Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, August 16, 2011

"தாமரை" பாரதி நூற்றாண்டு சிறப்பிதழ்


பாரெங்கும் புகழ் பரப்பிப் பல்லூழி வாழ்க!
("தாமரை" பாரதி நூற்றாண்டு சிறப்பிதழின் தலையங்கம் இது. தாமரைக்கு நன்றி தெரிவித்து இதனை வெளியிடுகிறோம்.)

"பார் மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்!"
என்று பாடிச் சென்றான் பாரதி.

அவனது திருவாக்கு பொய்க்கவில்லை. அவன் அமரனாகி அறுபது (இப்போது 90) ஆண்டுகள் ஆன பிறகும், அவனது புகழ் இமயம் போல் வளர்ந்தோங்கி, எழுகடல்போல் பரந்து விரிந்து வருகிறது. அவனது பிறந்த தின நூற்றாண்டு விழா தமிழகத்திலும் இந்தியாவிலும் மட்டுமல்லாது சோஷலிசத் தாயகமான சோவியத் பூமி போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

ஆனாலும் பாரதியின் புகழுக்கும் பெருமைக்கும் ஏற்பட்ட தடை முடைகள் கொஞ்சமல்ல.

பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் அன்றைய அன்னிய ஆட்சி அவனது குரலை ஒடுக்கப் பல வழிகளிலும் முயன்றது; அவனது பாடல்களையும் பத்திரிகையையும் தடை செய்தது; அவனைச் சிறை செய்ய முற்பட்டது; பத்தாண்டுக் காலம் பாண்டிச்சேரியில் அடைந்து கிடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கியது. எனினும் இவற்றையும் மீறி அவனது பாடல்கள் நமது விடுதலைப் போரில் நமக்குப் படைக்கலங்களாக உதவின. அன்றைய அடக்குமுறையையும் மீறி அவனது பாடல்கள் விடுதலை வேட்கை கொண்டோரின் நாவிலும் நரம்பிலும் குடிகொண்டன.

நாடு விடுதலையடைந்த பின்னரும் பாரதிக்குப் பல்வேறு எதிர்ப்புக்கள் இருந்தன. அவன் பண்டாரப்பாட்டுக்கள் பாடிய பாமரக் கவிஞன் தானே, மகாகவியா என்று பழிக்கத் துணிந்த பண்டிதர்களும் இருந்தனர். அவனைப் பார்ப்பனீயக்கவி என்று பழிதூற்ற முற்பட்ட பகுத்தறிவுச் சிங்கங்களும் இருந்தன. தேசம் விடுதலை பெற்றபின் பாரதியின் தேசியப் பாடல்களுக்கு வேலையில்லை என்று புரட்டு வாதம் செய்து, பாரதியை வேதாந்தச் சிமிழில் சிறை செய்யப் பாடுபட்ட வித்தகர்களும் இருந்தனர்.

ஆயினும் இத்தனை எதிர்ப்புக்களையும் வெற்றி கொண்டு, இன்று அவனது புகழ் அகிலமெல்லாம் கொண்டாடும் அளவுக்குக் கொடி கட்டிப் பறப்பதற்கு என்ன காரணம்?

பாரதி இந்த உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள்தான். அதிலும் நாம் இன்று அவனைப் போற்றுவதற்குக் காரணமான பாடல்களையெல்லாம் எழுதிக் குவித்த அவனது இலக்கியப் படைப்புக் காலம் 16 ஆண்டுகள் மட்டுமே. இந்தப் பதினாறு ஆண்டுகளில் அவன் படைத்த படைப்புக்கள்தான் அவனைப் பல்லாண்டுகள் வாழச் செய்திருக்கின்றன. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கும் அவனைப் புகழ் மங்காது வாழ வைக்கவும் போகின்றன.

