும் வடமொழி இலக்கியங்களிலுள்ள அறிவைத் தெள்ளி எடுத்துச் சேர்க்கப்பட்ட இலக்கியங்கள். அதனால்தான் பாரதி வடமொழியையும் உள்ளடக்கித் "தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்றார்.

இந்தக் கருத்தை வலியுறுத்த "யாமறிந்த புலவரிலே, கம்பனைப் போல், வள்ளூவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை" என்கிறார்.

கம்பருடைய காவியம் இராம கதையைச் சொல்லுவதுதான் என்றாலும் வடமொழியிலுள்ள மெய்ஞ்ஞான தத்துவங்களை மிகவும் தெளிவான முறையில் விளக்கி நிற்கும் அறிவுக் களஞ்சியம். திருக்குறலோ உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்கும் எக்காலத்துக்கும் உதவக்கூடிய ஒப்பரிய அறநூல். அதுவும் வடமொழியிலிருந்து தெள்ளி எடுக்கப்பட்ட அறிவுகள் அடங்கியது. சிலப்பதிகாரமும் வடமொழிக் காவியங்களை அங்கங்கே சுட்டிக்காட்டி மிகச் சிறந்த நீதிகளைப் புகட்டி நிற்பது. அதனால்தான் பாரதியார் "உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்றும், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றும், "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு" என்றும் பாடினார். தெள்ளிய நல்லறிவுகளைப் புகட்டி நிற்கும் இந்தத் தமிழ் நூல்களைப் படித்து அவற்றிலுள்ள சாரத்தை உணர்ந்தால் போதும் என்ற கருத்தில்தான்

"தெள்ளுற்றத் தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்பு கண்டார்" என்று பாடினார்.

ஆனால் இப்படித் தமிழ் அமுதின் சுவை கண்டால் மட்டும் போதுமா? தமிழ் இலக்கியங்களில் விஞ்ஞான அறிவுகளைத் தரக்கூடிய நூல்கள் இல்லையே. வாழ்க்கைக்கு வசதிகள் உண்டாக்கி இன்பமூட்டக் கூடிய எந்திர தந்திரங்களை இயற்றக்கூடிய அறிவு சொல்லும் நூல்கள் இல்லையே என்ற கேள்விகள் பிறக்கலாம். அவை மிகவும் நியாயமான கேள்விகளே. ஆனால் எந்திர தந்திரங்களெல்லாம் உண்டாக்கக் கூடிய விஞ்ஞானம் உடலுக்கு மட்டும் இன்பந்தரக்கூடிய கருவிகளைக்தான் தரமுடியுமே யல்லாமல் அறிவுக்கு அமைதி தரக்கூடிய கருத்துக்களைக் கொடுக்க முடியாது. மெய்ஞான உணர்ச்சிதான் மக்களுக்குள் அன்பைப் பெருக்கிச் சமரசத்தை நினைப்பூட்டும். அதுதான் சமுதாயத்தில் சமாதானம் நிலவச் செய்து, சந்தோஷம் தரக்கூடியது. விஞ்ஞானம் இல்லாமல் மனித சமுதாயம் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் வாழமுடியும். ஆனால் மெய்ஞான உணர்ச்சி இல்லாமல் சமுதாயத்தில் சமாதானமும் இருக்க முடியாது; சந்தோஷமும் இருக்க முடியாது. அதனால்தான் பாரதியார் தமிழிலக்கியங்கலில் பொதிந்துள்ள மெய்ஞ்ஞான அறிவுக்கு முதலிடம் கொடுத்தார். அதைத்தான் "தெள்ளுற்ற தமிழ் அமுது? என்றார்.
                                       One of the Founders of Bharathi Sangam T.K.Shanmugham

ஆனாலும் பாரதியார் விஞ்ஞான அறிவைப் புறக்கணித்து விடவில்லை. தமிழ் மொழியில் விஞ்ஞான நூல்கள் அனைத்தும் இருக்க வேண்டுமென்று ஆர்வம் கொள்ளத் தூண்டுகின்றார். அதைப் பார்ப்போம்!

