Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, August 16, 2011

'பாரதி' சில நினைவுகள்


'புதுச்சேரியில் பாரதி' சில நினைவுகள்
புதுவை பொதுவுடமைக் கட்சித் தலைவர் தோழர் வ.சுப்பையா

V Subbiah is considered as doyen of the trade unionist movement in Puducherry(Pondicherry), He is a veteran Communist leader and freedom fighter. Subbiah started his political career as a supporter of the Indian National Congress. A great orator, he mobilized the student and labor communities against the French rule in the Union Territory and was also imprisoned several times for his efforts in organising anti-French and anti-British protests.The greatness of Subbiah was the fact that he was sensitive towards the poor and the marginalized in society. Constant harassment by the French rulers did not affect his determination and he emerged above petty politics in the struggle for freedom. V.Narayanasamy (Union Minister of State for Parliamentary Affairs ) released a commemorative Indian stamp on 7th Feb 2011 to mark the birth centenary of veteran Communist leader and freedom fighter V. Subbiah.

(தோழர் ப.ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பொதுவுடமைப் பத்திரிகை "தாமரை". பாரதி நூற்றாண்டு விழாவின் போது டிசம்பர் 1981இல் "தாமரை" ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. அதில் பல அறிஞர்கள் பாரதி பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். அதில் புதுச்சேரி வ.சுப்பையா அவர்களின் கட்டுரையை இப்போது படியுங்கள். இவர் பாரதி புதுவையில் இருந்த காலத்தில் அவரோடு பழகியவர்)

பாரதி புதுவைக்கு 1908ம் ஆண்டு வந்து 1918ம் ஆண்டு நவம்பர் வரை தங்கியிருந்த காலையில்தான் அவரது கவிதைகளில் பெரும்பகுதி எழுதப் பட்டன எனலாம். சென்னையில் அவரை ஆசிரியராய்க் கொண்டு வெளியான "இந்தியா" என்ற வார ஏட்டினை பாரதி புதுவையில் வெளியிட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் அரசியல் அடக்குமுறை, பொருளாதாரச் சுரண்டல் கொள்ளை இவைகளைக் கடுமையாக விமர்சித்திட்ட விறுவிறுப்பான கட்டுரைகள், கேலிச்சித்திரங்கள் பிரசுரிக்கப்பட்டன. பாரதியின் உரைநடையும், கவிதைகளைப் போலவே எளியனதாகவும், உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் வேகமுடையதாகவும் இருந்தது. அவர் இயற்றிய கவிதைகளைப் போல் இரு மடங்கு இருக்கும் அவரது உரைநடை இலக்கியங்கள். பாரதி ஆங்கில இலக்கியமும் நன்கு பயின்றவர். கர்மயோகி என்ற ஆங்கில மாதப் பத்திரிகையை வெளியிட்டார். பாரதி 'பொன்வால் நரி' (A fox with golden tail) என்கிற ஆங்கில கதை நூல் ஒன்றை எழுதி பிரசுரித்தார்.

பாரதி இயற்றிய கவிதையில் பல அரசியல் நிகழ்ச்சிகளையொட்டி அவரது சிந்தனையில் தோன்றிய செறிவுடைய கருத்துக்களின் வடிவங்களாக அமைந்திட்டன. பாரதி புதுவையில் வாழ்ந்த போது நான் சிறுவன். அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் என் வீட்டு வழியாக அங்கிருந்த அவரது நண்பர் கருணாநிதி கிருஷ்ணசாமிப் பிள்ளை அவர்களின் இல்லத்திற்குப் போகும்போது என்னுடன் இருந்த பையன்கள் பாரதியைக் காட்டி 'இதோ சுதேசி ஐயர் போகிறார்' என்பார்கள். ஆனால் சில ஆண்டுகள் கடந்தபின் பாரதியின் பணிகளுக்குத் துணையாக இருந்து செயல்பட்ட பல நண்பர்களிடமிருந்து, அவர் அப்போது இயற்றிய கவிதையினையும், அவைகளை யொட்டிய சில நிகழ்ச்சிகளையும் அவர்கள் வாய் வழியாகக் கேட்டறிந்தேன். குறிப்பாக, பாரதியோடு சில காலம் புதுவையிலிருந்த சிறந்த தமிழ் எழுத்தாளர் வ.ரா. சென்னையில் 1933ஆம் ஆண்டு 'மணிக்கொடி' வாரப்பத்திரிகை நடத்திய போதும், அதைத் தொடர்ந்து அவர் இலங்கையில் 'வீரகேசரி' பத்திரிகை ஆசிரியராயிருந்து செயலாற்றிய போதும், சென்னைக்குத் திரும்பியதும் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர் என்னோடு சீரிய நட்பு முறையில் பழகியவர். அவரும் பாரதியின் மனைவி செல்லம்மாள் இருவரும் சேர்ந்து 1934ஆம் ஆண்டு புதுவையில் என்னுடைய இல்லத்துக்கு வந்தார்கள். வ.ரா. அவர்கள் பாரதியார் இயற்றிய சில கவிதைகளைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். மேலும் பாரதியாருடன் நெருங்கி அவரது பணிகளில் பங்கெடுத்த அரசு பள்ளி ஆசிரியர் (மறைந்த) முத்துக்குமாரசாமி பிள்ளை அவர்களும், சிவா, ஜெயராம பிள்ளை இவர்கள் சொல்ல சில தகவல்களை அறிந்தேன். அவற்றுள் பயனுள்ள பொருத்தமான சில நிகழ்ச்சிகளை மற்றவர்களுக்கும் சொல்லி பகிருந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
                                                              Sri Aravindhar