இதற்கு முதற்பெரும் காரணம் அவன் தேசிய கவியாக விளங்கினான் என்பதேயாகும். அடிமைப்பட்டுக் கிடந்த பாரதத்தின் விலங்குகளைத் தறிக்க அவன் தனது பாடல்களால் நமக்கு ஆயுதங்களை உருவாக்கித் தந்தான். ஆனாலும் பாரதி வேட்கை கொண்ட விடுதலை அன்னியரிடமிருந்து விடுபடும் அரசியல் சுதந்திரமாக மட்டும் இருக்கவில்லை. இந்தப் பாரத சமுதாயம் அரசியல் அடிமைத் தளையிலிருந்து மட்டுமல்லாமல், சாதிக் கொடுமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள் முதலிய சமூகக் கொடுமைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும், மொழியையும் நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் முடமாக்கும் கலாச்சார அடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை பெறுவதே, நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் நல்வாழ்வு மலரச் செய்வதே ஆனந்த சுதந்திரமாக விளங்க முடியும் என்ற உறுதியோடும் உத்வேகத்தோடும் பாடியவன் அவன்.

ஆயினும் அவன் மொழியின் பெயரால் வெறியனாகவும் மாறிவிடவில்லை. பாரதம் என்ற பெயரால் குறுகிய தேசிய வெறிவாதியாகவும் மாறிவிடவில்லை. மாறாக, அவன் மனிதகுலம் அனைத்தையும் நேசிக்கும் மனிதாபிமானியாக, சர்வஜன சமூகத்தின் விடுதலையையும் விரும்பிய புரட்சிவாதியாக, உலகனைத்தையும் ஒருங்கு நோக்கிய சர்வதேசியவாதியாக வாழ்ந்தான். இதன் காரணமாக அவன் பார்வை உலகனைத்தும் பரந்து நின்றது; அவன் ஏகாதிபத்தியத் தாக்குதலால் வீழ்ந்துபட்ட பெல்ஜியத்தையும், வாழ்த்தினான்; ஏகாதிபத்தியத்தை வென்று கொடிநாட்டிய சோவியத் சோசலிசப் புரட்சியையும் வாழ்த்தி வரவேற்றுப் பாடினான். இத்தகைய விரிந்து பரந்த, தொலைநோக்குமிக்க தீர்க்கமும், தெளிவும் குடிகொண்ட பார்வையின் பயனாகவே அவன் இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் நிகழ்ச்சியான அக்டோபர் புரட்சியை முதன்முதலில் வரவேற்றுப் பாடிய இந்தியக் கவிஞனாகவும் விளங்கினான்.

மேலும், மக்களுக்காக இலக்கியம் படைக்க வேண்டும் என்ற வேட்கை கொண்ட இலக்கிய கர்த்தாக்களுக்கும் அவன் தலை சிறந்த லட்சியமாகவும், வழிகாட்டியாகவும் விளங்கினான். பழமையிலிருந்து எதையெல்லாம் உதறித் தள்ளுவது என்பதற்கும் அவன் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தான். பழங்காலத்தைத் தெரிந்து கொண்டு, நிகழ்காலத்தைப் புரிந்து கொண்டு, வருங்காலத்துக்கு எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதற்கும் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கினான்.

இந்தப் பெருமைகள் எல்லாம் சேர்ந்துதான் பாரதியை இலக்கிய உலகம் என்றென்றும் போற்றி வணங்கக் கூடிய அமர கவிஞனாக ஆக்கியுள்ளன.

அத்தகைய கவிஞனுக்கு முதல் நூற்றாண்டு விழாக் காணும் காலத்தில் வாழும் நாம் பாக்கியசாலிகள். பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று விரதம் பூண்டு பாட்டுக்களைப் பாடிக் குவித்த அந்த மகாகவிக்குத் "தாமரை"யும் தனது இதயாஞ்சலியைச் செலுத்தி இந்த மலரை மகிழ்ச்சியோடு சமர்ப்பிக்கிறது.

வாழ்க பாரதியின் புகழ்!

=தாமரை ஆசிரியர் குழு.
நிறுவனர்: ப.ஜீவானந்தம்.

3 comments:

  1. பாரதியின் புகழ் போற்றும் பதிவு.... வாழ்க என்றென்றும் பாரதி......