தமிழ்த்தாய் தன்னுடைய மக்களைப் பார்த்துச் சொல்லுகின்றாள்: "மக்களே! என்னை ஆதி சிவன் பெற்றெடுத்தான். அகத்தியன் என்ற வேதியன் எனக்கு இலக்கணம் கற்பித்தான். சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தரும் என்னை மிகவும் அன்போடு வளர்த்தார்கள். மிகச் சிறந்த மொழியாகிய வடமொழிக்குச் சமானமாக வாழ்ந்தேன். தேனைப் போன்ற இனிமையும், தீயைப் போன்ற தூய்மையும், காற்றைப் போன்ற வேகமும், வான வெளியைப் போன்ற விரிந்த நோக்கமும் உள்ள காவியங்களைத் தெள்ளிய அறிவுடைய பல புலவர்கள் செய்து கொடுத்தார்கள். பல சாத்திரங்களையும் செய்தார்கள். அதனால் உலகமெல்லாம் என்னைப் புகழும்படியாக வாழ்ந்தேன். என்னுடைய இளம் பருவத்தில் என் காதில் விழுந்த எத்தனையோ மொழிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. ஆண்டவன் அருளினாலும், மிகச் சிறந்த காவியங்களையும் சாத்திரங்களையும் இயற்றிய அந்தப் புலவர்களின் தவ வலிமையினாலும் நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் குறைவின்று வாழ்ந்து வருகிறேன். ஆனால் ....

"இன்று ஒரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள்!
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை;
மெல்லத் தமிழ் இனிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்.

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்தவசை எனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும் பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

இதனால், மெய்ஞ்ஞான அறிவையே முதன்மையாகக் கொண்டு, விஞ்ஞான வசதிகளையும் சேர்த்துக் கொண்டு, நல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது பாரதி நமக்குத் தரும் படிப்பினை.

தமிழர் வாழ்க்கை

'எத்திசையில் எம்மொழியில் எவர்வாய்ச் சொல்லில்
எப்படியாய் வரும் கதைகள் எதுவானாலும்
சத்தியத்தின் வழி காட்டும் அறிவையெல்லாம்
தனதாக்கிக் கலை வளர்த்த தமிழன்'

என்றபடி, வடமொழியிலுள்ள நல்லறிவுகளை யெல்லாம் தமிழர்கள் தம்முடைய இலக்கியங்களில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், வாழ்க்கையின், சோக்கத்தில் வடமொழி வசக்குக்கும் தமிழ் வழக்குக்கும் சில வேற்றுமைகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது வீடு பெறும் நம்பிக்கைக்கான மார்க்கம். வடமொழி வழக்குப் பிரகாரம் கடவுளை உணர்வதற்கு ஒவ்வொரு மனிதனும் மனைவி மக்களைத் துறந்து, வீட்டை விட்டுக் காட்டுக்குச் சென்று தவம் புரியத்தான் வேண்டும் என்பது. ஆனால் முக்தி பெறுவதற்கு மனைவி மக்களைத் துறந்து வனத்துக்குப் போக வேண்டியதில்லை; இல்லறத்திலேயே வீடு பெறலாம் என்பது தமிழ் வழக்கு.

இது மட்டுமன்றி துறவறத்தைக் காட்டிலும் இல்லறந்தான் சிறப்பும் பொறுப்பும் உள்ளது; அதனால் மக்கள் மேற்கொள்ள வேண்டியது இல்லறம்தான் என்பது தமிழ் மரபு. தமிழர்கள் துறவறத்தை அவமதிப்பவர்களல்லர். துறவிகளைத் தமிழர்கள் வணங்கிப் போற்றியே வந்திருக்கிறார்கல். ஆனாலும் இல்லறம்தான் மனிதருக்கு இயல்பானதும் சிறப்புடையதும் என்பதே தமிழரின் கொள்கை. இதைத் திருக்குறல் உறுதிப் படுத்துகிறது. அறம், பொருள், இன்பம், வீடு (தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்) என்ற நான்கு உறுதிப் பொருள்களில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை மட்டும் விரித்துச் சொல்லி "வீடு" என்பதைத் திருவள்ளுவர் சொல்லாமல் விட்டுவிட்டதற்கு முக்கிய காரணம் இதுதான் என்று ஊகிக்கவும் இடமிருக்கிறது.