ஒரு நாள் காலை பாரதி வெள்ளாளர் வீதியிலிருந்த கிருஷ்ணசாமிப் பிள்ளை வீட்டில் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது மாடியின் தளத்தில் அவரது பெண் குழந்தை தடதடவென்று ஓடியது. இந்த சத்தம் கேட்டதும் கிருஷ்ணசாமி பிள்ளை சிறிது அதிர்ச்சியடைந்து, 'ஓடாதே பாப்பா, விழுந்திடுவே' என்று குரல் கொடுத்தார். 'காக்கா ஆப்பத்தைப் பிடுங்குது' என்றது குழந்தை. உடனே பாரதி, "ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, எத்தித் திருடும் அந்தக் காக்கை, அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா" என்று சொல்லிவிட்டு பிறகு அந்தக் கவிதையை எழுதி முடித்தாராம்.

சிறுவர்களைக் கண்டால் பாரதிக்கு இளைய பாரதம் எப்படியிருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் துடிக்குமாம். புதுவை ஈஸ்வரன் கோயில் தெருவில் அவர் குடியிருந்த வீட்டுக்கு வெளி குறட்டில் ஒரு நாள் அவர் நடந்து கொண்டிருந்தார்.

அப்போது தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞன் வளைந்து குனிந்து நடந்து போவதைப் பார்த்தார். உடனே அவனை அழைத்தார். அவன் முதுகை நிமிர்த்தி வைத்து, அருகில் குப்பை மேட்டில் நின்றிருந்த சேவலைக் காட்டி, "அதோ பார்! அந்தச் சேவலைப் போல் நீ நிமிர்ந்து நட!" என்றார் என என்னிடம் ஒரு நண்பர் கூறினார்.

ஒரு நாள் பாரதியின் சிந்தனையில் வெண் பரிதிகள் பூட்டிய ரதம் வேகமாக ஓடத் தொடங்கியது. பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை கவிதையாகப் புனைந்திட அவர் உள்ளத்திலே கருத்தோவியத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு வெளியிலிருந்து ஒரு புஷ் வண்டிக்காரனை அழைத்தார்; ஏறி அமர்ந்தார் வண்டியில், முன்னிருந்த சுக்கானைக் கையிலே பிடித்தார். ஓட்டடா இரதத்தை என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார். புஷ் வண்டிக்காரன் பின் புறத்திலிருந்த கைப்பிடியை வலுவாகப் பிடித்துக் கொண்டு, தள்ளிக்கொண்டே ஓடினான். பாரதி, "ஓட்டடா, ரதத்தை! ஓட்டடா ரதத்தை! ஓட்டடா ரதத்தை!" என்று பாடிக்கொண்டே புதுவையின் பல தெருக்களைச் சுற்றிவிட்டு வீடு திரும்பியதும், பாஞ்சாலி சபதம் என்ற செய்யுள் காவியத்தை எழுதினார் என்று இந்த நிகழ்ச்சியை என்னிடம் நண்பர்கள் சொன்னார்கள்.
                                                              V.Ve.Su.Ayyar