    ReplyDelete
  2. "உலக மகாகவி பாரதி, அவன் ஒரு ரிஷி குமாரனாக / தேவ குமாரனாகவே இருந்திருக்கிறான்... வேதகாலத்தில் இருப்பதைப் போலவே இந்த மண்ணில் உலாவி இருக்கிறான். இவன் புதுச்சேரியில் அடைபட்டு வாழ்ந்தான் என்பதைக் கூட, ராமன் வனவாசம் செல்லாவிட்டால் அவதாரத்தின் நோக்கமே நிறைவேறாமல் போயிருக்கும் எனலாம். அதைப் போல பாரதி புதுச்சேரி போகாவிட்டால்?... நமக்கு இத்தனை பெரிய படைப்புகள் கிடைக்காமல் போயிருக்கலாம்... அவன் சென்னையிலே இருந்திருந்தால்...அவனின் விடுதலை வேள்வி வேண்டுமானால் இன்னும் விண்ணை முட்ட ஓங்கி வளர்ந்திருக்கலாம்.

    அது இறைவனின் ஏற்பாடு... வெள்ளையர்களின் கடும் கெடுபிடி இல்லாமல், இயற்கையும், அழகும், அமைதியும் கொண்டிருந்த புதுச்சேரியில் பாரதி அடைபட்டுப் போனான் என்பதை விட; "அடைகாத்து" என்றும் அழியா அமர காவியங்கலாகிய பல ஆக்கங்களை "பீனிக் பறவை குஞ்சுகளையே" பொரித்துக் கொடுத்தான் என்பதே பொருந்தும். இதில் அதிசயமே தனது இருபத்தாறில் தொடங்கி முப்பத்தாறுக்குள் பல வற்றாத ஆறுகலாகிய கவிதைகளை பொங்கி ஓடச் செய்தான் என்பதும் தான்.

    பொதுவாக, மனிதன்; தன்னை, இந்த சமூகத்தை புரிந்துக் கொள்ள ஆரம்பிப்பதே தனது நாற்பது வயதிற்கு மேல் தான். ஆனால் பாரதி நாற்பதுக்குள் நாலாயிரம் ஆண்டு அனுபவங்களை எல்லாம், பெற்று இன்னும் நானூறு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மங்காத பேரொளியை ஏற்றிவைத்து விட்டு இறையோடு ஐக்கியமாகிவிட்டான்.

    பாரதியின் பாடல்களை பண்டாரப் பாட்டு என்றுக் கூறியவனும், பார்ப்பனீயக் கவி என்று பகுத்தறிவே இல்லாமல் பறை சாற்றிய பயங்கர வாதிகளும்,
    அவனது சமதர்ம, சகோதர, சுதந்திரப் பிரகடனத்தை.... வேதாந்தம் இந்த மானுடத்திற்கு தந்த அரும் பெரும் பொக்கிசத்தை பாமரனும் உணரும் வண்ணம் எளிமைப் படுத்தியதை பொறுக்காத; ஒரு தத்துவத்தினுள் தன்னை விரும்பியோ, விரும்பாமலோ வலைக்குள் அகப் பட்ட எலியைப் போல் மாட்டிக்கொண்ட... குறுகிய கொள்கைவாதிகளின் விதண்ட வாதம் அது.

    வேதாந்தம் என்பது என்னவோ காவிக்கு, காட்டை சுற்றிவரும் முனிகளுக்கும் வேறு பல அந்நிய உலகத்தோருக்கு சொல்லப் பட்டதாக என்னும் மடத்தனம் தான் இதெற்கெல்லாம் காரணமாக இருந்திருக்கும். வொவ்வொரு இந்தியனும் வேதாந்தம் கூறிய வழியிலே தான் போகிறான் என்கிறார் விவேகானந்தர். திருடப் போகும் இந்தியத் திருடன் கூட தேவனை வணங்கிவிட்டு தான் செல்கிறான் அவனின் சிந்தனையிலும் அந்த இறைவன் தான் நிறைந்து இருக்கிறான். அங்கே எல்லோருமே அந்தச் செயலில் தான் ஈடுபட்டிருக்கிறார்கள், தேடுதல் அவர்கள் அறியாமல் செய்து கொண்டிருகிறார்கள் என்கிறார்.

    அதைத் தானே மகாகவி செய்யச் சொன்னான். காதலிலும், காமத்திலும், வீரத்திலும், பகைவனிடத்திலும், எங்கும் எதிலும் எப்போதும் தேடுதல் தானே செய்தான், செய்யச் சொன்னான். ஆக, அவன் எதை சொன்னாலும் அதில் தேடுதல் இருக்கும், அது தான் இந்த மானுடத்திற்கு தேவை, இந்த உலகிற்கு தேவை, அது தான் வேதம் கூறிற்று... அதைத் தான் அவனும் கூற வந்தான். கூறியும் சென்றான்.