"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று."

என்கிறார் திருவள்ளுவர். இதன் பொருள், "மனிதருக்கு தர்மம் என்று சொல்லப்பட்டதே இல்லற தர்மம்தான். ஆனாலும் இல்லறத்தானுக்குப் பிறன் ஆகிய துறவறத்தானை இகழாமல் இருப்பது நல்லது" என்பது.

"ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து."

என்கிறார். இதன் பொருள், "நடத்த வேண்டிய ஒழுங்குடன் நடத்தி, தருமங்களில் தவறாமல் செய்யப் படுகிற குடும்ப வாழ்க்கை, துறவறம் பூண்டு தவம் செய்கிறவர்களைக் காட்டிலும் பொறுப்பும், சகிப்புத் தன்மையும் உள்ளது" என்பது. மேலும்

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவது எவன்?"

என்கிறார். இதன் பொருள், "தர்ம மார்க்கத்தில் இல் வாழ்க்கையை நடத்தினால் துறவு பூண்டு வனத்துக்குச் சென்று அடையக் கூடியது என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை" என்பது. கடைசியாக

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"

என்கிறார். இதன் பொருள், "உலகத்தில் இல்லறம் நடத்தி வாழ வேண்டிய முறையில் வாழ்கின்றவன், அவன் வேறு முயற்சி ஒன்றும் செய்யாமலேயே வானத்திலுள்ள தெய்வத்தோடு இரண்டறக் கலந்துவிடும்படி சேர்த்து விடப்படுவான்" என்பது. அதாவது வீடு பெறுவான் என்பது கருத்து.

இந்தக் கருத்துகலைப் பின்பற்றியேதான் பாரதியார், உலகத்தைப் பொய் என்றும் மனைவி மக்களைத் துறந்தால்தான் தெய்வத்தை அணுகலாம் என்றும் சொல்லப்படுவதைக் கண்டித்து, அறம், பொருள், இன்பத்துடன் இல்லறம் நடத்த வேண்டியதே மக்களுடைய கடமை என்று உலகத்தில் காணப்படுகிற பொருள்களை நோக்கி அவர் பாடியுள்ள பாட்டிற்கு முன்னுரையாக வசன நடையில் மிகவும் தெளிவாகச் சொல்லுகிறார். அது என்னவென்றால்?

"இந்த உலகமே பொய்" என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. சந்நியாசிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும், அதைப் பற்றி இந்த நிமிஷம் எனக்குள் வருத்தமில்லை. குடும்பத்தில் இருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடு வீட்டில் உச்சரிக்கலாமா? அவச் சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்துவிட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலைபோல நிற்கிறாள் மனைவி. நமது துயரத்துக் கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தாள்; நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள்; அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவரிடம் கேட்கிறேன், குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?

வீடு கட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன்படாது. நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, சோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும். இவற்றைத் தரும்படி தம்தம் குலதெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லா தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காண வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால், நான்காம் நிலையாகிய வீடு (மோக்ஷம்) தானே கிடைக்கும்" -- இது பாரதியின் வாக்கு. இது மேலே சொல்லப்பட்ட குறள்களிலுள்ள கருத்தை முற்றிலும் ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் மக்கள் மறந்து விட்டிருந்த பரம்பரைப் பண்புகளை நினைப்பூட்டி நம்மைத் தட்டி எழுப்பினவர் பாரதி என்று ஆரம்பத்தில் சொன்னது இதனால்தான்.