புஷ் வண்டி என்பது புதுவையிலே அக்காலத்திலிருந்த ஒரு மாதிரியான அமைப்பைக் கொண்டது. புதுவை நகரத்திலிருந்த பிரமுகர்கள் வீட்டுக்கு ஒரு வண்டி இருக்கும். வண்டிக்கு பின்னால் நீண்ட பிடியிருக்கும் வண்டிக்குள் இருவர் உட்கார வசதியான இருக்கை உண்டு. உட்காருகிறவர்கள் கையில் ஒரு சுக்கான் பிடித்துக் கொண்டு வழி திருப்பிச் செல்ல வேண்டும். அந்த வண்டிக்கு நான்கு சக்கரங்கள் உண்டு. சுக்கான் முன் இரு சிறிய சக்கரங்களோடு இணைத்திட்ட ஒரு இரும்பு சுழல் வட்டத்தோடு இணைந்திருக்கும். உட்காருவோர் காலடியில் ஒரு மணியின் பொத்தான் இருக்கும். அதைக் காலால் தட்டியதும் மணியோசை எழும். இந்த வண்டியில் சவாரி செய்வது வெகு ஜோராயிருக்கும் அந்தக் காலத்தில்.

தலைவர்களைக் கைது செய்திட ஏகாதிபத்திய சதி.

பாரதி புதுவையில் 1908ஆம் ஆண்டிலிருந்து 1918 வரை தங்கியிருந்ததாகச் சொன்னேன் அல்லவா? அப்போது அவரையும் வ.வெ.சு.ஐயரையும், அரவிந்தரையும் எப்படியாவது பிரெஞ்சு அரசு புதுவையிலிருந்து கைது செய்து கொண்டு போக இணங்க வேண்டும் என்று பல உத்திகளைக் கையாண்டது. புதுவைக்கு மூன்று முதல் பத்து கி.மீ.ட்டரில் பிரிட்டிஷ் எல்லை இருந்தது. இவர்கள் புதுவையின் எல்லையை ஆரம்பத்தில் சரியாக அறிந்திருக்க முடியாது அல்லவா? இவர்களோடு சிலரை இணக்கமாக பழகச் செய்து பிரிட்டிஷ் எல்லைக்குள் இவர்கள் அறியாமலே நுழையச் செய்து விட்டால் கைது செய்வது எளிதாயிருக்கும் என்று பிரிட்டிஷ் வெவுகாரர்கள் முயன்றார்கள்.

அல்லது குதிரை அல்லது புஷ் வண்டிகளில் பாரதி உட்கார்ந்து எந்த நண்பர் வீட்டுக்காவது போகச் சொன்னால், அப்போது எல்லையைக் கடந்து சென்றுவிட வேண்டுமென்றும் மற்றொரு முயற்சி. எனவேதான் அப்போது பாரதியாரோடு எப்போதும் உள்ளூர் நண்பர்கள் துணையாக இருப்பது வழக்கம். பலாத்காரச் செயல்கொண்டு அவரைக் கடத்திச் செல்ல முயன்றாலும், அதற்கு ஈடு கொடுக்க வல்லவர்களும் தயாராகவே இருந்தார்கள்.

பாரதி வெளியிட்ட 'இந்தியா' பத்திரிகையின் பிரதிகளை ரகசியமாகத் தலையில் சுமந்து பிரிட்டிஷ் எல்லைக்குள் பல ஊர்களுக்குச் சென்று அங்கிருந்த நண்பர்களிடம் கொடுத்துவரும் தொண்டினைச் செய்திட சில இளைஞர்கள் அக்காலை பாரதிக்கு உதவிவந்தார்கள். அத்தகையோர் பிறர் பிற்காலத்தில் எனக்கு நண்பர்களாய் புதுவையில் நான் துவங்கிய பிரஞ்சு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் என்னுடன் சேர்ந்து போராடினார்கள். அத்தகைய நண்பர்களில் சிலர் அரசு ஊழியர்களாயும் அப்போது பணியாற்றியவர்கள்.

