Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, August 9, 2011

ஆவணி அவிட்டம்


ஆவணி அவிட்டம்

(வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் விஷயங்களைக் கதைபோல எழுதுவதில் பாரதியார் சமர்த்தர். நம் தமிழ்நாட்டுச் சமூகத்தின் உயர்வும் தாழ்வும் யாவும் இத்தகைய கதைகளில் பளிச்சென்று தெரிகின்றன எனும் முன்னுரையுடன் திரு ரா.அ.பத்மநாபன் இதனை "பாரதி புதையலில்" வெளியிட்டுள்ளார். இந்தக் கதை முதலில் 'சுதேசமித்திரனில்' வெளியாகியது. பின்னர் மித்திரன் காரியாலயம் வெளியிட்ட "கதாமாலிகா" எனும் நூலிலும் வெளிவந்தது - நன்றி:- திரு ரா.அ.பத்மநாபன் "பாரதி புதையல்".)

வேதபுரத்தில் அத்வைத சமாஜம் ஒன்றிருக்கிறது. இதில் பிராமணர் மட்டும்தான் சேர்ந்திருந்தார்கள். வாரத்துக்கொரு முறை ஞாயிற்றுக்கிழமை தோறும் தண்டுல சாஸ்திரி என்பவர் அங்கே உபந்நியாசமோ கதையோ நடத்துகிறார். இந்த அத்வைத சமாஜத்துக்கும் கும்பகோணம் சங்கர மடத்துக்கும் ஸ்நேகம். சமாஜத்துக் காரியதரிசியின் பெயர் முத்துச்சாமி அய்யர். இவருக்கு நாற்பது வயதிருக்கும். இங்கிலீஷில் எம்.ஏ. பரீக்ஷை தேறி நூற்றைம்பது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு உச்சி குமாஸ்தா வேலை பார்க்கிறார். இவரகத்தில் குழந்தை குஞ்செல்லாம் எப்போதும் இங்கிலீஷ்தான் பேசும். மனுஷ்யன் நல்லவர், பெரிய சம்சாரி, கொஞ்சம் பயந்தவர்; அதிலே கொஞ்சம் லோகோபகார சிந்தை. வேதபுரத்து வைதிக லெளகிக பிரம்மணர்களை ஒன்று சேர்த்துத் தான் சொன்ன திதியில் ஆவணி அவிட்டம் வகையாராக்கள் நடத்தும்படியாகவும் தன்னை கும்பகோண மடத்தார் பொருள் தெரிந்து மதிக்கும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அந்தத் தொழிலையே லோகோபகாரமாகவும் நடத்தி வருகிறார்.

கொஞ்சம் ஆசார திருத்தக் கொள்கையுடையவர், ஆனால் அதிலும் பயக் கலப்பில் மெதுவாகத்தான் வேலை செய்துகொண்டு வருகிறார். பரபரப்புக் கிடையாது. பொறுமையுடையவர், நிற்க.

இன்று காலையில் நான் நம்முடைய ஸ்நேகிதராகிய இடிப்பள்ளிக்கூடம் பிரமராய வாத்தியாரைக் கண்டு, புரோஹிதர் வந்தால் என் வீட்டுக்கு ஆவணி அவிட்டம் பண்ணுவிக்கும் பொருட்டு அனுப்பும்படி சொன்னேன். பிரமராயர் சொன்னார், "பெரிய வாத்தியாருடைய தங்கைக்கு உடம்பு சரியில்லை; மிகவும் ஆபத்தான நிலையிலிருப்பதாகக் கேல்விப் பட்டேன். என்ன செய்யலாம்? ஐயோ பாவம்! கிழவி; அந்த அன்னிபெசண்ட் வயது இவளுக்கும் இருக்கும். அதனாலே அந்த வாத்தியார் இன்றைக்கு உபாகர்மா பண்ணிவைக்கக் கோயிலுக்கு வருவதே சந்தேகம். அவருடைய மருமகன் குமார சாஸ்திரி வருவான். நான் கோயிலுக்குத்தான் போவேன். ராமராயர் உங்களைப் போலே, உபாகர்மா உபநயன விஷயங்களை வீட்டுக்குள்ளேயே ரஹஸ்யமாக நடத்தி வருகிறார். அந்தக் குமார சாஸ்திரி என் வீட்டுப் பக்கமாக வருவான். நான் உங்கள் வீட்டுக்கு உடனே அனுப்புகிறேன்" என்று சொன்னார்.

நான் அவரிடம், "அதென்ன ஸ்வாமி! இந்தப் பிராமண ஸமூகத்தில் வருஷந்தோறும் இன்றைக்கு ஆவணி அவிட்டமா, நாளைக்கு ஆவணி அவிட்டமா என்கிற சண்டை நியதமாகவே நடந்து கொண்டு வருகிறதே, காரணமென்ன?" என்று கேட்டேன்.