இப்படித் தமிழ் மொழிக்கும் தமிழ்ப் பண்புகளுக்கும் உள்ள தனிச் சிறப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு பாடியிருக்கிறார் என்றாலும் வடமொழியையும் அது தந்த மெய்ஞ்ஞானத்தையும் தமிழருக்கும் சொந்தமானவைகளாகவே சொல்லுகின்றார். இந்திய நாடு முழுவதும் ஒரே கலாசாரமுள்ள ஒரு குடும்பம் என்றே போற்றுகின்றார். தமிழ் நாட்டையும், தமிழையும் தனிப்படப் போற்றும் போதும், இந்தியா முழுவதும் ஒன்று என்பதை அவர் மறந்து விடுவதில்லை. இதை அவருடைய பாடல்களில் பட இடங்கலில் பார்க்கலாம். உதாரணம் காட்ட "பாப்பா பாட்டு" ஒன்று போதும்.

"தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தின் இனியதடி பாப்பா - நம்
ஆன்றொர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
வேதம் உடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா"

இதில் "வேதம் உடையது இந்த நாடு" என்பதால் வடமொழி மெய்ஞ்ஞானம் நம்முடையது என்கிறார். இமயம் முதல் குமரி முனை வரைக்கும் உள்ளது நம்முடைய நாடு என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாகத் "தமிழ் திருநாட்டைப் பெற்ற தாய் என்று கும்பிடச்" சொன்ன பாரதி, "ஹிந்துஸ்தானத்தை தெய்வமென்று" கும்பிடச் சொல்கிறார். இந்த உபமானங்களின் சிறப்பை ஊன்றிப் பார்த்து உட்மொருளை உணர வேண்டும். இன வெறியாலும் மொழி வெறியாலும் இந்திய மக்களின் ஒற்றுமை சீரழிக்கப்பட்டு வரும் இந்தச் சமயத்தில் இது மிகவும் சிந்திக்கத் தக்கது. பாரதியின் இந்தப் பாடல்களுக்கு மதிப்புக் கொடுத்ததே போல், இந்த மாகாணப் பிரிவினையில் தமிழ் மக்களுக்குக் குறை இருந்தும், அவர்கள் இன வெறியோ மொழி வெறியோ இல்லாமலிருப்பது மிகவும் பெருமைக்குரியது.
                                            Founder of Chennai Bharathi Sangam Kalki Krishnamurthy

   மாபெரும் கவிஞன்

பாரதியை 'தேசியக் கவிஞர்' என்றும் அவர் பாடிய கவிகளைத் 'தேசிய கீதம்' என்றும் சொல்லுவது வழக்கம். அப்படிச் சொல்லுகிறவர்கள் பெரும்பாலோரும், அவர் இந்திய நாடு அன்னிய நாட்டிற்கு அடிமைப் பட்டிருப்பதினின்றும் விடுதலை யடைய வேண்டும் என்பதற்காகப் பாடிய தேச பக்திப் பாட்டுகளை மனதிற் கொண்டுதான் சொல்லுகிறார்கள். ஆம்! அவர் அதி தீவிரமுள்ள தேச பக்தர்தாம். அடிமை வாழ்வு நீங்கி சுதந்திரம் அடைய 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்று ஆவேசத்துடன் பல தேசபக்திப் பாடல்களை இயற்றி அவற்றைத் தெருத் தெருவாகத் தாமே பாடிப் பஜனை செய்தவர்தாம். அவர் பாடல்களைக் கேட்டு விடுதலை வேட்கை கொண்ட தமிழர்கள் எண்ணிறந்தவர்கள். தமிழ்நாடு அவரை ஒரு மிகச் சிறந்த கவிஞர் என்று மதிக்கச் செய்தது அந்த தேசபக்திப் பாடல்கள் தாம். அந்தக் காலத்தில் அமிதவாதி என்று அழைக்கப்பட்ட பாலகங்காதர திலகர் பெருமானுடைய கட்சியைச் சேர்ந்து, கனல் பறக்கும் தேச பக்திப் பாட்டுகளைப் பாடித் தமிழ் நாட்டுத் தேச பக்தர்களுக்கு இணையற்ற வீரராக பாரதி விளங்கினார் என்பதும் உண்மைதான். அவருடைய தேச பக்திப் பாடல்களால் தூண்டப் பெற்று விடுதலைக்குத் துடிதுடித்த இளைஞர்கள் ஏராளம். இளைஞர்கள் மட்டுந்தானா?