    ReplyDelete
  3. இந்த பிரபஞ்சமே வேத நெறியில் தான் உய்யும். அதை அறிந்தவர்கள் / அறியாதவர்கள் / அறிந்தும் நடிப்பவர்கள், அவனை வேதாந்தி என்றும்... வேறுபல காரணமும் கூறுவதும். புரியாத் தனம் என்றே கூறவேண்டும். சாந்தோக்கிய உபநிஷத்தில் கூட பிரவாஹன ஜைவலி என்னும் பாஞ்சால மன்னன் தான்... காட்டிலே வாழ்ந்த ஆருணி முனிவனின் மகன் சுவேதகேதுவிற்கு வேதாவிளக்கம் தருகிறான்.

    ஒரு மன்னன் வேதாவிளக்கம் தருவதால் அவன் வேதாந்தியா... இன்னும் சொல்லப் போனால் வேதம் இல்லாமல் இந்தப் பிரபஞ்சமே இல்லை. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த கருத்துக்களுக்கு தான் செயல் முறை தந்து வந்துள்ளன.. வருகின்றன... அதை எல்லோருக்கும் எளிதில் புரிந்து துரிதப் படுத்த வந்தவன் தான் இந்த மகாகவி என்பதை.... இவர்கள் யாவரும் அறிந்திருந்தால் இப்படி பிதற்ற மாட்டார்கள்.

    கிருத யுகமே அவனின் அவதார நோக்கம். அவனுக்கு விருப்பு வெறுப்பு என்று எதுவும், யாரும் இல்லை. எல்லோரையும் ஒன்றாகவே பார்த்தான். அதனால் தான் சேரியிலே சுற்றி அந்த மனிதர்களிடமும் உறவாடி... தனது குழந்தையையும் கூட்டிக்கொண்டு தேச முத்துமாரியை வணங்கி வந்தான். ஆத்திகன், நாத்திகன் என்றும் பாரான்... பாரதிதாசனை பாராட்டி சீராட்டி வந்தான்.. சிங்காரவேலரோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தான்... திலகரை தனது அரசியல் குருவாகக் கொண்டாலும்.. மகாத்மாவையும் போற்றினான்.. அவரிடமுமே மறுத்துப் பேசினான். ஆகா, என்றுக் கொண்டாடிய அரவிந்தரிடமுமே கருத்து வேறுபாடு இருக்க கண்டான்..

    இவ்வளவு ஏன்? விவேகானந்தரிடமும் அவர் இல்லறம் கொண்டிருந்தால் இன்னும் பிரகாசித்து இந்த உலகிற்கு உதவி இருப்பார் என்றான். உண்மை அறிந்தவன் பாரதி பெரிதிலும் பெரிதும் நினைப்பவன்... இவன் தீர்க்கதரிஷி இது நடக்கும், நடக்காது என்று ஆரம்பத்திலே ஆய்ந்து தெளிந்து முடிவுக் கட்டி விடுவான். சுதந்திரப் பள்ளு பாடியதும் அப்படித் தான்.

    பாரதி, அவன் யாராக இருக்கட்டுமே.... இந்த அறிவுச் செவிடர்கள் காதில் அவனின் இடி முழக்கமும் கேட்கப் போவதும் இல்லை, இனிமையான தாலாட்டும் கேட்கப் போவதில்லை. எல்லாவற்றிலும் மூலம் பார்க்கும் மூடர்கள் இவர்கள் உண்மையின் மூலத்தை சொல்லுபவனை புரிந்துக் கொள்ள மூளை இல்லாதவர்கள் வெட்டிப் பேச்சும் விகண்டவாதமும் கொண்டு வீணில் தின்றுத் திரியும் மாக்களின் கூட்டமது.... அவன் கூறுவது போல் அவர்கள் மனதிற்குள் புகுந்த மாயையே.

    எப்படியாயினும்... இந்தியா உலகிற்கு அளிக்கும்.

    நல்லப் பதிவு.
    நன்றிகள் ஐயா!
    வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.

    ReplyDelete

You can send your comments