முதல் மகா யுத்த ஆரம்பகாலத்தில் பிரெஞ்சுக்கும் பிரிட்டனுக்கும் நெருங்கிய உறவு வளர்ந்தது. அந்த நிலையைப் பயன்படுத்தி பாரதி, அரவிந்தர், வ.வெ.சு.ஐயர் மூவரையும் கைது செய்து பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க பிரெஞ்சு அரசு ஒரு வழியைக் கண்டறிந்தது. பிரெஞ்சிந்திய அரசின் நிர்வாகக் கவர்னருக்கு ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று இருந்தது. அதில் மூவர் இந்திய பிரமுகர்கள், மூவர் பிரெஞ்சு அரசு அதிகாரிகள். இது ஒரு பொம்மைக் குழு. இதற்கு பிரிவி கவுன்சில் என்று பெயர். இக்குழுவின் ஒப்புதலை எளிதில் பெற்று நிறைவேற்றிவிடலாம் என்று பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டது.

இச்செய்தியை அறிந்த பாரதி, வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் மூவரும் இதிலிருந்து தப்பிக்க வழி என்ன என்று கலந்து பேசினர். பிரிட்டிஷ் இந்திய அரசின் சூழ்ச்சிக்கு பிரெஞ்சு அரசு இணங்கி விடுமோ என்ற ஐயப்பாடு இந்தத் தலைவர்களுக்கு இருந்தது. அதனால் மூவரும் ஒரு படகில் ஏறி கடலில் பிரிட்டிஷ் - பிரெஞ்சு ஆட்சி அதிகாரத்துக்கு அப்பால் எட்டி உள்ள கடல் பகுதியில் படகில் தங்கியிருப்பதென்றும் பிறகு பிரான்சிலுள்ள அரசிடம் ஊரிலுள்ள பெரியவர்கள் முறையிட்டு நடவடிக்கை எடுப்பது என்றும் இவர்கள் முடிவு செய்தார்கள்.

இந்த நாட்களில் பாரதி ஒரு நாள் வைசியாள் வீதியிலுள்ள சங்கர செட்டியார் வீட்டுக்குச் சென்றார். செட்டியார் பாரதியாரிடம் பெரிதும் மதிப்புடையவர். அவருடைய வீட்டில்தான் பாரதி, அரவிந்தர் புதுவைக்கு வந்ததும் சில நாட்கள் தங்க வைத்தார்.

செட்டியார் வீட்டுக் கூடத்தில் ஊஞ்சல் பலகை இருந்தது. பாரதி எப்போதும் போல் அதில் போய் அமர்ந்தார். செட்டியார் எங்கோ செல்ல ஆடை அணிந்து கொண்டிருந்தார். பாரதியை நோக்கிய செட்டியார், "என்ன பாரதி! ஏதோ சோகமாய் இருக்கீங்களே?" என்று கேட்டார். பாரதி உடனே பிரச்சனையை விளக்கிவிட்டு, பிரிவி கவுன்சில் உறுப்பினர்கள் இன்று கூடி முடிவு எடுக்கப் போகிறார்களாம் என்று பாரதி சொல்லி முடிப்பதற்கும், செட்டியார் உடனே குறுக்கிட்டு "இதென்ன பெரிய காரியம் பாரதி; நானும் அந்த பிரிவி கவுன்சில் உறுப்பினர்தான். அதற்காகத்தான் புறப்படுகிறேன், நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொன்னார்.

அப்போது பாரதிக்கு உள்ளத்தில் எழுந்த வேகம் ஊஞ்சலில் உட்கார்ந்தபடி தரையில் உதைத்து ஊஞ்சலை வேகமாக ஆடச் செய்து கொண்டே பாடினாராம்:

"ஜெயமுண்டு பயமில்லை மனமே - இந்த
ஜன்மத்திலே விடுதலை உண்டு, நிலையுண்டு"

இந்தப் பாட்டை பாரதி அங்கேயே எழுதி முடித்தார் என்று அவரது நண்பர் எனக்குச் சொல்லித் தெரிந்தது.

பாரதியின் மெய்ப்பாடு உணர்வுகள் ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்து எழுந்த சிந்தனையின் சிலம்பாகக் கவிதைகளில் ஒலிக்கிறது.

பாரதமாதாவுக்கு சிலை.