"படித்தறியா ஏழைக் கிழவனேனும்
பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பானாகில்
துடித் தெழுந்து ஹன் மெலிந்த தோளைக் கொட்டித்
தொளைமிகுந்த கந்தல் உடை சுருக்கிக் கட்டி
எடுத்தெறிய வேண்டும் இந்த அடிமை வாழ்வை
இப்பொழுதே இக்கணமே என்றென்று ஆர்த்து
அடித்துரைத்து ஆவேசம் கொள்வான் என்றால்
அப்பாட்டின் மகிமை சொல்ல யாரே வல்லார்?"

என்றபடி, படிப்பில்லாத பாமரக் கிழவர்களையும் அவருடைய பாட்டுக்கள் தேசபக்தி ஆவேசம் கொள்ளச் செய்தன என்பது மிகையல்ல. பாரதியின் பாடல்களில் திளைத்துத் தேச பக்தியில் தீவிரம் அடைந்திருந்ததால் தான் காந்தியடிகளுடைய போராட்டத்தில் கணக்கற்ற தமிழ் மக்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் உண்மையே.

ஆனாலும் பாரதி வெறும் தேச்பக்திப் பாட்டுகளைப் பாடிவிட்ட புலவர் அல்லர். அவர் தேசபக்திப் பாடல்களைப் பாடி சுதந்திர ஆர்வத்தைத் தூண்டிவிட நேரிட்டதும் வெறும் சந்தர்ப்பச் சூழ்நிலையே. அவர் பாடிய தேசபக்திப் பாடல்கள் மற்றப் பாடல்களைவிட எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவைதாம். அவற்றிலும் வெறும் அரசியல் சுதந்திரத்தை மட்டும் குறிக்கின்ற பாட்டுகள் வெகு சிலவே. அந்தச் சிலவும் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டும் உதவக் கூடியனவேயன்றி எக்காலத்துக்கும் எல்லாருக்கும் உதவக் கூடியவையல்ல.

பாரதி வெறும் தேசபக்திப் பாடல்களைப் பாடவந்த புலவனல்ல. அவர் மனித சமுதாயத்துக்கு எப்போதும் உதவக் கூடிய நித்தியமான சத்திய ஞானத்தையும் அதைச் சேர்ந்த அறவொழுக்கங்களையும் பாடிய மகா கவிஞர். அவருடைய பாடல்களில் பெரும் பகுதியும் மெய்ஞான போதனை. அவர் கவிதை சான்றோர் கவிதை. சான்றோர் கவிதை என்றால் என்ன? அதற்குக் கல்வியிற் சிறந்த கம்பர் சொல்லும் இலக்கணம் என்னவென்றால்....

'புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி
அவிசுகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி
சவியுறத் தெளிந்து தண் என்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி' எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.

பாரதியின் கவி வெறும் தேசபக்திப் பாடல் அல்ல. அது புவியினுக்கு அணியாய் விளங்கி மக்களுக்கு மெய்யறிவை நினைப்பூட்டிக் கொண்டிருக்கும் சான்றோர் கவி.