அவர் சொன்னார், "ஹிந்துக்களிலே பத்தாயிரத்தில் ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேர் அபண்டிதர்கள். பஞ்சாங்கமே முழுவதும் தப்பிதம். உத்தராயண தக்ஷிணாயனக் கணக்கில் 22 நாள் தப்பிதம் போட்டிருக்கிறான் இருபத்திரண்டுக்கும் இருபத்திமூன்றுக்கும் நடுவிலே. அதாவது பஞ்சாங்கம் பிரயோசனமில்லை. நம்முடைய வருஷ மாஸம் தேதி எல்லாம் தப்பிதம். இதைக் கவனிக்க நாதனைக் காணோம். ஆவணி அவிட்டச் சண்டை நிர்த்தூளிபடுகிறது. அஹோ! அபண்டிதாஹ்" என்றார்.

"பத்திரிகைகளிலே நடக்கிறதே, அதைத் தவிர இந்த உள்ளூர்ப் பண்டிதர்களுக்குள்ளே வேறே லடாயிகள் உண்டோ?" என்று கேட்டேன்.

"அதை என்ன சொல்வேன், போம்! அத்வைத ஸமாஜமே மிகவும் த்வைத ஸ்திதியில் இருக்கிறது. உச்சி குமாஸ்தா முத்துஸாமி அய்யர் வியாழக்கிழமை தான் பூனூல் போட்டுக் கொள்ளவேண்டும் என்ற கக்ஷி. மணிலாக்கொட்டை மஹாதேவய்யர் வெள்ளிக்கிழமைக் கக்ஷி. வெங்காயக்கடை வெங்கு அய்யர் தெரியுமோ உமக்கு? அவருக்கு முத்துஸாமி அய்யரே திதி நக்ஷத்திரம் எல்லாம். யாராவது நம்மிடம் வந்து இன்றைக்குத் திதி என்ன என்று கேட்டால் நாம் பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்லுகிறேன் என்போமா மாட்டோமா? இந்த இடத்தில் அவர் முத்துசாமி அய்யரைப் பார்த்து வந்து சொல்கிறேன் என்பார். அவர்கூட இந்தத் தடமை ஸர்க்கார் ராஜா ஆவணி அவிட்டத்துக்காக வெள்ளிக்கிழமைதா லீவு விடுகிறார்களென்பதையும், அவருடைய மாப்பிள்ளை ஸர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாலும், அவருக்கு வியாழக்கிழமை ரஜா கிடையாதாகையாலும் வெள்ளிக்கிழமையன்று உபாகர்மா நடத்தினால்தான் மாப்பிள்ளையும் தானும் சேர்ந்து நடத்த முடியும் என்பதையும் உத்தேசித்து, இந்த நிலையில் முத்துச்சாமி அய்யரைக் காட்டிலும் கும்பகோணமே ப்ரமாணம் என்பதாகத் தீர்மானம் செய்து விட்டார். ருஷ்யாவிலே குழப்பம் எப்படியிருக்கிறது ஸ்வாமி?" என்று பிரம்மராயர் முடித்தார்.

"அது எக்கேடும் கெட்டுப் போகிறது, மேலே உபாகர்ம விஷயத்தைச் சொல்லும்" என்றேன்.

இந்த ஸமயத்தில் கோயில் தர்மகர்த்தா வீரப்ப முதலியாரும் அங்கே வந்து சேர்ந்தார். வந்தவர் என்னை நோக்கி, "இன்று கோயிலில் பிராமண அட்டஹாசம் அதிகமாக நடக்கும், நீங்கள் கோயிலிலே பூனூல் போட்டுக் கொள்ளுகிறீர்களா, வீட்டில்தானா?" என்று கேட்டார்.

ஆமென்றேன். வீரப்ப முதலியார் பேசத் தொடங்கினார்: - "பூனூலை எடுத்துப் போடுங்கள். இந்தியா முழுவதும் ஒரே ஜாதி, ஒரே ஆசாரம் என்று செய்துவிட வேண்டும். அதுவரை பிராமண சபை, அப்ராமண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை, முதலியார் சபை இந்த இழவெல்லாம் தீராது. ஒரே கூட்டம் என்று பேசு; பூனூலென்ன, கீனூலென்ன! வீண் கதை!" எறோர்.