பாரத தேவி, பாரத மாதா, பாரத மாதேவி, வந்தேமாதரம், தாயை வணங்குவோம் என்றெல்லாம் பாரதியின் தேசிய கீதங்களில் வருகின்றன. இந்தத் தாய்க்கு ஓர் உருவம் வேண்டாமா? என்று பாரதி எண்ணினார். பாரத நாட்டுக்கு ஓர் அன்னை வடிவம் அளித்து, அதை வடித்திடச் செய்து அதற்கு பாரதமாதா என்று பெயர் சூட்டிப் பெருமை தந்தவர் பாரதி என்பதைத் தமிழ் மக்கள் அறிவது அவசியம். புதுவையிலிருந்தபோது பாரதியும் வ.வெ.சு.ஐயரும் ஒரு நாள் பாரதமாதாவுக்கு ஒரு உருவம் தரவேண்டும் என்று எண்ணினார்கள். அப்போது ஓவியக் கலையில் சிறந்ததோர் மேதை பேத்ரீஸ் என்றொருவர் பிரெஞ்சுக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவரைச் சந்தித்து பாரதமாதாவின் உருவப் படம் ஒன்று வரைய வேண்டும், அதன் அமைப்புகள் எப்படியிருக்க வேண்டும் என்று விவாதித்தார்கள். பாரதமாதா இந்தியாவின் நில அமைப்பு அப்படியே பாரததேவியின் உருவாகக் காட்சியளிக்க வேண்டும். தலைமேல் ஒரு தங்க கிரீடம், தலைமுடி இருபக்கமும் விரிந்து, இமய பர்வதத்தையும், சிந்து, கங்கை ஆறுகள் இரு மருங்கிலும் ஓடிப் போய்வது போலவும், இலங்கையை ஒரு தாமரை போலவும் அமைத்திட வேண்டும் என்பது போன்ற பாரதமாதாவின் உருவ அமைப்பின் கருத்துக்களை ஓவியமாக வரைய திரு பேத்ரீஸ் அவர்களிடம் விளக்கினார்கள். அவர் ஒரு சில நாட்களில் பாரததேவியின் ஓவியத்தை எழுதி முடித்தார்.

பாரதமாதாவின் உருவ அமைப்பைப் பற்றி வ.வெ.சு. ஐயரும் பாரதியும் விவாதித்த போது ஒரு கருத்து மோதல் ஏற்பட்டது. வ.வெ.சு. ஐயர் பாரதமாதாவுக்கு ஆபரணங்கள் வேண்டாம், வெள்ளையன் நாட்டைக் கொள்ளை கொண்டு வறுமை நிலையில் வைத்துள்ளான் என்றார். பாரதி சிறிது நேரம் சிந்தித்து விட்டு, இல்லை இல்லை, நமது நாட்டில் இன்னும் செல்வங்கள் ஏராளமாக உள்ளன. எனவே பாரதமாதா சர்வாலங்காரபூஷிதையாகவே காட்சி தரவேண்டும் என்றார். அதன்படி பின்னர் படத்தில் திருத்தங்கள் செய்து நகைகள் அணிவிக்கப் பட்டன.

பின் இதை மண்ணில் சிலையாக உரிய வண்ணங்களோடு வடித்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அக்காலத்தில் புதுவையில் குயவர்பாளையம் என்ற ஊரில் பொம்மைகள் செய்வதில் சிறந்த கலைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் வடித்தெடுக்கும் பொம்மைகள் எழில் மிகுந்தவை. வெளிநாடுகளுக்கு அப்போது எடுத்துச் செல்வார்கள். ஓவியக்காரர் பேத்ரீஸ் அவர்கள் எழுதிய பாரதமாதாவின் ஓவியத்தைப் போல களிப்பு மண்ணினால் சிலையை வடித்து, வண்ணங்களைத் தீட்டிக் கொடுத்தார்கள். குயவர்பாளையம் சிற்பக் கலைஞர்கள் சிறிதும் பெரியதுமாக இரு அளவுகளில் செய்தார்கள். அதில் பெரிய அளவிலுள்ள ஒன்று இப்போது அரசின் பூங்காவில் வைக்கப் பட்டுள்ளது.

நான் அமைச்சராக இருந்தபோதுதான், இந்தச் சிலை அரசுப் பூங்காவில் தனியிடம் ஒதுக்கி நிறுவப்பட்டது. அதற்கொரு சிறு விழாவும் நடத்தப் பட்டது.

இந்தச் சிலையில் பாரதமாதா கால்களில் விலங்குகள் இட்ட நிலையில் காட்சியளிக்கிறாள். அவளது வலதுகரம் முகவாய்க்கட்டில் ஊன்றிய நிலையில் உள்ளது. பாரதியின் யோசனையின் பேரிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. 'என் அன்னை சிந்தனையில் இருக்கிறாள்' என்பதே பாரதி இதற்குக் கூறிய விளக்கம்.