பயன்

பாரதியின் பாடல்களைப் படிப்பதனாலும் பாரதி விழாக் கொண்டாடுவதாலும் நாம் அடையக் கூடிய பயன் என்ன? பாரதியை வீரத்தைப் புகட்டிய புலவன் என்றும், போர்முரசு கொட்டிய புலவன் என்றும், அவரை பலாத்கார எண்ணங்களோடு சம்பந்தப்படுத்திப் பேசுகின்றவர்கள் உண்டு. அது முற்றிலும் தவறு. அப்படிப் பேசுவது எதைப் போலவென்றால் கிருஷ்ண பகவான் போதித்த பகவத் கீதை, கொலை செய்யத் தூண்டும் இலக்கியம் என்று சொல்வதை ஒக்கும்.

பாரதி வீரத்தைப் புகழ்ந்தார்; வெற்றியை விரும்பினார்; ஜெயபேரிகை கொட்டினார்; அச்சத்தை ஓட்டினார்; ஆண்மையை ஊட்டினார்; உண்மைதான். அதனாலென்ன? அவர் பலாத்காரத்தைச் செய்யும்படி எங்கே பாடியிருக்கிறார்? கொன்று விடுவேன் என்று சொன்னவனுக்கும் தானும் அப்படிக் கொல்ல முடியும் என்று கூடப் பதில் சொல்லவில்லையே! இதற்கு உதாரணம், ஆங்கிலேயன் ஒரு தேசபக்தனைப் பயமுறுத்துவதாக அவர் பாடிய பாடல்களில் கடைசி பாட்டாக


'சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன் - குத்திக் - கொல்லுவேன்
தட்டிப் பேசுவோர் உண்டோ? சிறைக்குள்ளே
தள்ளுவேன் - பழி - கொள்ளுவேன்'

என்பதாகப் பாடினார். இந்தப் பயமுறுத்தலுக்குப் பதிலாக தேசபக்தன் சொன்னதாக அவர் பாடியிருப்பதைப் பாருங்கள்.

'சதையைத் துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம்
சாயுமோ? ஜீவன் - ஓயுமோ?
இதையத் துள்ளே இலங்கும் மகாபக்தி
ஏகுமோ? - நெஞ்சம் - வேகுமோ?

என்பது. இது வெறும் தேசபக்திப் பாட்டாகவா இருக்கிறது? நீ என் தேகத்தை என்ன வேண்டுமானாலும் செய்துகொள். என் ஆன்மாவையும் பக்தியையும் உன்னால் அழித்துவிட முடியாது என்ற பகவத் கீதை அறிவல்லவா இது.

பாரதியின் கொள்கை என்ன? அவர் போதிப்பது என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அவருடைய கொள்கை அவர் பாடியுள்ள எல்லாப் பாட்டுகலிலும் ஒரு மணியாரத்தின் மத்தியில் ஓடும் நூல்வடம் போல் இருக்கிறது. சுருக்கமாவும், மிகத் தெளிவாகவும் அவருடைய கொள்கையை அறிந்து கொள்ள

'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேண்டும்
வயிரமுடைய நெஞ்சு வேண்டும் - இது
வாழும் முறைமையடி பாப்பா'

என்ற ஒரு பாட்டே போதும். ஜீவகாருண்யம், தெய்வ நம்பிக்கை, வைராக்கியம் என்ற மூன்றும் சேர்ந்த வாழ்க்கைதான் நல் வாழ்க்கை என்பது பாரதியின் கொள்கை. இந்த மூன்றுக்குள் மற்ற எல்லா அறங்களும் அடங்கும்.

இந்தக்கொள்கையில் திடமான நம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்திய பாரதி, தீவிரம் மிகுந்த தேச பக்தராகவும் இருந்தார். இந்தக் கொள்கைக்குப் பங்கமில்லாமல் தேசபக்தியைக் கொண்டு செலுத்தி, வெள்ளைக்காரன் ஆட்சியிலிருந்து எப்படி விடுதலை அடைவது? கொலை புரிவதோ கொள்கைக்கு விரோதம். கொள்கையையும் விட்டுவிட்டு ஆயுத பலத்தால் வெள்ளைக்காரனை வெளியேற்றலாம் என்பதற்கு, ஆங்கிலேயரை வெல்லக்கூடிய ஆயுத பலம் அடைவது அசாத்தியத்திலும் அசாத்தியம். வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தார் பாரதி.