பிரமராயர் ஸமாதானப் படுத்தப் போனார். வீரப்ப முதலியார் சொல்லுகிறார், "எல்லாம் தெரியும், தெரியும். யாரோ ஒரு ராஜாவாம். அவன் பூனூலை ஒரு தட்டிலும் பொன்னை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்த்தானாம். பூனூல் கீழே இழுத்ததாம். பொன் மேலே போய் விட்டதாம். இதென்ன மூட்டை! எல்லோரையும் சரிசமானமாக்கு. ஐரோப்பியர்களைப் போல நடப்போம். ஜப்பானிலே அப்படித்தான். ஜாதி வித்தியாசத்தை முதலிலே நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கத் தொடங்கினார்கள். ஜப்பானியரைப் போலே இருப்போம்" என்றார்.

"ஹிந்துக்களைப் போலவெ இருப்போம்" என்று நான் சொன்னேன்.

"எப்போதும் பிரிவும் சண்டையும் இருக்க வேண்டும் என்பது உம்முடைய கக்ஷியோ?" என்று வீரப்ப முதலியார் கேட்டார்.

"வேண்டியவர்களெல்லாம் பூனூல் போட்டுக் கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாக அந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்களெல்லாரும் பூனூல் போட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூனூல் இருந்தாலும் ஒன்று போலே; இல்லாவிட்டாலும் ஒன்று போலே. ஹிந்துக்களெல்லாம் ஒரே குடும்பம். அன்பு காப்பாற்றும், அன்பே தாரகம்" என்றேன்.

"அன்பே சிவம்" என்று பிரமராயர் சொன்னார். இவ்வளவுடன் காலை சபை கலைந்தது.

3 comments:

 1. KMR.Krishnan KMR.Krishnan to me
  show details 10:24 (2 hours ago)
  Dear Gopalji, Namaskaram. I read with delight the two articles on education and aavani avittam.I could imagine the glee on your face when typing the aavani avittam article. They are nice.

  I have sent a portion of my father's write up to classroom 2007 for Independence day publication.

  How are you?

  With respects,
  kmrk

  ReplyDelete
 2. //// வீரப்ப முதலியார் பேசத் தொடங்கினார்: - "பூனூலை எடுத்துப் போடுங்கள். இந்தியா முழுவதும் ஒரே ஜாதி, ஒரே ஆசாரம் என்று செய்துவிட வேண்டும். அதுவரை பிராமண சபை, அப்ராமண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை, முதலியார் சபை இந்த இழவெல்லாம் தீராது. ஒரே கூட்டம் என்று பேசு; பூனூலென்ன, கீனூலென்ன! வீண் கதை!" எறோர்.////

  ////"வேண்டியவர்களெல்லாம் பூனூல் போட்டுக் கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாக அந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்களெல்லாரும் பூனூல் போட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூனூல் இருந்தாலும் ஒன்று போலே; இல்லாவிட்டாலும் ஒன்று போலே. ஹிந்துக்களெல்லாம் ஒரே குடும்பம். அன்பு காப்பாற்றும், அன்பே தாரகம்" என்றேன்.////

  அது தான் பாரதியின் லட்சணம், எந்த செயலுக்கும் உள்ள மூலக் காரணத்தையும் ஆராய்ந்து தெரிந்துக் கொண்டு, அதை சரியாக, அவசியம் உள்ளோர் யாவரும் பயன் படுத்தலாம் என்பான். வீரப்ப முதலியாரின் வீராபதேசம் பார்ப்பதற்கு என்னமோ சமதர்ம போரட்சியாகத் தோன்றினாலும், அது கொடுங்கோன்மையான, கட்டாயப் புரட்சியாகவேத் தோன்றுகிறது. அது வேறெங்கோ உள்ள கோபத்தைக் காண்பிக்கிறது. அன்பு தானே அமரத் தன்மைக்கு வழிவகுக்கும், ஆக, அதை பொதுவில் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற பாரதியின் சிந்தனை... அருமை, அருமை.

  நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 3. பாரதியில் திளைத்தவர்களுக்குத்தான் பாரதி சொல்வது என்ன என்பதை அப்படியே தெரிந்து கொள்ள முடியும். மேலோட்டமாக படிப்பவர்கள் அவனைத் தவறாகக்கூட எடுத்தாள்வார்கள். அன்பர் ஆலாசியம் எந்த அளவு பாரதியில் தோய்ந்தவர் என்பது அவருடைய ஒவ்வொரு எழுதிலும் மிளிர்கிறது. பாரதியை அவர் பார்க்கும் பார்வை என்னைப் புல்லரிக்கச் செய்கிறது. நன்றி ஆலாசியம், என்னைப் போல் ஒரு பாரதி பித்தன் உங்களில் இருப்பது எனக்கு மட்டிலா மகிழ்ச்சி. அயல்மண்ணில் உல்லாசமாக வீற்றிருக்கும் நம் அன்பர் கே.எம்.ஆர். இங்கிருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். பாரதியின் 90ஆவது நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் இல்லாதது வருத்தமே!

  ReplyDelete

You can send your comments