மற்றொரு சிறிய சிலை அதன் உள்பாகம் குடவாயிருக்கும். வாஞ்சிநாதன், மாடசாமி இருவரும் புதுவைக்கு வந்து துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று திரும்பும் போது அந்தச் சிலைக்குள் கைத்துப்பாக்கியை வைத்து பொம்மை எடுத்துச் செல்வது போல மறைத்து எடுத்துப் போனார்கள். அந்தக் கைத் துப்பாக்கியைக் கொண்டுதான் 1911ஆம் ஆண்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற கெலெக்டரை வாஞ்சிநாதன் சுட்டது என்று அப்போது பாரதியுடன் இருந்த நண்பர்கள் என்னிடம் கூறினர்.

குயில் பாட்டு.

புதுவையில் எழில் மிக்கதோர் இயற்கைக் காட்சியைக் கண்டதும் பாரதியின் உள்ளத்திலிருந்து எழுந்த 'குயில் பாட்டு' அவரது கவிதைப் படைப்பில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றது.

"செந்தமிழில் தென்புதுவை யெனுந்திரு நகரில்
மேற்கே சிறு தொலைவில் மேவுமொரு மாஞ்சோலை"

என்று பாரதி குயில்பாட்டில் குறிப்பிட்டுள்ள மாஞ்சோலை, தென்னை தோப்பு, நீர் ஊற்று கொப்பளித்து எழும் மடு. பசுமை நிறைந்த நிலவளம், மயில் கூட்டம், கொஞ்சி இசை மீட்டும் இனிமையான இயற்கை எழில் நிறைந்ததோர் இடம். பாரதி அடிக்கடி இந்தத் தோப்புக்குச் செல்வார்.

காணி நிலம் வேண்டும் என்ற பாட்டையும் பாரதி அங்கிருந்துதான் பாடினார் என்று சொல்லப் படுகிறது. பாரதி காணி நிலம் வேண்டும் என்று அவரது சிந்தனையில் எழுப்பிக் கேட்டது அவருக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக் குடிமகன் இந்த இயற்கை வளங்களையும் பெற்று அனுபவிக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த சிந்தனையிலிருந்து எழுந்த கருத்துக்கள்.

பாரதி ஆதிதிராவிட மக்களோடு நெருங்கிப் பழகுவார். அவர்கள் வீட்டுக்குச் சென்று உணவருந்துவார்; அவர் வீட்டுக்கு ஆதிதிராவிட நண்பர்களை அழைத்து, செல்லம்மாளை உணவு அளிக்கச் சொல்லுவார். ஒரு நாள் கனகலிங்கம் என்ற ஒரு ஆதிதிராவிட இளைஞனை பாரதி வீட்டுக்கு அழைத்து வந்து அவனுக்குப் பூணூல் அணிவித்து காயத்ரி மந்திரோபதேசமும் செய்து வைத்தார். கனகலிங்கம் புதுவையில் இருந்தபோது என்னிடம் இந்த நிகழ்ச்சியை அவரே கூறினார்.

புதுவை நகரோடு தென் பாகத்திலுள்ள உப்பளம் என்ற கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள நண்பர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். அந்த முத்து மாரியம்மனைப் பற்றியும் பாரதி பாட்டு எழுதியுள்ளார்.

பாரதி புதுவையில் வாழ்ந்த போது சில சமயங்களில் வாழ்க்கை நடத்த முடியாத வறுமை நிலையிலும் இருந்தார். அவர் குடியிருந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாது. அந்த வீட்டுக்காரன் ஒரு செட்டியார். புதுவை முத்தியால்பேட்டையிலிருந்து வாடகை கேட்டு வாங்குவதற்கு பாரதியிடம் வருவார். அவரை பாரதியார் விளக்கெண்ணை செட்டியார் என்று அழைப்பார். செட்டியார் பாரதியை வந்து பார்ப்பார், ஆனால் வாடகை என்று வாய் திறந்து கேட்க மாட்டார். பாரதி அவரைப் பார்த்து பணமில்லை என்பாராம். 'அதுக்கென்ன சாமி' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

ஒரு நாள் பாரதி 'நான் சுதேசி வங்கி செக்கு தருகிறேன்; வாங்கிக் கொள்ளுங்கள்' என்றாராம். செட்டியார் 'அதுக்கென்ன சாமி, உங்க செக்கு எங்கும் செல்லும்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம்.