அந்தச் சமயத்தில் மகாத்மா காந்தி தமது 'ஒத்துழையாமை திட்டத்தை' வெளிப்படுத்தினார். உடனே பளிச்சென்று வழி துலங்கிவிட்டது பாரதிக்கு. சென்னைக்கு வந்திருந்த மகாத்மாவைத் தரிசித்து, ஒத்துழையாமை திட்டத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளப் பாரதி மகாத்மாவுடன் அளவளாவினார். ஒத்துழையாமை திட்டத்தில் தமக்கிருந்த சந்தேகங்கள் தீர்ந்து தெளிவு கொண்டார்.

உடனே அந்தத் திட்டத்தை வரவேற்றுக் காந்தியடிகளின் மீது பஞ்சகம் பாடினார். இந்தப் பஞ்சகமே பாரதியார் நமக்குச் சொன்ன நல்லறிவு. அவர் நெடுங் காலமாகப் பாடிவந்த பாட்டுக்களின் சாரமெல்லாம் சேர்ந்தது இந்தப் பஞ்சகம். அவருடைய கொள்கைக்கு முத்தாய்ப்பு இந்தப் பஞ்சகம்.

'வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வற்மை மிஞ்சி விடுதலைத் தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க! வாழ்க!

அடிமை வாழ்வு அகன்று இந்நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம்
குடிமையில் உயர்வு, கல்வி, நானமும் கூடி ஓங்கிப்
படிமிசைத் தலைமை எய்தும்படிக் கொரு சூழ்ச்சி செய்தாய்;
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குளே முதன்மை யுற்றாய்!

கொடிய வெம் நாகபாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் காக்கும் குடைசெய்தான் என்கோ? என்சொலிப் புகழ்வது இங்கு உனையே?
விடிவிலாத் துன்பம் செயும் பராதீன வெம்பிணி அகற்றிடும் வண்ணம்
படிமிசை புதிதாச் சாலவும் எளிதாம்படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!

தன்னுயிர் போலத் தனக்கு அழிவெண்ணும் பிறனுயிர் தன்னையும் கணித்தல்;
மன்னுயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்றுணர்தல்;
இன்ன மெய்ஞானத் துணிவினை, மற்று ஆங்கு இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியல் அதனில் பிணைத்திடத் துணிந்தனை பெருமான்!

பெரும் கொலைவழியாம் போர்வழி இகழ்ந்தாய்; அதனினும் திறன் பெரிதுடைத்தாம்
அருங் கலைவாணர் மெய்த்தொண்டர் தங்கள் அறவழியொன்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் 'ஒத்துழையாமை' நெறியினால் இந்தியாவுக்கு
வரும்கதி கண்டு பகைத்திறம் மறந்து, வையகம் வாழ்க நல் அறத்தே!

கல்வியினாலும், கவிதையினாலும் நாம் அடைய வேண்டிய நல்லறிவுகள் பலவும் இந்தப் பாட்டுகளில் அடங்கியுள்ளன. கடைசிப் பாட்டு தீர்க்க தரிசனம் அமைந்தது. அதன் கருத்து: 'இது வரையிலும் எல்லா நாட்டவரும் தமக்குள் உண்டாகும் விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ள பெருங்கொலை வழியான ஆயுதப் போர்களைத்தான் அறிந்திருந்தார்கள். அந்த முறையை இகழ்ந்துவிட்டு, அதைக் காட்டினும் வலிமை மிகுந்ததும், தீமை இல்லாததுமான தர்ம மார்க்கத்தை நீதான் கண்டறிந்தாய். அதுதான் ஞானிகளும் உண்மையான தெய்வத் தொண்டர்களும் போற்றக் கூடிய மார்க்கம். அந்த மார்க்கம் நெருங்கிய பல நல்ல பயன்களைத் தரக்கூடியது. அந்த ஒத்துழையாமை மார்க்கத்தால் நிச்சயமாக இந்தியாவுக்கு வரப்போகிற சிறந்த நிலைமையினால் உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுவதை விட்டுவிட்டு, நேசமாக வாழ்வார்கள்' என்பது.