வறுமை நிலையிலுள்ள பாரதிக்கு, அவர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரைகளுக்காக மணியார்டர் வருமாம். தபால்காரன் அதைக் கொண்டு வரும்போது பாரதியைப் பார்க்க வந்திருந்த நண்பர் அவருடைய வாழ்க்கை நெருக்கடியைப் பற்றி சற்று நேரத்துக்கு முன் வெளியிட்டிருந்தார். பாரதி மணியார்டர் பணத்தை வாங்கி அந்த நண்பருக்குக் கொடுத்து, 'எடுத்துக்கொண்டு போ' என்பாராம்.

ஒரு நாள் ஜெர்மனியிலிருந்து ஒரு எழுத்தாளர் பாரதிக்கு அறுநூறு ரூபாய் மணியார்டர் அனுப்பி இருந்தார். பாரதி எழுதியிருந்த சில கவிதைகளை எடுத்து அவர் ஜெர்மன் மொழியில் பெயர்த்து எழுதி வெளியிட்டாராம். எனவே உரிமையாளருக்கென்று பாரதிக்கு அந்தப் பணத்தை அனுப்பினாராம். பாரதி அந்தப் பணத்தைக் கையில் பெற்றதும் அப்போதும் கூடவிருந்த சில நண்பர்களுக்கு அதில் கணிசமான தொகையை விநியோகித்துவிட்டாராம். இவ்வாறு பாரதி வறுமையில் இருந்தும் தனக்கென வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் அவருக்குக் கிடைத்ததைப் பகிர்ந்து கொள்வதென்ற உயர்ந்த உள்ளம் படைத்திருந்தார்.

பண்டைய புலவர்கள் உலா, மடல், அந்தாதி முதலிய செய்யுட்களைப் பாடி செல்வந்தர்களைப் புகழ்ந்து பொருள் பெற்று வந்தார்கள். ஆனால் பாரதி அவ்வாறு காசுக்கு கவிதை பாடமாட்டார். எட்டையபுரத்து ராஜாவை அவர் புகழ்ந்து பாட இணங்காததால் பிணக்கு ஏற்பட்டு பாரதி அரசு அவையிலிருந்து வெளியேறிவிட்டார்.

அரவிந்தர் புதுவைக்கு 1910-ஆம் ஆண்டு வந்தபோது பாரதியும், அவரது நண்பர்களும் துறைமுகத்துக்குச் சென்று அரவிந்தரை அழைத்து வந்தார்கள்.

பாரதியின் நண்பர் சங்கரன் செட்டியார் வீட்டு மாடியில் ஒரு அறையில் பல நாள் தங்க வைத்தார்கள். ஒரு நாள் பாரதி அவரைப் பார்க்கச் சென்றிருந்த போது, அரவிந்தரைப் பார்க்க வந்த சிலர் அவரது காலில் வீழ்ந்து கும்பிடுவதை முதன்முறையாக அன்றுதான் பாரதி பார்த்தார். பாரதிக்கு இக்காட்சியைக் காண சகிக்கவில்லை. எரிச்சல்பட்டார். அரவிந்தரைப் பார்த்து, "இது என்ன, உங்கள் காலில் விழுந்து கும்பிடுவதை நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்? நாம் அடிமை உணர்வை ஒழிக்க வேண்டும் என்கிறோம்; இது என்ன?" என்று பாரதி வினவ, அரவிந்தர் பாரதியைப் பார்த்து அவர்கள் என்னை வணங்கவில்லை, அவர்கள் உள்ளத்தில் ஆண்டனை எண்ணி செய்கிறார்கள் என்றாராம். பாரதி இந்த விளக்கத்தை ஏற்கத் தயாரில்லை. உடனே அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். அது முதல் பாரதி, அரவிந்தரைச் சந்திப்பதில்லை என்று அறிந்த நண்பர்கள் கூறினார்கள்.

பாரதி அடிமை உணர்வை வளர்த்திடும் எந்த நடவடிக்கையையும் கடுமையாக எதிர்த்திட்டவர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக் காட்டாக உள்ளது.

2 comments:

  1. ஆகா,அற்புதமானத் தகவல்கள்... இல்லை இல்லை தகவல் களஞ்சியம் என்பேன்.
    மகாகவி தனது உணர்ச்சி பெருக்கில் கவிதைப் பூக்களை நினைத்த மாத்திரத்திலே பூத்து குலுங்கச் செய்திருக்கிறான். இவன் பிறவிக் கவிஞன் அல்ல... இவனின் அத்தனைப் பிறவிகளும் கவிஞனாகத்தான் பிறந்திருப்பான் போலும். இவன் அமரத்துவம் பெறும் வரை கவிஞனாகவே பிறந்து அமரத்துவம் பெறவேண்டும் என்றே வரம் வாங்கி வந்து, அதை போலவே புதுச்சேரியிலே அநுபூதி அடையும் தனது கடைசிப் பயணம் வரை கவிஞனாகவே இருந்திருக்கிறான் என்பது திண்ணம்....

    பாரதமாதா பற்றிய தகவல்கள் அருமை... இரு பெரும் புனித ஆத்மாக்களின் சிந்தனையில் விளைந்த சித்திரமும், சிற்பமும் அற்புதம் இதிலே இலங்கையை தாமரையாக சித்தரித்து கூட அருமை.. பௌத்தம் செழித்த நாடு என்பதால் புத்தரின் விசேசமான மலரையே இடச் செய்தது அருமை.

    எத்தனைப் பெரிய மனம் இருந்தால் அறுநூறையும் பிறருக்கு பங்கிட்டிருப்பான்.... இந்தக் கர்ணன். கிட்டத்தட்ட இன்று அது அறுபது லட்சம் பெறும்.
    ஒருபவுனே அன்று ஐந்து பத்து ரூபாய்க்கு விற்று இருக்கும் என் நினைக்கிறேன். அதோடு அன்று பாரதியின் வறுமையும் எவ்வளவு கொடுமையாக அவனை வாட்டி எடுத்த நிலையிலும்.....!!!. அவன் வாழ்வில் செய்தவைகளைத்தான் எழுதி அமரத்துவம் அடைந்தான் என்றுக் கூறுவதே சாலப் பொருந்தும்.

    அரவிந்தரும் பாரதியும் நெருக்கம் குறைந்து காணப் பட்டார்கள் என்பதை நானும் கேள்வியுருகிறேன். அவர் கல்கத்தாவில் இருக்கும் போது அவரைப் பெரிதும் பாரதி போற்றினார், கொண்டாடினார். பிறகு, புதுவைக்கு அரவிந்தர் வந்தப் பிறகு அது சற்று தளர்ந்தே இருந்ததாகவும் கூறுவர்.

    அற்புதப் பதிவு... பாரதி பித்தனான எனக்கு சத்தான பல தகவல்கள் கிடைத்தது. என்னிடம் ஜனசக்தி வெளியிட்ட பாரதியின் நூற்றாண்டு நிறைவு மலர் இருக்கிறது. இது கூட மிகுந்த சிரமத்திற்கு இடையில் (வறுமைக்கு இடையில்) எனது தந்தையார் வாங்கி வந்தார்கள்.

    இந்தத் தருணத்தில் பாரதியை போற்றிய அனைத்து அறிஞர் பெருமக்களையும், குறிப்பாக திருவாளர். "பாரதிப் புதையல் பெருந்திரட்டு" ரா.அ. பத்மநாபன் அவர்களையும். அன்றும், இன்றளவும் பாரதியின் நூல்களுக்கு, பாரதியைப் பற்றிய ஆய்வுக்குப் பேராதரவு செய்த, செய்யும் திருவாளர்கள். நா.மகாலிங்கம் மற்றும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களைப் போன்றோரையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். எனக்கு இங்கு இந்தப் பெரும் அறிஞர்களின் நூல்களைப் படிக்க இங்கு வழி இல்லை. ஆகவே பாரதி இலக்கியப் பயிலகத்தின் இந்தப் பணி என்போன்றோருக்கு வரப் பிரசாதம் என்பேன்.

    நன்றிகள் ஐயா!
    வாழ்க, வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.

    ReplyDelete
  2. Shri Thanjavooran: You have never indicated that you have such a wonderful site-the information you have makes me bow my head with awe...
    The existence are not known to many-especially the Tamil writers and fraternity.I also would love to post in Tamil. But I do not have the facility.
    Thank you, sir,
    venkatakailasam

    ReplyDelete

You can send your comments