காந்திய வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததைக் கண்டு, மற்ற நாடுகளெல்லாம் காந்தியத்தைப் புகழ்ந்து இந்தியாவுக்குப் பெரும் மதிப்பளிக்கிறார்கள். அந்தக் காந்திய முறையில் ஜவஹர்லால் நேரு அவர்கள் கையாளும் அயல் நாட்டுக் கொள்கையினால் பல நாடுகளுக்குள் இந்த பகைமை குறைந்து வருவது கண்கூடு. அந்த நல்ல பலனைத்தான் தீர்க்கதரிசனம் போல பாரதி முன்னாலேயே பாடியிருக்கிறார்.

ஆதலால் பாரதியின் பாடல்களால் நாம் அடைய வேண்டிய பயன்கள் காந்தியத்தில் அடங்கியுள்ள தெய்வ நம்பிக்கையும், உயிர்களிடத்தில் அன்பும், சாந்தமும், சத்தியமும், அவற்றை வாழ்க்கையில் மேற்கொள்ள -- வயிரமுடைய நெஞ்சும் ஆகிய இவைகள் தாம். சுருங்கச் சொன்னால் காந்தியம்தான் மக்களுக்குச் சன்மார்க்கம் என்பதே பாரதி கடைசியாகப் பாடிச் சொன்ன படிப்பினையாகும். அதைப் பின்பற்றி வாழ்வோம்.

'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு!'



















1 comment:

  1. கவிஞர், நாமக்கல்லார் நற்கவிகள் தந்த அற்புத மனிதர், மஹாகவி பாரதியின் நினைவு நாளில் அன்று அவராற்றிய அவர்தம் பேச்சு, கட்டுரைக்கு முன்னுரையில் தாங்கள் கூறி இருந்தது போல் எந்நாளும் பொருந்தும் கருத்துக்கள் தாம் அவை.

    மிகவும் தெளிவாக, அற்புதமாக, அருமையாக, எளிமையாக பாரதியை விளக்கி இருக்கிறார்... பேச்சின் இடையிலே தமிழ் மக்களின் சிறப்பை பேசினாலும்.. மாகாணப் பிரிவில் தமிழ் நாட்டிற்கு "இந்த மாகாணப் பிரிவினையில் தமிழ் மக்களுக்குக் குறை இருந்தும்" குறை உண்டு என்று தனது வருத்தத்தையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை கவிஞர்.

    "...அதனால்தான் பாரதியார் "உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்றும், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றும், "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு" என்றும் பாடினார்...."
    "வேதம் உடையதிந்த நாடு - நல்ல"...
    வேதம் உடையது இந்த நாடு என்றக் கூற்றோடு அதை, அந்த வேதத்தை அதன் சாரத்தை உள்ளடக்கிய வள்ளுவனும், ஆதி சங்கரரும், வள்ளலாளரும் இன்னும் பல சிவனடியாரோடு... அரவிந்தரையும் சேர்த்துக் கொண்டே "வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு என்றும் தனது ஆனந்தத்தை சொல்லி களியாடுகிறான் பாரதி. இந்தப் பாடல் பிறந்த சூழல்... மதுரை தமிழ் சங்கம் 1919 ஆண்டு நடந்த போட்டிக்காக பலரின் விருப்பத்திற்கு இணங்க மகாகவி எழுதியதாம்.

    நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்களின் சொற்பொழிவு அவரின் பாரதியைப் பற்றிய ஆழ்ந்தப் பார்வை குன்றின் மேல் இட்ட விளக்கு... அருமை, அருமை.
    நன்றிகள் ஐயா!
    வாழ்க,வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.

    ReplyDelete

You can send your comments